JKR. Blogger இயக்குவது.
bbc லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bbc லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செய்தியறிக்கை


சீனத் தொழிற்சாலை ஒன்று
சீனத் தொழிற்சாலை ஒன்று

கரியமில வாயுவின் வெளியேற்ற அதிகரிப்பை குறைக்க சீனா உறுதி

உலகில் மிக அதிகமான மாசுக்களை வெளியேற்றும் நாடு என்று அறியப்படும் சீனா, தான் வெளியிடும் கரியமில வாயுவின் வெளியேற்றத்தின் அதிகரிப்பை குறைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு டென்மார்க் நாட்டில் நடைபெறவுள்ள நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமது நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்தப்படும் கார்பன் எரிபொருட்களின் செயற்திறன் இருமடங்காக அதிகரிக்கப்படும் என்று சீனா உறுதியளித்துள்ளது.

அங்கு பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் காரணமாக ஏற்படும் ஒட்டுமொத்தமான மாசடைதல் என்பது சில காலம் தொடரவே செய்யும் என்கிற புரிதலை இது ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாக அங்கு சுற்றுச் சூழல் முன்னர் மாசடைந்தது போல வேகமாக மாசடையாது.

சீனாவின் இந்த திட்ட முன்னெடுப்பானது தீவிரமானதாக பார்க்கப்படும் என்றும் அது அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களால் அந்நாட்டின் செனட்டில் முன்வைக்கப்பட்டுள்ள இலக்குகள் குறித்து நம்பிக்கையின்மை வெளிப்படுத்தியுள்ளவர்களை இணங்கச் செய்யக் கூடும் என்றும் பிபிசியின் சுற்றுச்சூழல் செய்தியாளர் கூறுகிறார்.


ஜேர்மனியின் மூத்த தளபதி இராஜினாமா

இராஜினாமா செய்த தளபதி
இராஜினாமா செய்த தளபதி
ஜெர்மனியின் மூத்த இராணுவத் தளபதியான ஜெனலர் வுல்ஃப்காங் ஷ்னைடர்ஹான் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற ஒரு வான்வழித் தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் பதவி விலகியுள்ளார்.

இதே போல ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு மூத்த அதிகாரியும் பதவி விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற அந்தத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பதை ஜெர்மனிய அரசு மறுத்து வந்தாலும் இராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு அது தெரிந்தே இருந்தது என்று அண்மையில் வெளியான ஊடகத் தகவல்கள் கருத்து வெளியிட்டிருந்தன.

தாலிபான்களால் கைப்பற்றப்பட்ட இரண்டடு பெட்ரோல் லாரிகள் மீது தாக்குதலை நடத்த அமெரிக்கப் படையினரை ஒரு ஜெர்மனியத் தளபதி அப்போது கோரியிருந்தார்.


துபாயின் கடன் குறித்த கவலை

துபாயின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனமான துபாய் வோர்ல்ட் தனது கடன்களை திருப்பிச் செலுத்த சிரமப்படும் நிலையில், அங்கு முதலீடு செய்துள்ளவர்கள் துபாயால் தனது பல பில்லியன் டாலர்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்பது குறித்து கவலைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

துபாய் அரசுக்கு சொந்தமான துபாய் வோர்ல்ட் நிறுவனம் தமக்கு கடன் வழங்கியவர்கள் கடனைத் திரும்பத்தர ஆறு மாதங்களாகும் என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டியுள்ளது.

அந்த நிறுவனத்துக்கு சுமார் 60 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடன் உள்ளது.

துபாயில் ஏற்பட்டுள்ள இந்த நிதி நெருக்கடியை அடுத்து ஐரோப்பிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் வங்கிப் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

ஆசியப் பங்குச் சந்தைகளிலும் இதே போன்ற நிலை இன்றைய வர்த்தகத்தில் காணப்பட்டது.


சவுதி வெள்ளத்தில் 48 பேர் பலி

வெள்ளத்தில் அகப்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள்
வெள்ளத்தில் அகப்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள்
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 48 பேர் இறந்துள்ளதாக சவுதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், செங்கடலையோட்டிய ஜெட்டா நகரைச் சேர்ந்தவர்கள்.

அந்த நகரில் கடும் வெள்ளம் காரணமாக சாலைகளும், சுரங்கங்களும் சேதமடைந்துள்ளன. பல கட்டிடங்களும், பாலங்களும் இடிந்துபோயுள்ளன.

வெள்ளத்தால் நிர்கதியான 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

செய்தியரங்கம்
ஜெனரல் சரத் பொன்சேகா
ஜெனரல் சரத் பொன்சேகா

சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த ஐ.தே.க ஒப்புதல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்த முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உடன்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கட்சி அவரை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த தாம் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதேவேளை, வரக் கூடிய ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தாம் இன்னமும் எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் இது குறித்த தமது கட்சியின் முடிவை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

ஆனால், ஜனநாயக மக்கள் முன்னணி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவரான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மும்பை தாக்குதலின் ஓராண்டு

மெழுகுவர்த்தி அஞ்சலி
மெழுகுவர்த்தி அஞ்சலி
மும்பை தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவு இன்று அனுட்டிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு மும்பை நகரில் பொலிஸாரின் அணிவகுப்பு ஒன்றும் நடைபெற்றது.

170 க்கும் அதிகமான மக்கள் பலியான இந்த தாக்குதல் சுமார் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தது.

இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட 9 பேரை அப்போது இந்திய படையினர் தமது பதில் தாக்குதலில் கொன்றிருந்தார்கள். ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டிப்பது தொடர்பில் பாகிஸ்தான் இன்னமும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அமெரிக்காவில் கூறியிருக்கிறார்.

இந்த தாக்குதல் குறித்த ஆய்வுகள் மற்றும் இன்றைய நிகழ்வுகள் குறித்த தகவல்களை நேயர்க்ள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கடலூர் மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால் பரபரப்பு

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலூர் பகுதி மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால், மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த மீனவர்களை, கடலோர காவற்படையினர் அடையாள அட்டை மற்றும் உரிமம் கேட்டு, அவை இல்லாதவர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம், கடலூர் மாவட்ட மீனவர்களிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

கடலோர காவற்படையினரின் தாக்குதல்களைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கப்போவதாக மீனவர்கள் எச்சரித்த நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாராமனும் மற்ற உயர் அதிகாரிகளும் தாழங்குடா பகுதி சென்று நேரில் விசாரித்தனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Ler Mais

செய்தியறிக்கை


கோபன்ஹேகன் மாநாட்டில் ஒபாமா பங்கேற்பு

கோபன்ஹேகன் மாநாட்டில் ஒபாமா பங்கேற்பு
கோபன்ஹேகன் மாநட்டில் ஒபாமா பங்கேற்பு
அமெரிக்க அதிபர் ஒபாமா டிசம்பர் 9ம் தேதி கோபன்ஹேகனில் நடக்கவிருக்கும் பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா மன்ற மாநாட்டுக்கு செல்வார் என்று வாஷிங்டனில் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த உச்சி மாநாடு எந்த ஒரு சாராம்சமான உடன்பாட்டையும் உருவாக்கும் என்பது குறித்து அவநம்பிக்கை அதிகரித்து வரும் நிலைக்குப் பின்னர் இந்த முடிவு வருகிறது.

இந்த கோபன்ஹேகன் மாநாடு சட்டபூர்வமான ஒரு ஒப்பந்தத்துக்கு இட்டுச்செல்லும் வகையில் ஒரு வலுவான செயல்படுத்தக்கூடிய ஒரு உடன்பாட்டை எட்டவேண்டும் என்று ஒபாமா குறிப்பிட்டார்.


காலநிலை மாற்றத்தை சமாளிக்க வாக்களித்த நிதியை செல்வந்த நாடுகள் அளிக்கவில்லை:பிபிசியின் புலனாய்வு

குளிர்காலத்தில் சூரியன்
குளிர்காலத்தில் சூரியன்
பருவநிலை மாற்றத்தின் விளைவை வளர்முக நாடுகள் சமாளிக்க உதவ, செல்வந்த நாடுகள் தருவதாக உறுதியளித்த பல நூறு மிலியன் டாலர்கள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கணக்கிலேயே வரவில்லை என்று பிபிசி கண்டறிந்துள்ளது.

2001ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 20 தொழில்வளமிக்க நாடுகள் ஒவ்வோரு ஆண்டும் 400 மிலியன் டாலர்களுக்கும் மேல் தருவதாக உறுதியளித்தன.

ஆனால் எட்டு ஆண்டுகளில் இதற்காக உருவாக்கப்பட்ட, இரண்டு ஐ.நா மன்ற நிதிகளில் 260 மிலியன் டாலர்கள் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பதாக பிபிசி புலனாய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்த உறுதிமொழிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்றார். ஆனால் கொடுத்த பணத்தை கணக்கிடுவதில் தவறுகள் நடந்திருக்கலாம் என்று அவர் ஒப்புக்கொண்டார். எதிர்காலத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் இருக்கின்றன என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.


இந்தியா பாலைவனமாகி வருவதாக ஆய்வு கூறுகிறது

மேய்ச்சலால் இந்தியா பாலைவனமாகிறது?
கூடுதல் மேய்ச்சலால் இந்தியா பாலைவனமாகிறது
இந்தியாவின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி, பாலைவனமாகிவருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

காடுகள் அழிக்கப்படுவதும், ஆடுமாடுகள் அதிக அளவு மேய்ச்சல் செய்வதும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சனையில் வட இந்தியாவும் மேற்கு இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை பெய்வதில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்தப் பிரச்சினை அதிகரிப்பதாகவும் கரன்ட் சயின்ஸ் என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கம், சுற்றுச்சூழல் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.


மேற்குக் கரையில் புதிய குடியேற்றங்கள் கட்டுவது இடை நிறுத்தம்

மேற்குக்கரைப் பகுதியில் புதிய கட்டிடங்கள்
மேற்குக்கரைப் பகுதியில் கட்டப்படும் புதிய வீடுகள்
இஸ்ரேலிய பிரதமர் பென்யமின் நெடன்யாகு மேற்குக் கரையில் புதிய குடியேற்றங்கள் கட்டப்படுவதை 10 மாதங்கள் நிறுத்திவைக்க ஒரு திட்டத்தை பிரேரிக்க உள்ளார்.

ஆனால் கிழக்கு ஜெருசெலேத்தில் இந்த குடியேற்றங்கள் நிறுத்தப்படமாட்டாது.

பாலத்தீன நிர்வாகத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு உத்வேகத்தைத் தர இந்த திட்டத்துக்கு தனது அமைச்சரவையிடமிருந்து ஒப்புதலைப் பெற நெடன்யாகு கோருவார் என்று அவரது அலுவலகம் கூறியது.

ஆனால், கிழக்கு ஜெரூசலேத்தில் உள்ள குடியேற்றங்களை உள்ளடக்காத , எந்த ஒரு இஸ்ரேலிய குடியேற்ற இடைநிறுத்த திட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று பாலத்தீனர்கள் ஏற்கனவே தெளிவாக்கிவிட்டார்கள்.

செய்தியரங்கம்

மும்பை தாக்குதல்:பாகிஸ்தானில் 7 பேர் மீது குற்றப்பத்திரிகை

தாக்குதலுக்கு இலக்கான தாஜ்ம்ஹால் ஹோட்டல்
தாக்குதலுக்கு இலக்கான தாஜ்மஹால் ஹோட்டல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் இடம் பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பில் 7 பேர் மீது பாகிஸ்தானிய நீதிமன்றம் ஒன்றில் அந்த நாட்டின் அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில் அந்தத் தாக்குதலை நடத்த சூத்திரதாரியாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்படும் ஜாகி உர் ரஹ்மான் லக்வியும் அடக்கம். அவருடன் சேர்த்து அனைவர் மீதும் பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 7 பேரும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று தெரிவித்துள்ளதாக அவர்களின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

மும்பை தாக்குதல் சம்பவங்களில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ள தாக்குதலாளியான அஜ்மல் கசாப் உட்பட நீதிமன்றத்தில் பிரசன்னமாகாத மற்ற 9 பேர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 9 பேரும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு

அஜ்மல் கசாப்
ஆஜ்மல் கசாப்
இன்று நீதிமன்றத்தில் ஆஜரான 7 பேரின் ஜாமீன் மனுவும் நீதிபதி அக்ரம் அவான் அவர்களால் நிராகரிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் நீதிமன்றத்தில் கடுமையான பாதுகாப்புகள் நிலவின, உள்ளேயும் வெளியேயும் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 5 தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூலை மாதம் ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அது பிறகு ஒத்திப் போடப்பட்டது.

வழக்கு தொடர்பிலான ஆதாரங்களை சேகரிக்க தங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று பாகிஸ்தானிய அதிகாரிகள் தரப்பில் அப்போது கூறப்பட்டது.

மும்பையில் கடந்த ஆண்டு இடம் பெற்ற தாக்குதல்களுக்கு பிறகு பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தைகளை இந்தியா இடைநிறுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை அமைதி பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகாது என்று கடந்த ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பயங்கரவாதத்துக்கு எதிரான முயற்சியை இரட்டிப்பாக்க இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி

இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும்
இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும்

இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்துக்கெதிரான தங்களது முயற்சிகளை இரட்டிப்பாக்கி, பயங்கரவாதத்துக்கெதிரான கூட்டுறவு முயற்சி ஒன்றைத் துவங்கவும் உறுதி பூண்டுள்ளன.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்தின் போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தப்பின்னர், இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்த புதிய கூட்டுறவு முயற்சி, பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுவதை விஸ்தரிப்பது, தகவல் பரிமாற்றம் மற்றும் திறனைக் கட்டியமைப்பது போன்றவற்றை உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுற்றுப்புறத்தில் நடக்கும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்படும் அச்சுறுத்தல்களைப் பற்றி கவலை தெரிவித்த இந்த இரு தலைவர்களும், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பைத் தரும் புகலிடங்கள் மற்றும் பதுங்குமிடங்கள் அழிக்கப்படவேண்டியது அவசியம் என்று கூறினர்.

ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு தரும் புகலிடங்களை அழிப்பதிலும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளப்பட்ட அக்கறை இருப்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

பாதுகாப்பு பற்றிய, வழமை சாராத பிற துறைகளான, அமைதிக்காக்கும் பணி, மனித நேய மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்பகுதிபாதுகாப்பு மற்றும் கடல்வழிப்பாதைகளில் தொடர்பை பாதுகாத்தல் ஆகியவற்றிலும் பரஸ்பர சாதகத்துக்கான பாதுகாப்புக் கூட்டுறவு தற்போது நடத்தப்படும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளூடாகவே மேற்கொள்ளப்படும் என்று இந்தக் கூட்டறிக்கை கூறுகிறது.


முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு:ஒரு பார்வை

முன்னாள் பெண் சிறார் போராளிகள் சிலர்
முன்னாள் பெண் சிறார் போராளிகள் சிலர்
இலங்கை அரசு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தான் விடுவித்ததாக கூறும் சிறார் போராளிகளின் மறு வாழ்வு நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக அவர்களில் ஒரு தொகுதியினரை கொழும்பு ரட்மலானா இந்து கல்லூரியில் சேர்த்துள்ளது.

இதுவரை இந்த முன்னாள் போராளிகள் அம்பேபூசா, வவுனியா போன்ற முகாம்களில் இருந்து வந்தனர். இலங்கை அரசு தன்னுடைய பாதுகாப்பில் 550 சிறார் போராளிகள் இருப்பதாக கூறுகிறது. இதில் 14 முதல் 18 வயதுடைய 273 பேர் ரத்மலான இந்து கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் கடந்த காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது.

அம்பேபூசா முகாமில் இருந்த மாணவர்களுக்கு சிங்கள மொழிக் கல்வி மட்டுமே கிடைத்து இங்கே மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பாடம் நடத்தப்படுகிறது.

சில முன்னாள் ஆண் சிறார் போராளிகள்
முன்னாள் ஆண் சிறார் போராளிகள் சிலர்
ஆனால் அவர்கள் இன்னமும் மற்ற மாணவர்களுடன் ஒரே வகுப்பரையில் கல்லாமல் தனி வகுப்பரையில்தான் கல்வி கற்கின்றனர்.

எனினும் இந்த நிலைமை விரைவில் மாறும் என்றும் அவர்கள் விரையில் மற்ற மாணவர்களுடன் ஒரே வகுப்பில் கற்க வழி செய்யப்படும் என்கிறார் கல்லூரி முதல்வர் நடராஜா மன்மதராஜா.

இங்கேயிருக்கும் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களையும் உறவினர்களையும் சந்திக்க தடையேதுமில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு தொடர்பிலான பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


முகாம் மக்கள் விடுதலை:ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் வரவேற்பு

இடைத் தங்கல் முகாம்களில் இருக்கும் மக்கள்
இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் மக்கள்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் காரணமாக இலங்கையின் வடக்கே இடம் பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிப்பது என்ற இலங்கை அரசின் முடிவை அமெரிக்காவின் நீயூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வரவேற்றுள்ளது.

அதே ரேம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கானோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு அது கூறியுள்ளது.

டிசம்பர் மாதம் முதல், முகாம்களில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நடமாடும் சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 11 ஆயிரம் பேர் வேறு பல முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணத்துக்கு இந்தியத் தூதர் விஜயம்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு இலங்கைக்கான ஐந்து நாடுகளின் தூதுவர்கள் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் குறித்து கண்டறிந்திருக்கின்றார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை விஜயம் செய்திருக்கின்றார்கள்.

இந்தியத் தூதுவர் அலோக் கே காந்த் தவிர ஏனையோர் யாழ் அரசாங்க அதிபரைச் சந்தித்து யாழ் நிலைமைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தென்மாராட்சியில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான ராமாவில் நலன்புரி நிலையத்தையும் பார்வையிட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்தியத் தூதுவர் யாழ் மாநகரசபையில் யாழ் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அங்கு நடைபெற்ற கூட்டத்திலும் உரையாற்றியிருக்கின்றார்.

