கிழக்கு மக்களின் ஜனநாயகக் குரலை நசுக்கும் ஒரு செயலே ரகுவின் படுகொலை: முதலமைச்சர்

கிழக்கு மாகாண மக்களின் ஜனநாயக குரலை நசுக்க நினைத்தவர்களின் செயலே தமது கட்சியின் முன்னாள் தலைவரான ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் படுகொலை" என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபனின் முதலாவது ஆண்டு நினைவு நாள் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் கட்சியின் அமைப்பாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
"கிழக்கு மாகாண மக்கள் அரசியலில் மட்டுமல்ல, சகல துறைகளிலும் முன்னணி வகிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்பட்டவர் எமது மறைந்த தலைவர் குமாரசாமி நந்தகோபன் என்பதை எவரும் மறந்து விட முடியாது.
எமது மக்களின் அரசியல் தனித்துவத்தை தேசிய மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக அவரது தூர நோக்கு சிந்தனையில் உருவானதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகும்.
அந்த சிந்தனைவாதி, தீர்க்கத்தரிசி, கிழக்கு மக்களின் ஜனநாயகத்தை விரும்பாதவர்களினால் படுகொலை செய்யப்பட்டார்" என்று குறிப்பிட்ட அவர், "அன்னார் கண்ட லட்சியத்தினை நிறைவேற்ற சகலரும் அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும்"என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் சமூக,சமய மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக