JKR. Blogger இயக்குவது.

சனி, 21 நவம்பர், 2009

செய்தியறிக்கை


 வடக்கு முகாம்களில் மக்கள்
வடக்கு முகாம்களில் மக்கள்

"முகாம்களில் உள்ள மக்களுக்கு டிசம்பர் முதல் நடமாடும் சுதந்திரம்" - அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வரும் டிசம்பர் மாத ஆரம்பத்திலிருந்து நடமாடும் சுதந்திரம் வழங்கப்படும் என்று இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர நேர்ந்திருந்த மக்களில் சுமார் ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் பேர் வரையிலான மக்கள் இன்றளவும் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், இந்த முகாம்கள் திறந்த இடங்களாக மாறப்போகின்றன என்றும், உள்ளேயிருப்பவர்கள் சுதந்திரமாக நடமாடவும், வெளியில் சென்று தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்கவும் முடியும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

வரும் ஜனவரி மாத இறுதிக்குள் முகாம்களில் உள்ள மக்கள் அனைவரையும் மீளக் குடியமர்த்துவது என்ற அரசாங்கத்தின் திட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மக்களை அவர்களது விருப்பத்துக்கும் மாறாக அரசாங்கம் முகாம்களில் அடைத்துவைத்திருந்தது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் பிற தொண்டு நிறுவனங்களும் அரசாங்கத்தை விமர்சித்திருந்தன.

ஆனால் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டிருந்தவர்களை அடையாளம் காண இந்த முகாம்கள் தேவையாக உள்ளன என்று அரசாங்கம் கூறுகிறது.


ஊடகவியலாளர் எஸ்.ஜே. திஸ்ஸநாயகத்திற்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான விருது

ஜசிதரன் மற்றும் திஸ்ஸநாயகம்
ஜசிதரன் மற்றும் திஸ்ஸநாயகம்
இலங்கையில் 20 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் எஸ்.ஜே. திஸ்ஸநாயகத்திற்கு சீ.பீ.ஜே என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான விருதினை அறிவித்து கௌரவித்துள்ளது.

உள்நாட்டில் தமது கடமை காரணமாக அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளவர்கள் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு விருது வழங்கி கௌரவிக்கும் ஊடகவியலாளர்களில் இம்முறை எஸ்.ஜே. திஸ்ஸநாயகம் விருதுக்குறியவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் மாதாந்த சஞ்சிகையொன்றில் செய்திக்கட்டுரைகளை எழுதி வந்த ஊடகவியலாளர் எஸ்.ஜே. திஸ்ஸநாயகம் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இராக்கில் தேர்தல் சட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் இழுபறி

வாக்களரின் விரலில் மை தடவும் காட்சி
வாக்களரின் விரலில் மை தடவும் காட்சி
இராக்கில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் திட்டங்கள் தொடர்பான சிக்கலை தீர்க்க இராக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே இணக்கம் ஏற்படவில்லை.

இராக் துணை அதிபர்களில் ஒருவரான தாரிக் அல் ஹாஷேமி புதிய தேர்தல் சட்டத்தின் ஒரு பகுதியை தனது வீட்டோ அதிகாரத்தை கொண்டு நிராகரித்து விட்டார், இதனை தொடர்ந்து இந்த சட்டத்தை மீள் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு நாடாளுமன்றம் தள்ளப்பட்டது.

இத்தகைய நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஒன்று கூடவுள்ளார்கள்.

புதிய தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற தவறி வருவதால், தேர்தல் ஜனவரியில் குறிப்பிட்ட நேரத்தில் இடம்பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் அங்கிலிக்கன் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவை நெருக்கமாக்கும் முயற்சி

இரு மதப்பிரிவு தலைவர்களும்
இரு மதப்பிரிவு தலைவர்களும்
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கும், அங்கிலிக்கன் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவை நெருக்கமாக்க ஏங்கிலிக்கன் தேவாலயத்தின் ஆன்மிகத் தலைவர் ஆர்ச்பிஷப் ரோவன் வில்லியம்ஸ் மற்றும் போப் பெனடிக்ட் உடன்பட்டிருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

வருத்தத்தில் இருக்கும் அங்கிலிக்கன் கிறிஸ்துவர்களுக்காக விசேஷ பிரிவு ஒன்று ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் உருவாக்கப்படும் என்று போப் பெனடிக்ட் அறிவித்த பின்னர் நடைபெறும் சந்திப்பு இதுவாகும்.

பெண்களை பிஷப்புகளாக மாற அனுமதிக்கும் முடிவினால் வருத்தத்தில் இருக்கும் அங்கிலிக்கன் கிறிஸ்துவர்களின் கோரிக்கையை அடுத்தே இவ்வாறான முடிவு என வத்திக்கான் கூறியுள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கையால் உறவில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை என டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

செய்தியரங்கம்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஜூரிச் கூட்டம் தொடர்பான முடிவுகள் கூட்டறிக்கையாக வெளியிடப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொது இணக்கப்பாட்டை எட்டும் முயற்சியில் சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையில் ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் கூட்டத்தின் இறுதி முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

பொது இணக்கப்பாடு குறித்த தீர்மானங்களை தற்போது தம்மால் வெளியிட முடியாது எனவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

பொதுவாக சுமூகமான முறையில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்ற போதிலும் சில விடயங்கள் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் கட்சியின் தலைவர் ரவூஃப் ஹக்கிம் மற்றும் மலையக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசைக்குத் தெரிவித்த கருத்துக்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மும்பைத் தாக்குதல்களுக்கு உடந்தை - பாகிஸ்தானியர் இருவர் இத்தாலியில் கைது

கைதாகியுள்ள இருவர்
கைதாகியுள்ள இருவர்
இந்தியாவின் மும்பை நகரில் கடந்த வருடம் 160 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட காரணமாக இருந்த தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானியர் இருவரை இத்தாலியில் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

இத்தாலியின் வடக்கிலுள்ள பிரேய்ஷா நகரில் அதிகாலைப் பொழுதில் நடந்த பொலிஸ் தேடுதல் வேட்டையில் இருவரும் கைதாகினர்.

மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு தங்களுடைய நாணய மாற்று நிறுவனம் ஊடாக இவர்கள் பணம் அனுப்பிவந்தனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ. வழங்கிய துப்புத் தகவலின் அடிப்படையில் நீண்ட புலனாய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இத்தாலிய பொலிசார் கூறுகின்றனர்.


மலேஷியாவில் தடுப்புக்காவலில் உயிரிழந்த எதிர்க்கட்சி ஆர்வலர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் - மீண்டும் பிரேதப் பரிசோதனை

சந்தேகம் வெளியிட்டுள்ள மருத்துவர்
சந்தேகம் வெளியிட்டுள்ள மருத்துவர்
மலேஷியாவில் அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்திருந்த எதிர்க்கட்சி ஆர்வலர், கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர் ஒருவர் கூறியதை அடுத்து, அந்த எதிர்க்கட்சி ஆர்வலரின் உடல் இரண்டாவது தடவையாக பிரேதப் பரிசோதனை செய்யப்படுவதற்காக கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

டியோ பெங்ஹொக் என்ற அந்த ஆர்வலர், மலேஷிய லஞ்ச ஒழிப்பு துறை அலுவலக ஜன்னல்களின் கீழே மேற்கூரை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

எதிர்க்கட்சி கட்சித் தலைவர் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்தக் கட்டிடத்தில் வைத்து டியோ விசாரிக்கப்பட்டிருந்தார்.

டியோ தற்கொலை செய்துகொண்டார் என ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் தாக்கப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், குரல்வளை நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்டிருக்கலாமென்று அவரது உடலில் காணப்படும் தழும்புகள் காட்டுவதாக மருத்துவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010