JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் நிலை!


- ஆர்.சிவகுருநாதன்

ஐக்கிய தேசியக்கட்சி முக்கி முக்கிப் பிரச்சாரம் செய்தும், அதன் ‘ஐக்கிய தேசிய முன்னணி’ கூட்டணியில், ஐக்கிய தேசியக்கட்சி யின் பழைய தோஸ்த்துகளான ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர, மனோகணேசன் ஆகியோரைத் தவிர வேறு புதிய முகங்கள் எவரும் இணைந்து கொள்ளவில்லை. சிலவேளைகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ‘அண்டர்கிரவுண்டாக’ இணைந்திருக்கின்றனரோ தெரியவில்லை!

எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவர்கள் ஆளுக்காள் கைகோர்த்து பேப்பர்களுக்கு ‘போஸ்’ கொடுத்த கையோடு, ஹக்கீமும், மனோகணேசனும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சம்பந்தன் கோஷ்டியினரை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தமுறை இந்தச் சந்திப்பில் ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த மூன்று தலைவர்களின் கட்சிகளின் ஆதரவாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும், ஐக்கிய தேசியக்கட்சியின் அடிவருடிகளான ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோருடனும் கூட்டு வைப்பதை அடியோடு எதிர்ப்பதால், அவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டனர் என தலைநகரில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் சந்திப்பை நிகழ்த்திய மூன்று கட்சியினரும், ஆனந்தசங்கரி தலைமையிலான மூன்று கட்சி அணியினரையும் எப்படியும் வளைத்துப் பிடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். ஏனெனில் ஆனந்தசங்கரி தலைமையிலான குழுவினர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டீ.பி கட்சியினருடன் முரண்டு நிற்பதால், அவர்களை எப்படியும் வளைத்துப்போட்டு, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை மொத்தமாக எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு தாரைவார்ப்பது தான் இதன் திட்டமாகும். இந்தத் திட்டத்தை மற்றவர்கள் ‘மணந்து’ பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கணக்காக தமது கூட்டணி, தேர்தலை நோக்கமாகக் கொண்டது அல்ல என அறிக்கை விடுத்து, தமது உண்மையான நோக்கத்தையும் போட்டு உடைத்துள்ளனர்.

அதன் பின்னர், பாராளுமன்றத்தில் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்துக்கு பதிலாக சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பின் போது, தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்துள்ளது. இந்த இடைக்கால கணக்கறிக்கையின் நிதி ஒதுக்கீடுகள், வடக்கு கிழக்கில் இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது, பொருளாதார அபிவிருத்தி செய்வது போன்ற விடயங்களை உள்ளடக்கி இருந்த போதிலும், வழக்கம் போல தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்கள் நலனை முன்னிலைப்படுத்தாது, ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் நலன்களுக்காக செயல்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இந்தப் போக்கு, அது எந்த திசைவழியில் பயணிக்க முற்படுகின்றது என்பதை கோடுகாட்டி நிற்கின்றது. கடந்த 60 ஆண்டுகளாக இதே ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவு நிலையை தமிழ் தலைமைகள் பின்பற்றியதால் தான், தமிழ் மக்கள் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனர் என்ற உண்மையை இன்றைய தமிழ்த்தலைமையும் உணரவோ, மாற்றியமைக்கவோ தயாரில்லை என்பதைத்தான் அவர்களின் தற்போதைய போக்கும் தெளிவுற நிரூபித்து நிற்கிறது.

ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமையின் ஒருபகுதியினரின் இந்த தேசிய விரோதப்போக்கை, தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் விரும்பவில்லை எனத் தெரியவருகிறது. யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவநாதன் கிஷோர், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சில கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தலைமையின் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவான போக்கையும், தேசிய விரோதப் போக்கையும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களைப் பொறுத்த வரையில் இன்றைய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, இடம் பெயர்;ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்தி, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு என்பனவற்றை நிறைவேற்ற வேண்டும் என எண்ணுகின்றனர்.

கடந்த காலங்களில் இனிப்பாகப் பேசிவிட்டு, நயவஞ்சகமாக ஏமாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியை விட, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் உள்ள சிக்கல்களை வெளிப்படையாகக் கூறும் இன்றைய அரச தலைமை நம்பகமானது என அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றனர். எனவே “சோற்றை விட சுதந்திரம் தான் பெரிது” என்ற தமிழ் தேசியவாதத் தலைமையின் வழமையான வாய்ப்பாட்டை, தமிழ் தேசியக்கூட்டமைப்பிலுள்ள இந்த ‘இளம் துருக்கியர்கள்’ ஏற்கத் தயாரில்லை என நம்பகமாகத் தெரியவருகிறது. அதையும் மீறி தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை தனது வழமையான பாதையில் பயணிக்குமாக இருந்தால், கூட்டமைப்பில் பிளவு ஏற்படுவது இம்முறை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பிலுள்ள அதன் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010