சிவாஜிலிங்கத்தின் முடிவு த.தே.கூ. உடன் தொடர்புடையதல்ல : அரியநேத்திரன்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையதல்ல என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ள போதிலும் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் (டெலோ) சுயேட்சையாகப் போட்டியிட தீர்மானித்து இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள இந்த முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையதல்ல என அரியநேத்திரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
ஏற்கனவே இதற்கு முன்னோடியாக டெலோ அமைப்பில் மத்திய குழு உறுப்பினர் பதவி உட்பட தான் வகித்து வந்த முக்கிய பதவிகளிலிருந்து விலகிக் கொள்வதாக அக்கட்சிக்கு நேற்று அவர் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
அதேவேளை இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் பிரசன்னா இந்திரகுமாரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இது தொடர்பாக நாளை தமது கட்சி கூடி ஆராயவிருப்பதாகப் பதிலளித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக