JKR. Blogger இயக்குவது.

திங்கள், 16 நவம்பர், 2009

அலெக்ஸ் உட்பட 130 இலங்கைத் தமிழர்களை நாடு கடத்த இந்தோனேசியா முடிவு


மேற்கு ஜாவாவில் கப்பலில் தவித்தபடி இருக்கும் 250க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களில் 130 பேரை நாடு கடத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவரையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா கூறுகிறது.
மலேசியாவிலிருந்து சிறிய கப்பல் மூலம் 255 தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தபோது, இந்தோனேசிய கடற்படை தனது கடல் எல்லைக்குள் வைத்து அவர்களை மடக்கியது. பின்னர் அவர்களை மேற்கு ஜாவா தீவுக்குக் கொண்டு சென்றது.

அன்று முதல் அவர்கள் கப்பலிலேயே உள்ளனர். புகலிடம் குறித்த உறுதிமொழி அளிக்கப்படும் வரை கப்பலை விட்டு இறங்க மாட்டோம். மீறி வெளியேற்ற முயன்றால் மொத்தமாக தற்கொலை செய்து கொள்வோம் என அவர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளராக அலெக்ஸ் என்பவர் செயல்படுகிறார். ஆனால் இவர் ஆள் கடத்தலை மேற்கொள்பவர் என்று இலங்கை கூறி வருகிறது.

இந்த நிலையில் கப்பலை விட்டு இறங்க மறுக்கும் தமிழர்கள் பலரை, அதாவது 130 பேரை வலுக்கட்டாயமாக போர்க் கப்பலுக்கு ஏற்றி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளதாம்.

இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தோனேசிய பொலிஸ் அதிகாரி பசிதார் தம்புனான் கூறுகையில், கப்பலில் இருப்பவர்கள் அவர்களது நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

இந்தோனேசிய குடியேற்றப் பிரிவு அதிகாரி கடோட் சுப்ரதோ கூறுகையில், அவர்களை நாடு கடத்துவது குறித்து இந்தோனேசிய வெளியுறவுத்துறை நடவடிக்கைளில் இறங்கியுள்ளதாக கூறினார்.

இதுதொடர்பாக சிங்கப்பூரில் நடைபெரும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்தோனேசிய, ஆஸ்திரேலிய தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

கடைசியாக வெளியான தகவல்களின்டி ஐ.நா. வகுத்துள்ள அகதிகளுக்கான அடையாளங்கள் இல்லாதவர்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்தி இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க இந்தோனேசியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே அலெக்ஸ் கனடாவில் பல வருடம் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவர் ஆள் கடத்தல் தொடர்பாக சிக்கி கைதாகி சிறைவாசம் அனுபவித்தவர் என்றும் கூறப்படுகிறது. அவரது உண்மையான பெயர் சஞ்சீவ் குகேந்திரராஜா என்று இலங்கை அரசு கூறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010