நாளை மறுதினம் பாடசாலை சீருடை விநியோகம் : முதலில் யாழ்குடாவுக்கு அனுப்ப நடவடிக்கை

அரசாங்க பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்குரிய 2010 ஆம் ஆண்டுக்கான இலவச பாடசாலை சீருடை விநியோகம் நாளை மறுதினம் (06ஆம் திகதி) முதல் ஆரம்பமாகின்றது. இதன் முதல் தொகுதி ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:"கடந்த மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஏறக்குறைய நாற்பது லட்சம் மாணவர்களுக்கு ரூபா.3000 மில்லியன் செலவில் இலவச பாடநூல்களை விநியோகிக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது நாற்பது லட்சம் மாணவர்களுக்கு ரூபா 1200 மில்லியன் செலவில் நான்கு வகையான, 65 லட்சம் சீருடைகளை விநியோகிக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதிலுள்ள ஒன்பது மாகாணங்களில் அமைந்துள்ள 92 வலய கல்வி காரியாலயங்களுக்கு சீருடைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
நாளைமறுதினம் 06 ஆம் திகதி 7 லட்சம் ரூபா போக்குவரத்து செலவில், இரண்டு லட்சம் சீருடைகள் அடங்கிய முதல் தொகுதி ஏ-9 வீதியூடாக யாழ். வலயக் கல்வி காரியாலயத்துக்கு வைபவ ரீதியாக அனுப்பி வைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது.
சீருடைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள மொத்த துணியின் அளவு பத்து மில்லியன் மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை உத்தியோகபூர்வமாக விநியோகிக்கும் ஆரம்ப வைபவத்தை இம்முறை யாழ்ப்பாணம் வேம்படி மகா வித்தியாலயத்தில் டிசம்பர் 07 ஆம் திகதி நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அன்றைய தினத்திலேயே சீருடைகளும் மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளன." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக