பாராளுமன்றத்தில் குழப்பம். சபை இருதடவை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் இன்று காலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை நடவடிக்கைகளை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தனது ஆசனத்தின் முன்பாக சுவரொட்டியொன்றை ஏந்திப் பிடித்துக் காட்சிப்படுத்தியதை ஆளும் கட்சிப் பிரதம கொறடா சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இத்தகைய சுவரொட்டிகளை சபையில் காட்சிப்படுத்தமுடியாதென ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.
அதனை அகற்றுமாறு ரங்கே பண்டாரவைப் பலமுறை சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளும் தரப்பினருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்து அமைதியற்ற சூழல் உருவானது.
அமைதி பேணுமாறு சபாநாயகர் பல தடவைகள் கேட்டும் அமைதி ஏற்படாததால், சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
பிந்திக் கிடைத்த செய்தி : மீண்டும் பாராளுமன்றம் கூடியபோது மீண்டும் இந்தப் பிரச்சினை தலை தூக்கியதையடுத்து குழப்ப நிலை தொடரவே மீண்டும் சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக