JKR. Blogger இயக்குவது.

வியாழன், 3 டிசம்பர், 2009

வெலிசறையில் ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் நாளை


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெலிசறை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதேபோல் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜே.வி.பி. உட்பட எதிர்க்கட்சிகளின் கூட்டம் கண்டியில் இடம்பெறவுள்ளது என்று ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே திஸ்ஸ அத்தனாயக்க எம்.பி. இதனை அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:எமது கட்சியை பலப்படுத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயல்பாட்டை முன்னணிப்படுத்தியும் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வதற்குமாகவே இந்த விசேட சம்மேளனம் நடத்தப்படுகிறது. இச் சம்மேளனத்தில் எமது தலைமையிலான ஐ.தே. முன்னணியில் இணைந்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

கண்டியில் பிரசாரக் கூட்டம்

எதிர்வரும் 17ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நாள் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் எதிரணிகளின் முதலாவது பிரசாரக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் ஜே.வி.பி.யும் கலந்து கொள்ளவுள்ளது. பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இக்கூட்டத்தில் பிரதான உரையாற்றுவார்.

ஐ.தே.கட்சி ஜே.வி.பி.யுடன் இணைந்து பிரதான மாவட்டங்களில் 3 பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளதோடு, ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள கட்சிகள் அமைப்புக்களோடிணைந்து 90 பிரசாரக் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வேட்பாளரை ஆதரித்து ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.முன்னணியோடு இணைந்துள்ள கட்சிகள் தனித் தனியாக பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

ஐ.தே.கட்சியும் அனைத்து மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துவதோடு, வீடு வீடாகச் சென்று பிரசாரத்தையும் ஆரம்பிக்கவுள்ளது. இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நாம் பிரசாரங்களை முன்னெடுத்தாலும் எமது நோக்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்வதே ஆகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010