JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிக்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்-நாளை ஜே. வி. பி. ஏற்பாடு


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டுமெனக் கோரி நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தப் போவதாக அறிவித்துள்ள ஜே.வி.பி. எதிர்ப்புக்களையும் மீறி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அது இரு முனை அல்லது மும்முனைப் போட்டிகளாக அமையலாம் என்றும் எச்சரித்துள்ளது.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழ மை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, ""ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2012ஆம் ஆண்டு வரை பதவியை வகிக்கலாம். இதன்போது நாட்டின் அபிவிருத்திகளை மேற்கொண்டு மக்களுக்கு சலுகைகளை வழங்கி பதவிக் காலம் முடிந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம். இவ்வாறானதொரு நிலையில் ஏன் அவசர அவசரமாக தேர்தலை நடத்த வேண்டும். பதவிக் காலம் முடியுமுன் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் 8 வருட பதவிக் காலம் 6 ஆக குறைவடையும். இதனைத் தெரிந்து கொண்டும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவாரெனில் ஏன்? எதற்காக? என்பதை யோசிக்க வேண்டும்.

வேறொன்றுக்கும் அல்ல. குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்தி சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே ஆகும். பாராளுமன்றம், அமைச்சரவை, நிறைவேற்று அதிகாரம் மூன்றும் இணைந்தே "நாடு' தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது. பாராளுமன்றமும், அமைச்சரவையும் நிறைவேற்று அதிகாரத்தினால் தூக்கியெறியப்பட்டு வெறும் இறப்பர் முத்திரைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காகவே மக்கள் ஆணையை வழங்கினார்கள். இது தொடர்பில் எம்முடன் உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இவற்றை மீறும் தார்மீகக் கடப்பாடு ஜனாதிபதிக்கு இல்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்காது மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்த முனைந்தால் அதனை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம். அதனையும் மீறி தேர்தல் நடத்தப்படுமானால் அத்தேர்தல் இருமுனை அல்லது மும்முனை போட்டிகளாகவும் மாறலாம். இப் போட்டிகளில் "சரத்' மார் பொன்சேக்காக்களும் பங்கு கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. ஐ. தே. கட்சி அமைக்கவுள்ள கூட்டணியில் ஒருபோதும் நாம் இணைய மாட்டோம்.

ஆனால் எதிர்காலங்களில் ஆரம்பமாகவுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிரான கூட்டணிகளில் ஜே. வி. பி. தன்னை இணைத்துக் கொள்ளும். படையினரிடையே பிரிவினைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. ஆனால் அமைச்சர்கள்தான் படையினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நிறைவேற்று அதிகாரத்தால் நாட்டில் ஜனநாயகம் பின்னடைந்துள்ளது. அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன. தனியொரு நபரிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளது.

நாட்டை ஆட்டுவிக்கும் அதிகாரம் தனியொரு நபரிடமும் குடும்பத்தவரிடமும் ஒப்படைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்திற்கு எவ்வாறு இடமளிப்பது. எனவே நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளது. கொழும்பு, பொறளை கெம்பல் மைதானத்தில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை வரை செல்லும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010