இந்தியா இலங்கையின் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும், இதற்காகவே இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் 500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அலோக் கே காந்த் தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Ler Mais

செய்தியறிக்கை


இராக் போர் தொடர்பான விசாரணை ஆரம்பம்
இராக் போர் தொடர்பான விசாரணை ஆரம்பம்

சதாம் ஹூசைனை நீக்குவது தொடர்பான பேச்சுக்களில் பிரிட்டிஷ் அரசு பங்கேற்கவில்லை

சதாம் ஹுசைனை 2001 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பதவியில் இருந்து நீக்குவது குறித்த பேச்சுக்களில் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் விலகியே இருந்தது என்று, இராக் போரில் பிரிட்டனின் தொடர்பு குறித்து விசாரிக்கின்ற அதிகாரபூர்வ விசாரணையில் விசாரிக்கப்படுகின்ற இரு மூத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்போது உளவுத்துறையின் உயர் அதிகாரியாக இருந்த சர் பீட்டர் றிக்கட்ஸ் அவர்களும், முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரியான சர் வில்லியம் பாற்றி அவர்களும், இராக்கில் ஆட்சி மாற்றம் செய்யும் விவகாரம் எந்த சந்தர்ப்பத்திலும், பிரிட்டனின் கொள்கையின் மையமாக இருக்கவில்லை என்று கூறினார்கள்.

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டொனி பிளயர் உட்பட பல உயர் அதிகாரிகளை விசாரிக்கும் இந்த விசாரணையின் முன்பாக சாட்சியமளித்துள்ள முதல் அதிகாரிகள் இவர்களாவர்.


பிலிப்பைன்ஸில் நடந்த வன்முறைகளில் சடலங்கள் கண்டுபிடிப்பு

கொல்லப்பட்டவர்களின் உடல்
கொல்லப்பட்டவர்களின் உடல்

பிலிப்பைன்ஸின் மிண்டனாவ் என்கிற தீவில் நடந்த பெருமளவிலான அரசியல் படுகொலைகளில், குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆழமற்ற புதைகுழி ஒன்றிலிருந்து மேலதிக சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத்தொடர்ந்து இந்த எண்ணிக்கையை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் நடந்த மிகமோசமான தேர்தல் வன்முறை யைத்தொடர்ந்து, இரண்டு பிராந்தியங்களில் அவசரகால நடைமுறை அமுலாக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உள்ளூராட்சித்தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது கணவரின் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் மனைவி பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவர் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

அவரோடு பயணம் செய்துகொண்டிருந்த அரசியல் ஆதரவா ளர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் காணாமல் போயிருக்கிறார்கள்.


பால்மாவில் கலப்படம் தொடர்பாக சீனாவில் இருவருக்கு மரண தண்டனை

கலப்படத்தை தொடர்ந்து சீன பால்மாவுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டது
கலப்படத்தை தொடர்ந்து சீன பால்மாவுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டது

சீனாவில் 6 குழந்தைகள் உயிரிழந்து முன்னூறுக்கும் அதிகமான குழந்தைகள் சுகவீனமடையக் காரணமான பால்மாவில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவருக்கு சீனா மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்தவருக்கு நஞ்சடைந்த உணவை தயாரித்து விற்றதற்காக தண்டனை வழங்கப்பட்டது.

மொத்தமாக 21 பேருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, இந்த வருட முற்பகுதியில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.


எச் ஐ வி தொற்றின் வீச்சு குறைகிறது- ஐ நா தெரிவிப்பு

எச் ஐ வி கிருமி
எச் ஐ வி கிருமி

கடந்த எட்டு ஆண்டுகளில் புதிதாக ஏற்படும் எச் ஐ வி தொற்றின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஐநா மன்றத்தின் அறிக்கை குறிப்புணர்த்தியுள்ளது.

எயிட்ஸ் நோய் எதிர்ப்பில் செயலாற்றிவரும் ஐநா மன்ற அமைப்பின் அறிக்கையில், சஹாராவுக்கு தெற்கே இருக்கும் ஆப்ரிக்க நாடுகளில் தான் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டின் துவக்கத்துடன் ஒப்பிடும்போது, 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புதிய எச் ஐ வி தொற்றுக்களின் எண்ணிக்கை 4 லட்சம் குறைந்திருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எச் ஐ வி தடுப்பு நடவடிக்கைகள் ஓரளவு இதற்கு காரணமாக இருந்ததாக ஐநா மன்றத்தின் எயிட்ஸ் நோய் தடுப்புப்பிரிவின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் இந்த எயிட்ஸ் நோய் தன்னை தொடர்ந்து தகவமைத்துக்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இதை தடுக்கும் நடைமுறைகள் சென்று அடைவதில்லை என்றும் கவலை வெளியிட்டிருக்கிறார்.

செய்தியரங்கம்
இராணுவத் தளபதிகளுடன் ஜெனரல் பொன்சேகா
இராணுவத் தளபதிகளுடன் ஜெனரல் பொன்சேகா

பொன்சேகாவை வேட்பாளராக முன்னிறுத்துகிறது ஜெ வி பி

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் முன்மொழிந்துள்ளதாக ஜெ வி பி கூறியுள்ளது. இதை பிற கட்சிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார்.

அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.


பாதுகாப்பு கோரி பொன்சேகா மனு

ஒய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
ஒய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

தனது பாதுகாப்புக்காக 600 இராணுவ வீரர்களும் 10 வாகனங்களும் 2 குண்டு துளைக்காத வாகனங்களையும் வழங்குமாறு அரசாங்கத்துக்கு கட்டளையிடுமாறு முன்னாள் இராணுவத்தளபதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஜனாபதிக்கு 2 ஆயிரம் இராணுவ வீரர்களும், பாதுகாப்பு செயலாளருக்கு 500 இராணுவ வீரர்களும், தற்போதைய இராணுவ தளபதிக்கு 600 இராணுவ வீரர்களும். முன்னாள் கடற்படைதளபதி வசந்த கரன்னாகொடவுக்கு 120 இராணுவ வீரர்களும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மேலும் தங்குவதற்கு இடமளிக்குமாறு அரசாங்கத்துக்கு கட்டளையிடுமாறும் கோரியுள்ளார்

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்களுக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பைவிட குறைந்த பாதுகாப்பு தனக்கு வழங்கப்பட்டிருப்பதால் தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது 62 இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக தனக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களில் இருபது பேர் சுழற்சி முறையில் சேவையிலிருந்து மாறும் பட்சத்தில் தமது பாதுகாப்புக்ககாக 25 இராணுவ வீரர்களே இருப்பது போதுமானதாக இல்லையென்றும் சரத் பொன்சேக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் பங்களிப்பை செய்த தனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக 600 இற்கும் அதிகமான இராணுவ வீரர்களை கொண்டு போதூன பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளருக்கு கட்டளையிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.


பாபர் மசூதி இடிப்பு விவகாரம் - விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல்

பாபர் மசூதி இடிக்கப்படும் போது எடுத்த படம்
பாபர் மசூதி இடிக்கப்படும் போது எடுத்த படம்

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியாவில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவவாதிகளால் இடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின்னர் , அந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசால் அமைக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் அளித்த அறிக்கை, இன்று, செவ்வாய்க்கிழமை, இந்திய நாடாளுமன்றத்தில் அரசால் வைக்கப்பட்டது.

இது குறித்து கருத்து வெளியிட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசியத் துணைத்தலைவர் வேதாந்தம், இவ்வளவு காலம் கடந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, நீதியை மறுக்கும் செயல் என்றார். அதே போல் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னரே ஊடகங்களில் இந்த அறிக்கை கசியவிடப்பட்டிருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். வாஜ்பாய் போன்ற இந்த சம்பவத்தில் சம்பந்தமில்லாத தலைவர்களை இந்த அறிக்கை குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும் என்றார் வேதாந்தம்.

கோவில் கட்டுவதுதான் சங்க பரிவார் அமைப்புகளின் நோக்கமே தவிர மசூதியை இடிப்பது அல்ல என்றும் அவர் கூறினார்.

ஆயினும், அயோத்தியில் ராமர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் கட்டும் திட்டங்களை தங்களது அமைப்புகள் கைவிடாது என்றும், ஆனால் இந்த லட்சியங்களை எட்டுவதில் வன்முறைக்கு இடம் இருக்காது என்றும் வேதாந்தம் தெரிவித்தார்.

"அறிக்கை ஏமாற்றமளிக்கிறது"-- ஜவாகிருல்லா

அரசின் இந்த நடவடிக்கை எடுத்த அறிக்கை ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்றார் தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜவாகிருல்லா.

சங்க பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த 68 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணைக் கமிஷன் தெரிவித்திருப்பது, இந்த விஷயம் முன்பே தெரிந்ததுதான் என்றாலும், வரவேற்கத்தகுந்தது என்றும் ஜவாகிருல்லா தெரிவித்தார்.

ஆனாலும், இந்த விசாரணைக்கமிஷன் அறிக்கை மீது அரசு முறையான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றங்களால் சரியாகத் தீர்வு காணமுடியாத பிரச்சினயாகிவிட்ட இதற்கு, ஹிந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகள் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணமுடியாதா என்று கேட்டதற்கு பதிலளித்த ஜவாகிருல்லா, இந்த விஷயத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட வேண்டுமென்றால், பாபர் மசூதி அமைந்திருந்த இடம் குறித்த நில உரிமை வழக்கு விரைவில் முடிக்கப்பட்ட அதில் கிடைக்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் , அது ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கும் என்றார்.


Ler Mais

செய்தியறிக்கை


பிலிப்பைன்ஸ் வரைபடம்
பிலிப்பைன்ஸ் வரைபடம்

பிலிப்பைன்ஸில் கடத்திக் கொல்லப்பட்டோர் சடலங்கள் கண்டெடுப்பு

பிலிப்பைன்ஸின் தென்பகுதித் தீவான மிண்டனோவாவில், ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களை அங்குள்ள படையினர் மீட்டுள்ளனர்.

அவற்றில் சில சடலங்களில் அவயவங்கள் சிதைக்கப்பட்டிருந்தன.

மகுந்தனாவோ மாகாணத்தில் உள்ள அரசியல் குடும்பங்களுக்கு இடையிலான சாதிச்சண்டையாக இது இருக்கலாம் என்று அந்த இடந்தில் இருந்த ஒரு பேச்சாளர் கூறுகிறார்.

அடுத்த வருடம் நடக்கவிருந்த ஆளுநருக்கான தேர்தலில், தனது கணவரின் வேட்பு மனுவை தாக்கல் செய்யவிருந்த ஒரு பெண்ணும் அதில் கொல்லப்பட்டுள்ளார்.

அவரது ஏனைய குடும்பத்தினரும், சட்டத்தரணிகளும், செய்தியயாளர்களும் கூட கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைகளை கொடூரமானவை என்று வர்ணித்திருக்கின்ற பிலிப்பைன்ஸ் அரசாங்கம், இதனால், தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், உரிய நீதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.


ஆப்கானிய அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணை

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அமைச்சர்களில் குறைந்தது இரண்டு பேர் மீதான ஊழல் புகார்கள் மீது புலனாய்வு செய்யப்படுவதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அரசின் துணைப் பொது வழக்கறிஞர், இவர்களின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார். அதேசமயம் முன்னாள் அமைச்சர்கள் 15 பேரின் ஊழல் தொடர்பிலான புகார்களும் விசாரிக்கப்பட்ட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

இதில் சந்தேகிக்கப்படுபவர்களில் சிலர் தாங்களாகவே முன்வந்து விசாரணைகளில் பங்கேற்றிருப்பதாகவும், வெளிநாட்டில் இருப்பவர்களை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுவருவதற்கு, சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இரண்டாவது முறையாக அதிபர் பதவியேற்ற ஹமித் கர்சாய் அவர்கள், தம் நாட்டில் நிலவுவதாக அவர் கூறிய "குற்றவாளிகள் தவறுக்கு தண்டனை அனுபவிப்பதில்லை" என்ற கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர தாம் பாடுபடப்போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


குர்த் இனத்தாருக்கு கூடுதல் இடங்கள் வழங்க இராக் நாடாளுமன்றம் சம்மதம்

புதிய சட்டத்தை வெளியிடும் நாடாளுமன்றக் குழு பிரதிநிதிகள்
இராக்கின் தேர்தல் நடைமுறைச் சட்டங்களில் செய்ய உத்தேசிக்கப்பட்ட மாற்றங்கள் தொடர்பான யோசனைகளை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது. பல நாட்கள் விவாதிக்கப்பட்ட இந்த யோசனைகள் இந்த மாதத்தின் முற்பகுதியில் தான் இறுதி செய்யப்பட்டன.

இராக்குக்கு வெளியில் வாழும் மில்லியன் கணக்கான இராக்கியர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்குவதற்கு இந்த மாற்றங்கள் பரிந்துரை செய்திருந்தன. இந்த மாற்றங்களை இராக்கின் துணை அதிபரும் சுன்னி பிரிவைச் சேர்ந்தவருமான தாரிக் அல் ஹஷிமி அவர்கள் கொண்டுவந்திருந்தார்.

இந்தச் சட்டம் அடுத்ததாக இராக்கிய அதிபர் சபைக்கு மீண்டும் ஒப்புதலுக்காக செல்லும். அங்கே அல் ஹஷிமி அவர்கள் மீண்டும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எதிர்கால நாடாளுமன்றத்தில் குர்து இனத்தவருக்கு கூடுதல் இடங்களை அளிக்க வகைசெய்யும் மற்ற சட்டத் திருத்தங்களுக்கு இராக்கிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் எதிர்கால நாடாளுமன்றத்தில் தங்களுக்கு உரியபிரதிநிதித்துவம் கிடைக்காதோ என்கிற சுன்னி பிரிவினர் பயத்தை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதன் விளைவாக இராக்கின் தேர்தல் சட்டங்கள் தொடர்பான முறுகல் நிலை நீடிக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.


