பொன்சேகாவின் வெற்றி கடவுளாலும் மக்களாலும் முடிவு செய்யப்பட்ட விடயம்-ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச கூறுகிறார்

சந்தர்ப்பவாத அரசியலுக்காக கட்சி மாறும் அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகள் என்று அழைக்க தகுதியற்றவர்கள். நல்லா ட்சி, ஜனநாயகம், தேசிய ஒற்றுமை போன்றவற்றுக்கு எதிரான சூத்திரதாரிகளை பொது மக்கள் இனங்கண்டுக் கொள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பமாக அமையும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
யார் கட்சி மாறினாலும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றி இந்த நாட்டு பொது மக்களாலும் ஆண்டவனாலும் முடிவுச் செய்யப்பட்ட விடயம் எனவும் அவர் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தெளிவுப்படுத்துகையிலேயே சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவர் தொடர்ந்தும் கூறுகையில்,
தற்போது இலங்கை அரசியலில் கட்சி தாவும் நிகழ்வுகள் சூடுபிடித்துள்ளன. எஸ்.பி. திசாநாயக்க ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்திற்கு தாவியுள்ளமை ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து அரசியல் சுயநலத்திற்காக கட்சிகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகளை பொது மக்கள் இனங்கண்டு எதிர்வரும் தேர்தல்களில் பாடம் புகட்ட வேண்டும்.
கொள்கை இல்லாத அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தேசிய அரசியலின் சீரழிவையே வெளிக்காட்டுகின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும். எதிரணியில் ஒன்று சேர்ந்துள்ள அரசியல் கட்சிகளின் நோக்கங்கள் வேறு. ஆனால் இலக்கு ஒன்று என்பதை பொது மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். கட்சி மாறுவதால் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியினை தடுத்து விட முடியாது. இனி வரும் தேர்தல்களில் அரசாங்கத்தின் அடக்குமுறைகள் செல்லுபடியாகாது. தேர்தல் சட்டங்கள் மீறப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான போராட்டங்களை ஜே.வி.பி. முன்னெடுக்கும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக