JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

முதன்முறையாக சுவிஸ் புலிகளிடையே நேரடிக் கைகலப்பு! அம்பலத்திற்கு வரும் அந்தரங்கங்கள்!!

புலிகளின் புதிய தலைவராக தன்னைப் பிரகடனப்படுத்தியிருந்த கே.பி என்கிற குமரன் பத்மநாதனின் ஆதரவாளரான இதுவரை காலமும் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளைக்குப் பொறுப்பாளராக செயற்பட்டு வந்த குலம் மற்றும் அவரது ஆதரவாளராக இயங்கிவந்த புலிகளின் சூரிச் மாவட்டப் பொறுப்பாளர் ஜெயம் உள்ளிட்ட குழுவினருக்கும், புலிகள் அமைப்புக்கு தானே தலைவரென இரகசியமாகப் பிரகடனப்படுத்தி நோர்வேயிலிருந்து செயற்படும் நெடியவனின் ஆதரவாளர்களான புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை நிதிப் பொறுப்பாளர்களான அப்துல்லா, மாம்பழம், லவுசான் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு அல்லது கவிதாஸ் குழுவினருக்குமிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவமானது 30.09.09 புதன்கிழமை மாலை சூரிச் மாவட்டத்திலுள்ள ஜோசெப் ஸ்ராசாவிலுள்ள புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. புலிகளின் மேற்படி தலைமைக் காரியாலயம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், அதனை மூடிய தினமான 30.09.09 புதன்கிழமை மாலை அதனைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போதே மேற்படி மோதல் சம்பவித்துள்ளதென்றும் தெரிய வந்துள்ளது. இதன்போது மக்களிடம் புலிகளுக்காக வசூலிக்கப்படும் நிதி, புலிகளுக்காக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான கணக்கு விபரங்கள் கோரப்பட்டமை மற்றும் மாவீரர்தின நிகழ்வின் போது புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்ற விடயங்களே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறுவதற்கு காரணமாக இருந்துள்ளன.

மேற்படி வாக்குவாதம் நெடியவன் தரப்புக்கும் கே.பியின் குலம் தரப்புக்குமிடையில் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறி புலிகளின் சுவிஸ் (முன்னாள்) கிளைப் பொறுப்பாளரான குலம் உள்ளிட்ட அவரது தரப்பினரின் சட்டைகள் கிழிந்து போகும் அளவுக்கு மோதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருதரப்புக்கும் பொதுவான நிலைப்பாட்டில் இருந்த சிலர் இடையில் புகுந்து கைகலப்பை நிறுத்தி இருதரப்பையும் அப்புறப்படுத்தி உள்ளனர். இது தொடர்பில் இருதரப்பிடமும் நாம் தொடர்பு கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தோம்,

இதில் முதலாவதாக, நெடியவன் தரப்பைச் சேர்ந்த அப்துல்லா, மாம்பழம் லவுசான் கவிதாஸ் உள்ளிட்டவர்களைச் சேர்ந்தவர்களிடம் சம்பவம் பற்றிக் கேட்டபோது, தலைவர் பிரபாகரன் மக்களின் விடிவெள்ளியாவார். அவர் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமுமாவார். அவர் இருக்கிறாரா? இல்லையா? என்பதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர் இறந்து விட்டார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டிய தேவையும் எமக்கில்லை. இவ்விடயத்தில் மக்கள் மத்தியில் ஒரு குழப்பநிலையை ஏற்படுத்தக் கூடாது. இது குறித்து நாம் வாதிட்ட போதே குலம் தரப்பினர் இதனை ஏற்றுக் கொள்ளாமையால் எமக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டது. அத்துடன் விடுதலைப் போராட்டமானது ஏதோவொரு வகையில் தொடருமென்பதனால் நாம் கணக்கு வழக்கு உட்பட மேற்படி விடயங்களை தற்போதைக்கு யாரிடமும் கூறமுடியாது. இது தொடர்பிலான கணக்கு வழக்குகளை நாம் யாரிடமும் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம் கேபி தரப்பினரான குலம் மற்றும் ஜெயம் உள்ளிட்டவர்களைச் சேர்ந்தவர்களிடம் இச்சம்பவம் தொடர்பில் வினவியபோது, மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த ஒரு தலைவர் பிரபாகரன். அவர் இறந்தமைக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டியது எமது கடமையாகும். மக்கள் மத்தியில் கணக்கு வழக்குகளைக் காட்டும் பட்சத்தில் தான் மக்களும் நம்பிக்கையுடன் தமது ஆதரவினையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குவர். எம்மை நம்பி பலர் கடன்பெற்று பணம் தந்துள்ளனர். அந்தக் காசுகளை ஏதோவொரு வகையில் நாம் திருப்பிச் செலுத்த வேண்டும். அல்லது அவர்களுக்கு காத்திரமான பதிலொன்றையாவது கூறவேண்டும். கணக்கு வழக்குகள் செலவுகள், எவ்வளவு கையிருப்பு இருக்கின்றது என்பன தொடர்பில் உண்மைநிலையைத் தெளிவுபடுத்தும் போது தான் எம்மை நம்பி கடனாக பலலட்சம் சுவிஸ் பிராங்குகளைப் பெற்றுத்தந்த சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் மத்தியில் எவ்வித குழப்பமின்றி தெளிவான நிலை காணப்படும். அத்துடன் நாம் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஏதாவது வகை செய்ய வேண்டும். அன்றேல் அவர்களுக்கு ஏதாவது ஒரு பதிலைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே நாம் இதுபற்றி கேட்டோம்.

அத்துடன் எமது மக்களின் தேசியத் தலைவராக இருந்த தமிழ் மக்களின் விடிவிற்கான ஒரே நம்பிக்கை நட்சத்திரமான பிரபாகரனின் இழப்பினை மூடிமறைத்து மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி பிழைப்பு நடத்தக்கூடாது என்பதையும் நாம் இதன்போது சுட்டிக்காட்டிய போதே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அவர்களுடன் கைகலப்பாக மாறியது. ஆனால் இதன் பிரதிபலனையும், இதற்கான பதிலையும் சுவிஸ்வாழ் தமிழ்மக்களே அவர்களுக்கு வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் தரப்பிலும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ்மக்களின் விடுதலையிலும், நல்வாழ்விலும் அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர்கள் இச்சம்பவம் தொடர்பில் தமது விசனத்தைத் தெரிவித்துள்ளதுடன், தமது கருத்துக்களையும் கூறியுள்ளனர். எது எப்படியிருப்பினும் எமது தலைவரின் இழப்பை மூடிமறைத்து தமது சுயநலனுக்காகவும், பணத் தேவைகளுக்காகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. குலம் மற்றும் ஜெயம் போன்றவர்கள் நாமறியக் கூடிய வகையில் நீதியாகவும், நியாயமாகவும் நடந்து கொண்டு செயற்பட்டவர்கள் என்பது அறிந்த விடயமாகும். ஆகவே இவர்களைத் தாக்கும் அளவுக்கு நெடியவன் தரப்பினர் சென்றிருப்பது வன்னியில் தாம் தொடர்ந்த செயற்பாடுகளையே சுவிஸிலும் செயற்படுத்த முனைகிறார்கள் என்பதையே காட்டுகின்றது. மாற்று இயக்கத்தவர் மற்றும் மாற்றுக் கருத்தினர் மீதுதான் இதுவரை காலமும் தாக்குதல்களைத் தொடுத்து வந்த இவர்கள் தற்போது தமக்குள்ளேயே மோதலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் இதுவோர் கண்டிக்கத்தக்க வேண்டிய செயல் என்று தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010