சுகோய் போர் விமானத்தில் பறக்கப் போகிறார் பிரதீபா

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அடுத்த மாதம் சுகோய் போர் விமானத்தில் பறந்து பயணிக்கவுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சுகோய் போர் வி்மானத்தில் பறந்து புதிய சாதனை படைத்தார். போர் விமானம் ஒன்றில் முதன் முறையாக பறந்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் கலாமுக்குக் கிடைத்தது.
இந்த வரிசையில் தற்போது பிரதீபா பாட்டீலும் சுகோய் போர் விமானத்தில் பறக்கவுள்ளார்.
சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் அவர் பறக்கத் திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் புனேவில் உள்ள லோஹேகான் விமானப்படைத் தளத்திலிருந்து இந்த பயணம் இருக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், நவம்பர் 25ம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், சுகோய்-30 போர் விமானத்தில் பறப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் சுகோய் -30 போர் விமானத்தில் பறந்து அனைவரையும் வியப்படைய வைத்தார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அவர் வானில் பறந்தார்.
இந்த வரிசையில் தற்போது பிரதீபாவும் சேரவுள்ளார். விமானத்தில் பறப்பதற்கு முன்னர் குடியரசுத் தலைவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும். பிரதீபா பாட்டீலுக்கு தற்போது 74 வயதாகிறது. மருத்துவ பரிசோதனையில் அவர் பறப்பதற்குரிய முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிய வந்தால் மட்டுமே பறக்க அனுமதிக்கப்படுவார்.
போர் விமானங்களில் பறந்த பெண்கள் பட்டியல் மிகச் சிறியதே. பிரதீபா பாட்டீல், போர் விமானத்தில் பறந்தால், இந்தப் பட்டியலில் அவரும் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக