யால வனப்பகுதிக்குள்புலிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது

யால வனப்பகுதிக்குள் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் நடமாடுவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைத்துள்ள தகவல்களை அடுத்து வனப்பகுதியை அண்டியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மீண்டும் பதற்றமடைந்துள்ளனர். கறுப்பு ஆடைகளை அணிந்து ரி 56 ரகத் துப்பாக்கிகளுடன் காணப்படும் இந்தக் குழுவினர் சிறிய அணிகளாக காட்டுக்குள் நடமாடி வருவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து கதிர்காமம், பலட்டுப்பான ஆகிய இராணுவ முகாம்களைச் சேர்ந்த படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கடந்த சில தினங்களாக யால வனப்பகுதியில் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.
இந்தத் தகவல் வெளியானதை அடுத்து யால வனப்பகுதியின் எல்லையில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை அந்தப் பிரதேசத்திற்குச் செல்ல வேண்டாம் எனக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
யால வனத்திற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்போது எஞ்சியிருக்கும் சிரேஸ்ட தலைவர்களான கேர்ணல் ராம் மற்றும் கேர்ணல் நகுலன் தலைமையிலான குழுக்கள் மறைந்திருப்பதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
யால வனப்பகுதியின் எல்லையில் அமைந்திருக்கும் கிராமங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 29ம் திகதி மொனராகலை காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் கொட்டியாகல பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக