JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

அமெரிக்கா செல்லும் மன்மோகனுக்கு விருந்து கொடுக்கிறார் அதிபர் ஒபாமா

வாஷிங்டன் : அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அதிபர் ஒபாமா விருந்தளித்து கவுரவிக்க உள்ளார்.


அமெரிக்காவை பொறுத்தவரை, ஒருவர் அதிபராக பதவியேற்றால், அவர் முதல் முதலாக விருந்துக்கு அழைக்கும் வெளிநாட்டு தலைவர் யார் என்பதை, அங்குள்ள அதிகாரிகள் அனைவருமே பெரிதும் எதிர்பார்ப்பர். தங்களோடு நெருங்கிய நட்புறவு கொண்டுள்ள நாடுகளின் தலைவர்களை மட்டுமே, முதல் விருந்துக்கு அதிபர் அழைப்பார். இந்த விருந்து, அமெரிக்க அரசு சார்பில், அதன் அதிபரால் அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்படுவது என்பதால், இதற்கு அத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறது.


தற்போது, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்று, பத்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை அரசு சார்பில் அவர், அதிகாரப்பூர்வமாக எந்த வெளிநாட்டு தலைவருக்கும் விருந்து அளிக்கவில்லை. தற்போது, இந்தக் கவுரவம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கிடைத்துள்ளது. அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமருக்கு, அதிபர் ஒபாமா விருந்து அளித்து கவுரவிக்க உள்ளார்.


இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மன்மோகன் சிங்கை, அதிபர் ஒபாமா வரவேற்பார். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் மூலமாக, இந்திய - அமெரிக்க உறவு மேலும் பலப்படும். பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தவுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தெற்காசியாவை பொறுத்தவரை பாகிஸ்தானுடன் தான் அமெரிக்கா அதிக உறவு வைத்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. நிதி மற்றும் ராணுவ உதவிகளை பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா தாராளமாக அளித்து வந்தது. இதனால், தெற்காசியாவில் பாகிஸ்தானுக்கு தான், அமெரிக்கா முக்கியத்துவம் அளிப்பதாக பேசப்பட்டது. தற்போது, மன்மோகன் சிங்கை, ஒபாமா விருந்துக்கு அழைத்துள்ளதன் மூலம், அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010