JKR. Blogger இயக்குவது.

புதன், 4 நவம்பர், 2009

யாழ்ப்பாணத்திற்கு விரும்பியவாறு பிரயாணம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை


யாழ்ப்பாணத்திற்கும் வெளிமாவட்டங்களுக்கும் இடையில் விமானம் மூலமாகவோ, கப்பல் மூலமாகவோ அல்லது ஏ-9 வீதியூடான தரை மார்க்கமாகவோ வசதிக்கேற்ப யாழ். பயணிகள் பிரயாணம் மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்."

இவ்வாறு யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வருபவர்கள் தாங்கள் எந்த மார்க்கத்தில் வந்தார்களோ, அதே மார்க்கத்திலேயே திரும்பிச் செல்ல வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளதையடுத்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலமாக வந்தவர்கள் விமானம் மூலமாகவும், கப்பலில் வந்தவர்கள் கப்பலிலும், ஏ-9 வீதிவழியாக பஸ்களில் வந்தவர்கள் பஸ்களிலுமே அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டும். இதற்கேற்ற வகையில் பிரயாண வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இவ்வாறு பிரயாணம் செய்கையில் பயணிகளுக்கு சில வேளைகளில் நேர விரயமும், அதிக பணச் செலவும், அலைச்சலும் ஏற்படுவதாக யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தலைவர் சிவஞானம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக விமான சேவைகள் முன்னறிவித்தலின்றி ரத்துச் செய்யப்படும்போதும், கால நிலை சீரின்மை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கப்பல் சேவைகள் ரத்துச் செய்யும்போதும், இத்தகைய அசெளகரியங்களையும் சிரமங்களையும் பயணிகள் எதிர்நோக்க நேரிடுவதாகவும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே பிரயாணிகள் தமது வசதிக்கேற்ப எந்த வழியிலும் பிரயாணம் செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

ஏ9 வீதியூடாக நடைபெற்று வருகின்ற பஸ் சேவையில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், சொகுசு பஸ்களுக்கான கட்டணத்தையும் குறைத்து யாழ்.பயணிகளின் பிரயாணத்தைக் கட்டுப்பாடற்ற வகையில் மேற்கொள்வதற்கு வசதி செய்ய வேண்டும் என்றும் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010