இராணுவத்தினரால் வவுனியாவில் தமிழ்ச் சிறுமிகள் கற்பழிப்பு

வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர், தமிழ்ச் சிறுமிகள் பலரை கற்பழித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14, 15, மற்றும் 16 வயதான மூன்று தமிழ்ச் சிறுமிகள் தாங்கள் கற்பழிக்கப்பட்டதை வவுனியா நீதிபதி முன் கடந்த அக்டோபர் மாதம் கூறியுள்ளனர்.
பல கற்பழிப்புகள் தடுப்பு முகாம்களின் வலயம் 2 மற்றும் வலயம் 3 ஆகியவற்றில் நடந்தாலும், வவுனியா மருத்துவமனையில் வைத்து 14 வயதான மனநிலை குன்றிய சிறுமி ஒருவரையும் ராணுவம் கற்பழித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.
புலிகள் இயக்கத்தில் இருந்ததாக கூறப்பட்ட 17 வயதான சிறுமி ஒருவரை புலனாய்வு பிரிவினர் கற்பழித்துள்ளதோடு, அச்சிறுமியை புலிகளை அடைத்து வைத்துள்ள சிறைக்கு அனுப்புவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
பின்னர் அச்சிறுமி தடுப்பு முகாமுக்கு அனுப்பட்டார். அந்த தடுப்பு முகாம்களில் உள்ள 17 மற்றும் 19 வயதான சிறுமிகளும் ராணுவ அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த ஜூலை மாதத்தில் காயப்பட்ட பெண்கள் பதவியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த பெண்களை சிங்கள ராணுவத்தினர் பார்க்க வேண்டும் என்பதற்காக, சிங்கள் தாதியர் அப்பெண்களை நிர்வாணமாக்கி ஹோஸ் பைப்புகளைப் பயன்படுத்தி குளிப்பாட்டியதாக நேரில் கண்ட சாட்சியின் மூலம் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமது கணவன்மாரை ராணுவம் எங்கே தடுத்து வைத்துள்ளார்கள் எனத் தெரியாமல் இன்னல் பட்டுக்கொண்டிருந்த பல பெண்களை, மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த உயர் பணியாளர் ஒருவர் தகாத முறையில் பயன்படுத்தியதாகவும் பல தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மே மாதத்தில் தடுப்பு முகாமுக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட மூன்று தமிழ்ப்பெண்களின் உடல்கள் வவுனியா மருத்துவமனையில் கையளிக்கப்பட்டன. அந்த உடல்களில் கடித்ததற்கான காயங்களும், பாலியல் துன்புறுத்தலுக்கான அறிகுறிகளும் இருந்ததாக சாட்சிகள் கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக