மணி விழா- ரஜினிக்கு காஞ்சியில் 106 சண்டி ஹோமம்

60 வது பிறந்த நாள் காணும் ரஜினிக்காக 106 சண்டி ஹோமங்களை காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நடத்துகிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.
ரஜினி பிறந்த நாள் விழாவை வருகிற 12-ந்தேதி சிறப்பாகக் கொண்டாட அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு அவருக்கு 60 வது பிறந்தநாள். எனவே எப்போதும் இல்லாத அளவு சிறப்புடன் கொண்டாட வேண்டும் என தமிழகம் முழுவதும் மன்றத்தினரும் தனிப்பட்ட நலம் விரும்பிகளும் பல ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
பெரும்பகுதி ரசிகர்கள் தங்கள் தலைவரின் பிறந்த நாளை இலவச உதவிகள் மற்றும் நற்பணிகள் செய்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
ரஜினி நடித்த தர்மதுரை படத்தை தயாரித்த ராமநாதன் ரஜினி பிறந்த நாளன்று காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் 106 சண்டி ஹோமம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். 23-ந்தேதி இந்த ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதனே முன்னின்று நடத்தி வருகிறார்.
ரஜினியும் அவர் குடும்பத்தினரும் ஆரோக்கியமாக வாழ வேண்டி இந்த ஹோமம் நடத்தப்படுவதாக காமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியலில் ரஜினி வெற்றிகள் பெற வேண்டும் என்பதும் இந்த யாகத்தின் இன்னொரு நோக்கம் என்கிறார்கள்.
இது தவிர, பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர் ரசிகர்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏராளமான இடங்களில் ரத்த தான முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வெளிமாநிலங்களிலும் ரஜினி பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக