இலங்கை: இந்திய தூதரகமும் 'முள்வேலி'க்குள்தான்!

கொழும்பு: தமிழர்களை முள்வேலிச் சிறைக்குள் வைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம் என்றால், கொழும்பிலுள்ள இந்திய தூதரகமோ தனக்குத் தானே பெரிய முள்வேலி போட்டுக் கொண்டு, எந்த செய்தியும் வெளியே தெரிந்து விடாமல் தடுத்து வருவதாக இலங்கை பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அந்த நாட்டில் வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக் கூடியது சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்கள்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளதாம்.
இந்தியத் தூதராக கோபால் காந்தி பொறுப்பேற்கும் வரை அதன் செயல்பாடுகள் இந்தியப் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஓரளவு வெளிப்படையாகத்தான் இருந்து வந்தது. சிவசங்கர மேனன் தூதராக இருந்தபோது, பத்திரிகையாளர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. செய்திகளை அளிக்கும்போது, பெயர் வெளியிட வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்வார்.
கோபால் காந்தி சிறப்பாக உபசரித்தாலும், தகவல்களை ஓரளவுதான் கூறுவார். ஆனால், டெல்லியில் இருந்து அமைச்சர்களோ, அதிகாரிகளோ வந்தால் தகவல் நிச்சயமாகத் தெரிவிக்கப்படும்.
நிருபமா ராவ் தூதரான பின்னர்தான் நிலைமை மிக மோசமாகிவிட்டதாம்.
தன்னைப் பாராட்டி வரும் செய்திகளை விரும்பும் அவர், எதிர்கருத்து வெளியிடுவோரை கடுமையாகச் சாடுவாராம்.
இதனால் இலங்கைப் பத்திரிகையாளர்களுடன் இவருக்கு எப்போதும் நல்லுறவே இருந்ததில்லை என்கிறார்கள்.
'இந்தியத் தூதரகத்தின் ஊதுகுழலாகவே இந்திய பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்' என்பது பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு.
அலோக் பிரசாத்தின் அலம்பல்...
இந்த நிலையை மேலும் மோசமாக்கிய 'பெருமை' அலோக் பிரசாத்துக்கு உண்டு. அவர் பத்திரிகையாளர்களை அடியோடு தவிர்ப்பதும், தேவையற்ற வெறுப்பைக் கக்குகிறாராம். இலங்கையில் சீனா செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வந்த செய்திகளை முழுமையாக மறைத்துள்ளார் அலோக் பிரசாத்.
வடக்குப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இரண்டு இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், காரணம் ஏதும் இல்லாமல் அதுபற்றிய அனைத்து செய்திகளையும் மறைத்துவிட்டாராம். ஆனால் கண்ணிவெடி விவகாரத்தை இந்திய மற்றும் இலங்கை அரசுகளே வெளிப்படையாக அறிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.
பாஸிடிவ் செய்திகளைக் கூட வெளிவிடாமல் தடுப்பதில் எக்ஸ்பர்ட் அலோக் பிரசாத். விடுலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இந்தியா கட்டிய 2 மருத்துவமனைகளில் இந்திய டாக்டர்கள் பலரும் பணிபுரிந்த விஷயம் பற்றி நல்லவிதமாக எழுத முயன்ற பத்திரிகையாளர்களைக் கூட விரட்டிவிட்டார் அலோக் பிரசாத்.
இதனால் வந்திருந்த அனைத்து டாக்டர்களுமே உளவாளிகள்தானோ என்ற சந்தேகத்துடனே அனைத்து செய்திகளும் வெளிவந்தன.
தமிழகத்தைச் சேர்ந்த 10 எம்.பிக்கள் கொண்ட குழு அண்மையில் இலங்கை முகாம்களைப் பார்வையிட வந்த போது இந்தியத் தூதரகம் செய்தது கேவலத்தின் உச்சம். அவர்களின் பயணத் திட்டத்தை ஏதோ தேர்தல் அறிவிப்பு மாதிரி முதல்வர் கருணாநிதி இங்கே சொல்லிக் கொண்டிருக்க, இலங்கை பத்திரிகையாளர்களுக்கு அதுபற்றி எந்த விவரமும் சொல்லப்படவில்லை.
வந்திருந்த எம்பிக்களிடமும், "கட்டாயம் பத்திரிகையாளர்களிடம் நீங்கள் பேசவே கூடாது என்பது இந்திய அரசின் உத்தரவு" என்று கூறி வாயடைக்கச் செய்துவிட்டாராம் அலோக் பிரசாத். அதையும் மீறி திருமாவளவன் ஒரு சில நிருபர்களிடம் பேச, அவரை தடுத்திருக்கிறார் டி.ஆர்.பாலு.
அட அவ்வளவு ஏன்... இப்போது மகிந்த சகோதரர்களுக்கு பொன்சேகாவால் நெருக்கடி என்று தெரிந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு அடுத்த விமானமேறினாரே, நிதி அமைச்சர் பிரணாப்.... இந்த தகவல்கூட, யாருக்கும் சொல்லப்படாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்ததாம்.
ஆனால் மற்ற நாட்டுத் தூதரகங்கள் அப்படி இல்லை. தங்கள் நாட்டிலிருந்து உயர் அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் வரும்போது முறையாக அறிவித்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகின்றன.
ஆனால் நமக்கோ மடியில் எக்கச்சக்க கனம் போலிருக்கிறது... அதனால்தான் பத்திரிகையாளர்களைக் கண்டதும் ஜர்னோஃபோபியா'வில் சிக்கியவர்கள் மாதிரி ஆகிவிடுகிறார்கள் இந்திய தூதரக அதிகாரிகள்!!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக