ததேகூ எம்.பிக்கள் அபிவிருத்திக்குத் தடையாக இருக்கப் போவதில்லை: அரியநேத்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்கு ஒரு போதும் தடையாக இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை" என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
நேற்று நடைபெற்ற வெல்லாவெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார் அவர்,
"அபிவிருத்தி என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பு இடம்பெறுமானால் அதற்கு இடமளிக்க முடியாது" என்றும் குறிப்பிட்டார்.
வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அரியநேத்திரன்,
"கடந்த காலங்களில் எமது மாவட்டத்தில் நிலவிய சூழ்நிலை ,எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்நோக்கிய பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் காரணமாகவே கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.
தற்போது சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.அதனை சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் காணிகளையும் அபகரிக்க முற்படுகின்றது. இதற்கு அனுமதிக்க முடியாது.
ஏற்கனவே எமது பகுதியில் வாழ்ந்து இடம்பெயர்ந்தவர்கள் எந்த இனமாக இருந்தாலும் மீள்குடியேறுவதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் வெளியாரின் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு இடமளிக்க முடியாது.
குறிப்பாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் கெவலியாமடுவிலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளிலும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் உள்ள காணிகளிலும் அத்துமீறி குடியேற்றத்திற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இக்குடியேற்றம் உட்பட கிழக்கு மாகாணத்தில் இப்படியான குடியேற்றங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாவட்ட செயலாளர்களையும் கேட்டுள்ளது." என்றும் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் வெல்லாவெளி பிரதேச சபைத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தனர்.
சுமார் மூன்று வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டது, இதுவே முதலாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக