JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 1 நவம்பர், 2009

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவாயிரம் பேர் மீளக்குடியமர்வு


முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 20 இற்கும் மேற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் 3000 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் தொகுதியாக 297 குடும்பங்களைச் சேர்ந்த 1007 பேர் இப்பகுதிக்கு மீளக் குடியமர்வதற்காக மனிக்பாம் முகாம் தொகுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மூன்று கட்ட மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதில் 3000 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகாம்களில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் உடனடியாக அனிஞ்சியன்குளம் அரசினர் பாடசாலை, பாலிநகர் மகாவித்தியாலயம், மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய 3 பெரிய பாடசாலைகளில் தங்க வைக்கப்படுகி்ன்றார்கள் என்றும், இவர்கள் உடனடியாகவே தமது வீடுகள், காணிகளைச் சென்று பார்வையிட்டு அவற்றைச் சுத்தம் செய்து தேவைப்பட்டால், தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கும் அனுமதிக்கப்பட்டு உடனடியாகவே அங்கு சென்று குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செல்கின்றவர்களுக்கு கத்தி, கோடரி, மண்வெட்டி உள்ளிட்ட விவசாய உபகரணங்கள், கூரைத்தகடுகள், கூரை விரிப்புகள், சமையலறைப் பாத்திரங்கள், 2 வாரத்திற்கான உலருணவுப் பொருட்கள் என்பனவும், 5 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் உடனடியாக வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவையடுத்து, மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் உடனடியாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010