JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

செய்தியறிக்கை

செய்தியறிக்கை
கஸக்ஸ்தான் அதிபருடன் சீன அதிபர்
எரிவாயு குழாய் துர்க்மெனிஸ்தானிலிருந்து கஸக்ஸ்தான் வழியாக சீனா வருகிறது

சீனா-துர்க்மெனிஸ்தான் இடையே குழாய் வழியாக எரிவாயு விநியோகம்

துர்க்மெனிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையில் திறக்கப்பட்டுள்ள புதிய எரிவாயுக் குழாய், மத்திய ஆசியாவில் இருந்து கிடைக்கும் இயற்கை வளத்தில் ரஷ்யாவுக்கு இருக்கும் ஏகபோகத்தை மீறும் முதலாவது விடயமாக பார்க்கப்படுகின்றது.

துர்க்மன் பாலைவனத்தில் நடந்த வைபவம் ஒன்றில், சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீளமான குழாயை திறந்து வைத்தார்.

இந்த குழாய் கடந்து வருகின்ற நாடுகளான உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

ரஷ்யாவை தவிர்த்து இந்தப் பிராந்தியத்தில் நடக்கின்ற இந்த மாதிரியான திட்டங்களில் இதுதான் முதலாவதாகும்.

ரஷ்யாவின் பாரம்பரிய செல்வாக்கு மிக்க இடங்களில் சீனா நுழைவதை இது காண்பிக்கிறது.


உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்படும் அமெரிக்கர்கள் மீது இரானில் வழக்கு

குற்றம்சாட்டப்படும் அமெரிக்கர்கள்
இராக்கில் இருந்து இரானுக்குள் எல்லை கடந்து வந்து உளவு பார்ப்பதில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டடப்படும் மூன்று அமெரிக்கார்கள் வழக்கை எதிர்கொள்ளவுள்ளதாக இரானிய வெளியுறவு அமைச்சர் மனோச்சர் மொட்டாகி கூறியுள்ளார்.

சந்தேகப்படும் படியான நோக்கத்துடன் இரானுக்குள் நுழைந்த அவர்கள், இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் கூறினார்.

கடந்த ஜூலையில் குர்திஸ்தான் பகுதியில் மலையேறிக்கொண்டிருக்கும் போது சரியாக எல்லைகள் குறிக்கப்படாதிருந்த ஒரு இடத்தின் ஊடாக தவறுதலாக அவர்கள் எல்லை கடந்துபோய்விட்டதாக, அவர்களது உறவினர்களும், அமெரிக்க அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

இந்த வழக்கு நடத்தப்படுமானால், அது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் தூண்டுதலாக அமெரிக்காவால் பார்க்கப்படும் என்று தெஃரானுக்கான பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.


கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலத்தில் வேலைநிறுத்தம் செய்ய பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆதரவு

பிரிட்டிஷ் ஏர்வேஸின் விமானப் பணி ஊழியர்கள் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் வேலை நிறுத்தம் செய்வதற்கு பெருமளவு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனனர்.

வேலை இழப்புகள் மற்றும் ஊதியக் குறைப்பு ஆகிவற்றை காரணம் காட்டி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் இந்த வேலை நிறுத்தம் 12 நாட்களுக்கு இடம் பெறும் என்று தொழிற்சங்கமான யுனைட்டின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த விமான நிறுவனத்துடன் மேலும் பேச்சு வார்த்தைகள் இடம் பெறுமாயின் அது இந்த வேலை நிறுத்தத்தை தேவையற்றதாக்கிவிடும் என்று தாங்கள் நம்புவதாகவும் அந்தத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தங்கள் விமான சேவையில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் திவால் ஆவதிலிருந்து தடுக்கும் நோக்கில் அது வேலை இழப்புகளை செய்ய அதன் நிர்வாகம் முனைப்பாக உள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் வேலையிழக்க நேரிடும்.


காஷ்மீர் இளம் பெண்கள் மரணம் கொலை அல்ல: புலனாய்வுக் குழு

பெண்கள் உயிரிழப்பைக் கண்டித்து காஷ்மீரில் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன
இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை வெடிக்க காரணமாக இருந்த இரு பெண்களின் மரணம் கொலை அல்ல என்று இந்தியப் புலனாய்வு அதிகாரிகளின் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மத்திய புலனாய்வு நிறுவனம், ஸ்ரீநகரில் இருக்கும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்த இரு பெண்களும் ஒரு வாய்க்காலில் மூழ்கி இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

அந்த இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தனர் என்று மாநில அரசு முடிவு செய்ததை அடுத்து மத்திய புலனாய்வு நிறுவனம் இந்த விசாரனையை மேற்கொண்டது.

இந்த வழக்கின் விசாரணை மூடி மறைக்கப்படுவதாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

இந்த இருவரின் மரணத்துக்கும் பாதுகாப்பு படைகளே காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பொய்யான ஒரு வழக்கை ஜோடித்துள்ளார்கள் என்று கூறியுள்ள மத்திய புலனாய்வு நிறுவனம், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட 13 பேர் இதில் சம்பத்தப்பட்டிருந்தனர் என்று இனம் கண்டுள்ளது.

செய்தியரங்கம்
கோபன்ஹேகன் மாநாட்டுக் கூடம்

கோபன்ஹேகன் மாநாடு: செல்வந்த நாடுகளின் போக்குக்கு வளர்முக மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் எதிர்ப்பு

காலநிலை மாற்றம் தொடர்பாக கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச உச்சமாநாட்டில் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

தமது கரிசனைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன என்று கூறி ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியா சீனா போன்ற வளர்முக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருந்தன.

இந்நாடுகள் தங்களது ஒத்துழைப்பையும் விலக்கிக்கொள்வதாகக் கூறியிருந்தன.

கோபன்ஹேகனில் ஏற்படும் புதிய உடன்படிக்கை கியோட்டா ஒப்பந்தங்களை ஒட்டி அமைய வேண்டும் என்று இந்த நாடுகள் கோருகின்றன.

கியோட்டோ ஒப்பந்தப்படி புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்கும் பொறுப்பு தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மீதே உள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளின் கோரிக்கைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்கிற உத்திரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.

புவியை வெப்பமடையச் செய்யவதை கணிசமான அளவில் குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு உடன்பாடு எட்டப்படுவதற்கு மிகக் குறைந்த அளவான கால அவகாசமே உள்ளது என அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இவ்விவகாரம் தொடர்பில் கோபன்ஹேகன் மாநாட்டை அவதானித்துவரும் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் சலீம் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


நீதிபதி தினகரனை பதவி நீக்கக் கோரி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் மனு

நீதிபதி பி.டி.தினகரன்
ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள கர்நாடக மாநில தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீது குற்றம்சாட்டி பதவியகற்றும் செய்யும் 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கை எடுப்பதற்கான மனு ஒன்றை இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 76 பேர் கையளித்துள்ளனர்.

பாரதீய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், அதிமுக போன்ற கட்சிகளின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள இந்த மனு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி பி.டி.தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தேர்வுசெய்யப்படுவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு வழங்கியிருந்த பரிந்துரையை இந்திய அரசு அண்மையில் நிராகரித்திருந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வலுவிருப்பதால் அவர் உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக நீடிக்கக்கூடாது என்று மகஜர் கையளித்துள்ள நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து இந்து நாளிதழ் சட்ட விவகாரச் செய்தியாளர் ஜே.வெங்கடேசன் வழங்கும் விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


குறைவான ஊதியம் பெறுவோரால் சமூகத்திற்கு கூடுதல் பயன்; வெகுவான ஊதியம் பெறுவோரால் சமூகத்திற்கு இழப்பு: பிரிட்டனில் புதிய ஆய்வு

மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளிகளால் சமூகத்திற்கு நல்ல பலன் கிடைப்பதாகக் அறிக்கை கூறுகிறது.
பங்கு சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டு வங்கி ஊழியர்களைக் காட்டிலும் மருத்துவமனை ஊழியர்களும், குப்பை அள்ளுபவர்களும் சமூகத்திற்கு அதிகம் பயன்தரக்கூடியவர்களாக இருக்கின்றனர் என பிரிட்டனின் இடதுசாரி பொருளாதார ஆய்வு மையம் ஒன்று கூறுகிறது.

குறிப்பிட்ட ஒரு வேலையால் சமூகம் பெறுகின்ற பயன் என்ன என்று ஒரு புதிய வகையில் மதிப்பிடும்போது இவ்வாறான முடிவு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு துறைகளையும் சேர்ந்த ஊழியர்களால் சமூகம் பெறுகின்ற பயன் என்ன? அந்த ஊழியர்கள் பெறுகின்ற சம்பளம் என்ன? என்பவற்றை ஒப்பிட்டு தி நியூ எகனாமிக் பவுண்டேஷன் என்ற ஆய்வு மையம் மதிப்பீடு ஒன்றைச் செய்துள்ளது .

சுகாதாரம் அற்ற ஒரு மருத்துவமனையால் பரவக்கூடிய நோய்களினால் சமூகத்துக்கு ஏற்படும் செலவை கருத்தில் கொண்டு பார்க்கையில், அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளிக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு டாலர் சம்பளம், பத்து டாலர்கள் மதிப்புள்ள பயனை சமூகத்துக்கு அளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்காளர்கள் பெறும் ஒரு டாலர் சம்பளத்துக்கு சமூகம் 47 டாலர்களை இழப்பதாகக் கூறப்படுகிறது
முதலீட்டு வங்கி வர்த்தகர் ஒருவர் பெரும் சம்பளம் பெறுபவர் என்றாலும், உலகப் பொருளாதாரமே பாதிக்கப்படுவதற்கு வழிவகுத்திருந்த வர்த்தக சந்தை ஸ்திரத்தமை குலைவுக்கு இவர்களும் ஒருவகையில் காரணமாய் இருந்துள்ளனர். அவ்வகையில் பார்க்கையில், இந்த வங்கி வர்த்தகர்கள் பெற்ற ஒவ்வொரு டாலர் சம்பளத்துக்கும் சமூகம் ஏழு டாலர்கள் மதிப்பை இழந்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.

சமூகம் நிஜமாகவே பெற்ற பயனின் மதிப்பு இவ்வாறு இருக்கும்போது, இவர்களுக்கான ஊதியத்தில் மட்டும் ஏற்றத்தாழ்வு ஏன்? என இந்த அமைப்பு கேள்வி எழுப்புகிறது.

இது பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


விளையாட்டரங்கம்

  • அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அணிகள் இழந்துள்ளன.
  • 2012 ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது, டென்னிஸ் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • உலக குத்துச் சண்டை ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை உக்ரைன் நாட்டின் விடாலி கிளிட்ஸ்க்ஷோ தக்கவைத்துக்கொண்டுள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010