லண்டனில் பொலிசாரால் தவறுதலாகக் கொல்லப்பட்ட பிரேசில் இளைஞரின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு பெற உடன்படிக்கை

சார்ல்ஸ் த மெனசஸ்
லண்டனில் 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் இரு வாரங்களின் பின்னர் பொலிஸாரால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட பிரேசிலைச் சேர்ந்த சார்ல்ஸ் த மெனசஸ் அவர்களின் குடும்பத்தினர், தாம் பொலிஸாருடன் நஷ்டஈட்டு உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அந்த சம்பவத்தை அந்த நபரது குடும்பத்தினர் மறக்க விரும்புவதாகவும் கூட்டாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த அந்நபரை தாம் தற்கொலையாளி என்று தவறாக கருதி விட்டதாகவும், அது ஒரு மோசமான தவறு என்றும் ஒப்புக்கொண்டுள்ள லண்டன் பொலிஸார், அதற்கான அனைத்துப் பொறுப்பையும் தாம் ஏற்பதாக கூறியுள்ளனர்.

ஒரு மரண விசாரணை அதிகாரி இந்த மரணம் சட்டவிரோதமான கொலை என்பதை நிராகரித்து விட்டதால், முன்னர் இவரது மரண விசாரணையில் இருந்த ஜூரிக்கள் அவரது மரணத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை.

செய்தியரங்கம்
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

இலங்கையில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்களை இன்னும் சில மாதங்களுக்குள் முன்கூட்டியே நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவுசெய்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் தற்பொதைய ஆறுவருட பதவிக்காலம் 2012 நவம்பரில்தான் நிறைவுபெறுகிறது என்றாலும், மக்களிடம் இருந்து புதியதோர் ஆணையைப் பெற ராஜபக்ஷ விரும்புவதாக இலங்கை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பெற்ற இராணுவ வெற்றியின் பலனைப் பெறுவதற்காக ராஜபக்ஷ முன்கூட்டியே தேர்தலை நடத்த விரும்புகிறார் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

வரும் ஜனவரி மாத நடுப் பகுதியில் தேர்தல் நடக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு தலைமையேற்று வெற்றித் தேடித்தந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜனரல் சரத் ஃபொன்சேகா, ராஜபக்ஷவை எதிர்த்து ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடலாம் என்று ஊகங்ககள் நிலவும் நிலையில், தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.


அயோத்தி மசூதி இடிப்பு: விசாரணை ஆவணம் கசிந்தது தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் அமளி

எல்.கே. அத்வானி
அயோத்தியில் 17 வருடங்களுக்கு முன்னர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் இந்து தேசியவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களை சம்பந்தப்படுத்திக் குற்றஞ்சாட்டும் ஆவணம் ஒன்று கசிந்தது குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்செயல்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர்.

அயோத்தியின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்த மூல அறிக்கை ஒன்று ஜூன் மாதத்தில் அரசாங்கத்துக்கு கையளிக்கப்பட்டது.

ஆனால் அதன் உள்ளடக்கம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்திய ஊடகங்களுக்கு கசிந்த அறிக்கையின் படி பாரதியஜனதாக் கட்சியின் தலைவரான எல்.கே. அத்வானி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரது பெயரை இந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.


ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை மற்றும் ஆப்கானிய அகதிகள் இடையிலான மோதல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

கிறிஸ்துமஸ் தீவைக் காட்டும் வரைபடம்
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு குடிவரவு தடுப்பு முகாமில் ஏற்பட்ட ஓர் அடிதடிச் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்கள் மற்றும் ஆப்கானியர்களாக கிட்டத்தட்ட 150 பேர் இடையில் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர்.

மரக்கிளைகளாலும், தும்புத்தடிகளாலும், பிலியர்ட்ஸ் ஆடும் குச்சிகளாலும் போட்டிக் குழுக்கள் ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டன.

37 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவர்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட மூவர் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்துக்கு மேலதிக சிகிச்சைக்காக வான் மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டனர்.

நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கிறிஸ்மஸ் தீவுகளில் உள்ள அதிகாரிகளுக்கு அரை மணிநேரம் பிடித்துள்ளது.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதிய மீன்பிடி விதிகளுக்கு எதிராக தமிழகத் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தியாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டிருக்கும் மீன்பிடி விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை மசோதா, மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பது குறித்து தமிழக மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திவரும் நிலையில், தமிழக முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த மசோதா மீனவர் நலனுக்கு எதிராக அமையக்கூடும் என்று முதல்வர் கருணாநிதி அச்சம் தெரிவித்துள்ளார்.

மீனவர்களைக் கலந்தாலோசித்து உரிய மாற்றங்களைச் செய்த பின்னரே இந்த மசோதா முன்னெடுக்கப்பட வேண்டும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாருக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதனை அ.தி.மு.க. எதிர்க்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் நிலையை இப்புதிய சட்டம் மேலும் மோசமாக்கும் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010