ஜோன் ஹோம்ஸ்-தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கைகான மூன்று நாள் வியததை மேற்கொண்டு நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வந்தடைந்த ஐ.நா. வின மனிதாபிமான பணிகளுக்கான உதவி ஆணையாளர் ஜோன் ஹோம்ஸ் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் சுமார் 45 நிமிடங்கள் இடம் பெற்ற இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.ஸ்ரீகாந்தா ,செல்வம் அடைக்கலநாதன் ,பா.அரியநேத்திரன் ,டாக்டர் வில்லியம் தோமஸ் தங்கத்துரை மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் வவுனியாவிலுள்ள இடைத்தங்கல முகாம்களுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாகவும் ,அங்குள்ள நிலமை தொடர்பாகவும் இச் சந்திப்பின் போது விரிவாக எடுத்துக் கூறியதுடன் அங்கு இடம் பெயர்ந்து தங்கியிருக்கும் குடும்பங்களின் துரிதமான மீள் குடியேற்றத்தின் அவசியததை வலியுறுத்தினர்.
யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறினாலும் வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் தமிழ் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக் கூடிய முழுமையான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என்பதை இச்சந்திப்பின் போது ஐ.நா. பிரதிநிதியிடம் தாம் விளக்கியதாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவி இராசையா துவாரகா அண்மையில் கைதான சம்பவம் உட்பட சில சம்பவங்களை தாம் சுட்டிக் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பிரதேசங்களில் தொடரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவரது கவனத்திற்கு தாம் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறும் நிலையில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள மற்றும் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சகலருக்கம் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
சிறைச்சாலைகளில் அவசரகால சட்ட விதிகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் ஆகியன தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இச்சந்திப்பின் போது முன் வைத்துள்ளது.
இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு தாம் மேற்கொண்ட விஜயத்தையும் நேற்று மேற்கொண்ட விஜயம் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்த ஜோன் ஹோம்ஸ் அகதிகளின் மீள் குடியேற்றத்தில் தற்போது முன்னேற்றம் இருப்பதாகவும் கணிசமான குடும்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்பாக மீள் குடியேற்றப்படுவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக