அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு பின்னர் சபை நடவடிக்கை இடைநிறுத்தம்
.jpg)
பாராளுமன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஒருமாதத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை இறுதி தீர்மானம் எட்டப்படும் என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி, திகதி குறிப்பிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவிருக்கின்றது. அன்று அவசரகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும். அவசரகாலச்சட்டத்தை நீடித்துக்கொண்டதன் பின்னர் ஜனவரி இரண்டாம் வாரம் வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் இன்று நடைபெறுகின்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற நடவடிக்கைகளை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரையிலும் தற்காலிகமாக இடைநிறுத்திவைப்பதற்கு அரசாங்கம் கலந்தாலோசித்த போதிலும் அவசரகாலச்சட்டத்தை நீடித்துக்கொள்ளவேண்டியிருப்பதனால் அடுத்தமாதம் வரையிலும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற பிரதான இரு வேட்பாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து ஆளும் எதிர்க்கட்சிகள் தங்களது பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற, மாகாண, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திற்கு பின்னர் ஆரம்பித்து மாலை 3.30 மணிவரை நடைபெறும். அதற்கு பின் போக்குவரத்து அமைச்சுக்கு 475 கோடிரூபாவை ஒதுக்கிக்கொள்வதற்கும், விவசாய அபிவிருத்தி அமைச்சுக்கு 5 கோடி ரூபாவை ஒதுக்கிக்கொள்வதற்குமான குறைநிரப்பு பிரேரணைகள் மீதான விவாதம் மாலை 4.30 மணிவரை நடைபெறும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக