JKR. Blogger இயக்குவது.

வியாழன், 3 டிசம்பர், 2009

எந்தவொரு வேலைத் திட்டத்தினதும் இறுதி பயனாளியாக பொதுமக்களே இருக்க வேண்டும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ


எந்தவொரு வேலைத்திட்டத்தினதும் இறுதி பயனாளியாக பொதுமக்களே இருக்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும். தேசிய கொள்கையின் அடிப்படையில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இந்த நோக்கத்திலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை ஆரம்பமான ஆசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: எதிர்கால பொருளாதார அபிவிருத்திப் பயணமானது முழுமையாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திலேயே தங்கியுள்ளது என்பதை எமது அரசாங்கம் நம்புகின்றது. 2012ஆம் ஆண்டாகும் போது இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் 60 வீதம் முன்னேற்றத்தை அடையும் என எதிர்பார்க்கின்றோம். தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் கடந்த 2004ஆம் ஆண்டு நாங்கள் 4 வீதத்தை அடைந்திருந்தோம். தற்போது அதனை 30 வீதமாக உயர்த்தியுள்ளோம். இதுவரை காலமும் வரையறுக்கப்பட்ட தரப்பினருக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஆங்கில மொழி அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பனவற்றை கிராம மக்களிடையே கொண்டு செல்வது எமது நோக்கமாகும். மூன்று தசாப்தகாலமாக நிலவிய பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளதால் எமது நோக்கத்தை விரைவாக மேற்கொள்ள முடியும்.

ஆரம்பிக்கப்படும் எந்தவொரு வேலைத்திட்டத்தினதும் இறுதிப் பயனாளியாக பொதுமக்களே இருக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும். எம்மால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய கொள்கையின் அடிப்படையிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இதனூடாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அபிவிருத்தி துறைக்கு பிரவேசித்துள்ள இலங்கைக்கு ஈ ஏசியா போன்ற வேலைத்திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எதிர்வரும் தசாப்த காலத்திற்குள் அனைத்து பிள்ளைகளுக்கும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுக்க நாங்கள் மிகப் பெரிய முதலீட்டை செய்யவுள்ளோம். வடக்கிலிருந்து தெற்கிற்கும் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் என அனைத்து மக்களும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒற்றுமையுடன் தொடர்புகளை பேணுவார்கள். அதுதான் எமது இறுதி நோக்கமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010