JKR. Blogger இயக்குவது.

வியாழன், 26 நவம்பர், 2009

செய்தியறிக்கை


சீனத் தொழிற்சாலை ஒன்று
சீனத் தொழிற்சாலை ஒன்று

கரியமில வாயுவின் வெளியேற்ற அதிகரிப்பை குறைக்க சீனா உறுதி

உலகில் மிக அதிகமான மாசுக்களை வெளியேற்றும் நாடு என்று அறியப்படும் சீனா, தான் வெளியிடும் கரியமில வாயுவின் வெளியேற்றத்தின் அதிகரிப்பை குறைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு டென்மார்க் நாட்டில் நடைபெறவுள்ள நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமது நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்தப்படும் கார்பன் எரிபொருட்களின் செயற்திறன் இருமடங்காக அதிகரிக்கப்படும் என்று சீனா உறுதியளித்துள்ளது.

அங்கு பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் காரணமாக ஏற்படும் ஒட்டுமொத்தமான மாசடைதல் என்பது சில காலம் தொடரவே செய்யும் என்கிற புரிதலை இது ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாக அங்கு சுற்றுச் சூழல் முன்னர் மாசடைந்தது போல வேகமாக மாசடையாது.

சீனாவின் இந்த திட்ட முன்னெடுப்பானது தீவிரமானதாக பார்க்கப்படும் என்றும் அது அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களால் அந்நாட்டின் செனட்டில் முன்வைக்கப்பட்டுள்ள இலக்குகள் குறித்து நம்பிக்கையின்மை வெளிப்படுத்தியுள்ளவர்களை இணங்கச் செய்யக் கூடும் என்றும் பிபிசியின் சுற்றுச்சூழல் செய்தியாளர் கூறுகிறார்.


ஜேர்மனியின் மூத்த தளபதி இராஜினாமா

இராஜினாமா செய்த தளபதி
இராஜினாமா செய்த தளபதி
ஜெர்மனியின் மூத்த இராணுவத் தளபதியான ஜெனலர் வுல்ஃப்காங் ஷ்னைடர்ஹான் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற ஒரு வான்வழித் தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் பதவி விலகியுள்ளார்.

இதே போல ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு மூத்த அதிகாரியும் பதவி விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற அந்தத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பதை ஜெர்மனிய அரசு மறுத்து வந்தாலும் இராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு அது தெரிந்தே இருந்தது என்று அண்மையில் வெளியான ஊடகத் தகவல்கள் கருத்து வெளியிட்டிருந்தன.

தாலிபான்களால் கைப்பற்றப்பட்ட இரண்டடு பெட்ரோல் லாரிகள் மீது தாக்குதலை நடத்த அமெரிக்கப் படையினரை ஒரு ஜெர்மனியத் தளபதி அப்போது கோரியிருந்தார்.


துபாயின் கடன் குறித்த கவலை

துபாயின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனமான துபாய் வோர்ல்ட் தனது கடன்களை திருப்பிச் செலுத்த சிரமப்படும் நிலையில், அங்கு முதலீடு செய்துள்ளவர்கள் துபாயால் தனது பல பில்லியன் டாலர்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்பது குறித்து கவலைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

துபாய் அரசுக்கு சொந்தமான துபாய் வோர்ல்ட் நிறுவனம் தமக்கு கடன் வழங்கியவர்கள் கடனைத் திரும்பத்தர ஆறு மாதங்களாகும் என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டியுள்ளது.

அந்த நிறுவனத்துக்கு சுமார் 60 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடன் உள்ளது.

துபாயில் ஏற்பட்டுள்ள இந்த நிதி நெருக்கடியை அடுத்து ஐரோப்பிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் வங்கிப் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

ஆசியப் பங்குச் சந்தைகளிலும் இதே போன்ற நிலை இன்றைய வர்த்தகத்தில் காணப்பட்டது.


சவுதி வெள்ளத்தில் 48 பேர் பலி

வெள்ளத்தில் அகப்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள்
வெள்ளத்தில் அகப்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள்
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 48 பேர் இறந்துள்ளதாக சவுதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், செங்கடலையோட்டிய ஜெட்டா நகரைச் சேர்ந்தவர்கள்.

அந்த நகரில் கடும் வெள்ளம் காரணமாக சாலைகளும், சுரங்கங்களும் சேதமடைந்துள்ளன. பல கட்டிடங்களும், பாலங்களும் இடிந்துபோயுள்ளன.

வெள்ளத்தால் நிர்கதியான 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

செய்தியரங்கம்
ஜெனரல் சரத் பொன்சேகா
ஜெனரல் சரத் பொன்சேகா

சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த ஐ.தே.க ஒப்புதல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்த முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உடன்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கட்சி அவரை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த தாம் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதேவேளை, வரக் கூடிய ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தாம் இன்னமும் எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் இது குறித்த தமது கட்சியின் முடிவை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

ஆனால், ஜனநாயக மக்கள் முன்னணி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவரான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மும்பை தாக்குதலின் ஓராண்டு

மெழுகுவர்த்தி அஞ்சலி
மெழுகுவர்த்தி அஞ்சலி
மும்பை தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவு இன்று அனுட்டிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு மும்பை நகரில் பொலிஸாரின் அணிவகுப்பு ஒன்றும் நடைபெற்றது.

170 க்கும் அதிகமான மக்கள் பலியான இந்த தாக்குதல் சுமார் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தது.

இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட 9 பேரை அப்போது இந்திய படையினர் தமது பதில் தாக்குதலில் கொன்றிருந்தார்கள். ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டிப்பது தொடர்பில் பாகிஸ்தான் இன்னமும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அமெரிக்காவில் கூறியிருக்கிறார்.

இந்த தாக்குதல் குறித்த ஆய்வுகள் மற்றும் இன்றைய நிகழ்வுகள் குறித்த தகவல்களை நேயர்க்ள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கடலூர் மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால் பரபரப்பு

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலூர் பகுதி மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால், மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த மீனவர்களை, கடலோர காவற்படையினர் அடையாள அட்டை மற்றும் உரிமம் கேட்டு, அவை இல்லாதவர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம், கடலூர் மாவட்ட மீனவர்களிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

கடலோர காவற்படையினரின் தாக்குதல்களைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கப்போவதாக மீனவர்கள் எச்சரித்த நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாராமனும் மற்ற உயர் அதிகாரிகளும் தாழங்குடா பகுதி சென்று நேரில் விசாரித்தனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010