பிரதமர்' பதவி மோகத்தால் எஸ்.பி. கட்சிக்கு துரோகமிழைத்து விட்டார்- ஐ.தே.க. தெரிவிப்பு; நாடு குறித்த சிந்தனை இல்லை என்கிறது

பிரதமர் பதவியை எதிர்பார்த்து அரசுத்தரப்புக்குத் தாவியிருக்கும் எஸ்.பி. திசாநா யக்க கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகமிழை த்துவிட்டார். மக்கள், நாடு குறித்த சிந்தனை இருந்திருந்தால் இவ்வாறான அற்ப தீர்மானங்களை அவர் எடுத்திருக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
"கை' சின்னத்தை தொலைத்துவிட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியினருக்கும் அவர்கள் சார்ந்த அரச தரப்பினருக்கும் யானைச் சின்னம் குறித்து பேசுவதற்கு எந்த விதமான அருகதையும் இல்லை என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி. ரேணுகா ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கூறுகையில்,
எஸ்.பி. திசாநாயக்காவுக்கு கட்சியின் உயரிய பதவிகளுள் ஒன்றான தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது எடுத்திருக்கும் தீர்மானமானது அற்பமானது. கட்சித் தாவல்களில் புகழ் பெற்ற முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி.மெல்லின் சாதனையை அவர் முறியடித்து விடுவார் போல் தெரிகிறது.
அவருடைய தர்க்கங்கள் எதுவாக இருந்தாலும் கட்சியின் செயற்குழு எடுக்கின்ற தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டியது அவசியமாகும். ஏகோபித்த தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது, எதிர்க்கவும் முடியாது.
ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராகவே நிறுத்தப்பட்டுள்ளார். இந்நாட்டிலிருந்து குடும்ப சர்வாதிகாரத்தை விரட்டியடிப்பதற்கும் அதேபோல் மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் தீர்மானித்தே ஜெனரல் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவது என்ற தீர்மானத்திற்கு கட்சி வந்தது. நடைபெறவிருக்கும் தேர்தலானது மக்களின் கருத்துக்கணிப்பே அன்றி அது ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்றே கூற வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னம் குறித்து சுதந்திரக் கட்சியினர் பெரிதாக அலட்டிக் கொள்கின்றனர்.
பதவி மோகம் பிடித்து எம்மில் இருந்து பிரிந்து சென்றவர்களும் கூட இது குறித்து பேசுகின்றனர். சுதந்திரக் கட்சியினர் முதலில் கையை இழந்தனர். பின்னர் நாற்காலியையும் இழந்து இப்போது வெற்றிலையில் நிற்கின்றனர். இன்னும் சிறிது நாட்களில் வெற்றிலையையும் இழந்து காலில் விழுந்து கிடக்கப் போகின்றனர். இவ்வாறு தங்களது சின்னத்தை தொலைத்துவிட்டவர்கள் இன்று வெட்கமில்லாது எம்மைப் பற்றி விமர்சிக்கின்றனர் என்றார். இதன் போது பிறிதொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த நாட்டுக்கு ஜனநாயகம் என்பது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் யுகத்திலேயே உறுதியாகும். கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் ஐக்கிய தேசிய முன்னணியில் பதவி வழங்கப்படவில்லை என்பதும் நகைப்புக்குரியது.
ஐக்கிய தேசிய முன்னணியில் எவருக்கும் எந்தப் பதவிகளும் வழங்கப்படவில்லை. குறுகிய நோக்கத்துடன் குறுகிய பாதையில் சென்று தலைமைப் பதவியை எட்டி விடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவருக்கு பிரதமர் பதவியை தருவதாக ஜனாதிபதி கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எது எப்படி இருப்பினும் அவர் தனது நிலைப்பாடுகள் தொடர்பில் கட்சிக்கு எதனையும் அறிவித்திருக்கவில்லை.
பிரதமர் பதவியை எஸ்.பி. திசாநாயக்கவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானிப்பாரானால் இப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மைத்திரிபால சிறிசேன, தி.மு. ஜயரத்ன ஆகியோரின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக