JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 3 நவம்பர், 2009

செய்தியறிக்கை


போர் குற்றங்கள் குறித்த நீதிமன்றத்தில் கரடிச்
போர் குற்றங்கள் குறித்த நீதிமன்றத்தில் கரடிச்

போர்க் குற்றங்கள் தொடர்பில் முன்னாள் செர்பிய தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்

த ஹேக்கில் இருக்கின்ற யூகொஸ்லாவ் போர்க் குற்ற நீதிமன்றத்தில் தனக்கு எதிரான விசாரணைகளில் முன்னாள் போஸ்னிய செர்பிய தலைவரான கரடிச் முதல் தடவையாக ஆஜராகியுள்ளார்.

கரடிச்சை விசாரணைகளில் கட்டாயமாக கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் அல்லது அவர் இல்லாமலேயே விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வழக்குத் தொடுக்கும் வழக்கறிஞர்கள் வாதாடியதை, கரடிச் அமைதியாக இருந்து கேட்டுக்கொண்டிருந்தார்.

பத்து லட்சத்துக்கும் அதிகமான பக்கங்களை தான் படிக்க வேண்டியுள்ளதால், தனது வழக்கின் எதிர்வாதத்துக்காக தான் தயாராக மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கரடிச் மீண்டும் கோரியுள்ளார்.

போஸ்னிய போரில் தனது பங்கிற்காக இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றம் ஆகியவை குறித்த குற்றச்சாட்டுக்களை கரடிச் எதிர்கொள்கிறார். ஆனால் அவற்றை அவர் மறுத்துள்ளார்.


ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சி

யூரோ நோட்டுக்கள்
யூரோ பண நோட்டுக்கள்
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான எதிர்பார்ப்பிலும், மேலாக யூரோவை பயன்படுத்தும் 16 நாடுகள் அடுத்த வருடத்தில் நல்ல வளர்ச்சியை அனுபவிக்கும் என்று ஐரோப்பிய ஆணையம் கூறுகிறது.

2010 ஆம் ஆண்டில் 0.7 வீதம் வளர்ச்சி ஏற்படும் என்றும், வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டாலும், அது எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இருக்காது என்றும் ஆணையம் எதிர்வு கூறியுள்ளது.


இத்தாலியப் பள்ளிகளில் சிலுவைகளை வைக்கத் தடை

இத்தாலிய வகுப்பறை ஒன்றில் சிலுவை
இத்தாலிய வகுப்பறை ஒன்றில் சிலுவை
இத்தாலியின் பள்ளி வகுப்புக்களில் சிலுவைகள் வைக்கப்படக் கூடாது என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

வெனிஸ் நகருக்கு அருகேயுள்ள அபானோ டெர்மே என்ற ஊரில் உள்ள சிறார் பள்ளி கத்தோலிக சிலுவைகளை அகற்ற மறுத்ததை எதிர்த்து ஒரு பெற்றோர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த புகார் மீது இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பள்ளிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ள
சிலுவைகள் மத மற்றும் கல்வி சுதந்திரத்தை மீறுவதாக உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த முடிவை வெட்கக் கேடான ஒன்று என்று வர்ணித்துள்ள இத்தாலி அரசு, சிலுவை இத்தாலிய பாரம்பரியத்தை காட்டுவதாகவும் கத்தோலிக்கத்தை பறைசாற்றவில்லை என்றும் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகுதான் கருத்துக் கூற முடியும் என்று வாத்திகன் கூறியுள்ளது.


கரடி தாக்கியதில் காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் பலி

காஷ்மீரில் இருக்கும் கரடிகள்
காஷ்மீர் பகுதியில் இருக்கும் கரடி
தனது குகையில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை ஒரு கரடி கொன்று விட்டதாக இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் போலீசார் கூறுகின்றனர்.

இந்த தாக்குதிலில் மேலும் இருவர் உயிர் தப்பிவிட்டனர். இதில் ஒருவர் கரடி தாக்குதலால் மிக மோசமாக காயமடைந்துள்ளார்.

தானியங்கித் துப்பாக்கிகளை தீவிரவாதிகள் வைத்திருந்தாலும், கரடியின் ஏதிர்பாராத திடிர் தாக்குதலை அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.

சம்பவ இடத்தில் தீவிரவாதிகள் சமைத்து வைத்திருந்த சாப்பாட்டின் மீதியையும் போலீசார் பார்த்துள்ளனர்.
காஷ்மீரில் நடைபெறும் மோதல் காரணமாக அங்கேயுள்ள சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வன உயிர் நிபுணர்கள் கூறுகின்றனர். வேட்டையாடுவதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட பல ஆயுதங்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல இடங்களில் சிறுத்தைப்புலிகளும், கரடிகளும் பலரை கொன்றுள்ளது குறித்த செய்திகள் வந்துள்ளன.

செய்தியரங்கம்
பிஜியின் இராணுவத் தளபதி பைனிமராமா
பிஜியின் இராணுவத் தளபதி பைனிமராமா

இலங்கை நீதிபதிகள் பிஜித் தீவுக்கு செல்வது குறித்து சர்ச்சை

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களை வெளியேற்றுவதற்கான முடிவு பிஜியின் இராணுவத் தலைவரான ஃபிராங்க் பைனிமராமா அவர்களால் அறிவிக்கப்பட்டது.

பசுபிக் தீவான பிஜியின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக அந்த இரண்டு நாடுகளையும் குற்றஞ்சாட்டிய அவர், அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் 24 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையைச் சேர்ந்த நீதிபதிகள் குழு ஒன்றை பிஜியின் நீதித்துறை வெற்றிடங்களை நிரப்ப அந்த நாடு ஆட்சேர்ப்புச் செய்தது தொடர்பில் இந்த இரு நாடுகளுக்கும் பிஜிக்கும் இடையில் பிணக்கு உருவானது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது அரசியலமைப்புச் சட்டத்தை ரத்து செய்ததை அடுத்து, நீதித்துறையின் அனைத்து உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இலங்கை நீதிபதிகள் பிஜிக்கு செல்வதற்கான தமது நகர்வுகள் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும், அவர்கள் சூவாவுக்கு செல்வதற்கான இடைத்தரிப்பு விசாக்கள் வழங்கப்பட மாட்டா என்று மறுத்ததாகவும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் மீது பிஜி குற்றஞ்சாட்டுகிறது.

இதனை மறுத்துள்ள ஆஸ்திரேலியா, இந்த நீதிபதிகள் பிஜியில் பணியாற்ற முற்பட்டால், பிஜியின் ஏனைய இராணுவ அரசாங்க அதிகாரிகளைப் போன்று இவர்களுக்கும் பயணத்தடை விதிக்கப்படும் என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அது கூறியுள்ளது.

பிஜி தான் தற்போது செல்கின்ற பாதையில் இருந்து விலகாது என்று கொமடோர் பைனிமராமா அவர்கள் கூறியுள்ளார்.


இந்திய வெளியுறவு அமைச்சருடன் இலங்கை அமைச்சர் தொண்டமான் சந்திப்பு

ஆறுமுகத் தொண்டமான்
ஆறுமுகத் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அந்நாட்டின் அமைச்சருமான ஆறுமுகத் தொண்டமான் செவ்வாய்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

அண்மையில் இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை சென்று திரும்பிய பிறகு அங்கு இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பான நட்வடிக்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கிருஷ்ணாவுடன் தொடண்டமான் விவாதித்துள்ளார்.

இது தொடர்பிலான ஒரு அறிக்கையும் அவர் இந்திய வெளியுறவு அமைச்சரிடம் அளித்துள்ளார்.

இந்திய எம்.பி.க்கள் குழு வந்து சென்ற பிறகு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளதாகவும் ஆறுமுகத் தொண்டமான் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக, இந்தியா வழங்கும் உதவித் தொகையைக் கொண்டு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக, இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ தலைமையில், சிறப்புப் பிரதிநிதிகள் குழு விரைவில் இந்தியா வர இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


ஆஸ்பிரின் சாதகமா பாதகமா ?

ஆஸ்பிரின் மாத்திரைகள்
ஆஸ்பிரின் மாத்திரைகள்
மாரடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் சிறிதளவு ஆஸ்பிரின் மருந்தை எடுத்துக்கொண்டால் இந்த நோய்கள் தொடர்பான பின்விளைவுகளை தடுக்க அது உதவும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த இரண்டு நோய்களால் பாதிக்கப்படாதவர்கள் இந்த நோய்கள் தங்களுக்கு வராமல் தடுப்பதற்கு ஆஸ்பிரின் மருந்தை உட்கொள்ளுவது பயனளிக்குமா என்றால் அதை உறுதியாக சொல்லமுடியாது என்று சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

பிரிட்டனில் நீரிழிவு நோய் மற்றும் ரத்தக்கொதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மருந்தை அளிப்பது குறித்து வழிமுறைகள் இருக்கின்றன.

ஆனால் இந்த நடைமுறை சரியானதல்ல என்று மருத்துவம் தொடர்பான புதிய சஞ்சிகை ஒன்று தற்போது கூறியுள்ளது. காரணம் இப்படியாக ஆஸ்பிரின் மருந்தை உட்கொள்ளுவது என்பது, இவர்களின் உடம்பிற்குள் ரத்தக்கசிவு ஏற்பட வழிவகுக் கலாம் என்று இந்த சஞ்சிகை எச்சரிக்கிறது.

ஆஸ்பிரின் மருந்தின் நற்பலன்கள் மற்றும் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் என்பவை சம அளவில் இருப்பதால் அதை பயன்படுத்தும்போது மேலதிக கவனமும் உரிய மருத்துவரின் கண்காணிப்பும் அவசியம் என்று இந்த மருத்துவ சஞ்சிகை அறிவுறுத்தியுள்ளது.

எனவே, மருத்துவர்கள் தம்மிடம் வரும் நோயாளிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பரிசோதித்து அவர்களுக்கு ஆஸ்பிரின் தருவது பயனுள்ளதாக இருக்குமா அல்லது ஆபத்தாக முடியுமா என்பதை பரிசீலித்த பிறகே அவர்களுக்கு ஆஸ்பிரின் மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கான சஞ்சிகை அறிவுறுத்தியிருக்கிறது.

இது குறித்த மேலதிகத் தகவலை இன்றைய அனைவருக்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்.


காஷ்மீரில் விளையாட இந்திய பாதுகாப்பு படையினர் மறுப்பு

இந்தியவின் முப்படைகளின் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கிரிக்கெட் அணி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மாநில மற்றும் இதர அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், ஜம்மு காஷ்மீர் மாநில அணிக்கு எதிராக ஸ்ரீநகரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்த போட்டியில் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி இந்தியாவின் முப்படைகளின் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரிய அணி மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை உள்ளது, அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது என்று இந்திய அரசு கூறிவரும் வேளையில், இந்த அணி அங்கு விளையாடச் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் முன்னர் தாம் எடுத்துச் செல்வதாகவும், இந்த முடிவுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமர் காஷ்மீர் பகுதிக்கு விஜயம் செய்யும் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக முப்படைகளின் கிரிக்கெட் அணி அங்கு வர மறுப்பதில் நியாயமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


முகமது நபிகள் குறித்த திரைப்படம் உருவாகிறது

மெக்கவிலுள்ள பள்ளிவாசல்
மெக்காவிலுள்ள பள்ளிவாசல்
முகமது நபிகள் வாழ்க்கை வரலாறு குறித்து 150 மில்லியன் டாலர்கள் செலவிலான ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை தயாரிக்கும் ஒரு திட்டம் செல்வந்த அரபு நாடாகிய கதாரில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

லார்ட் ஆப் தி ரிங்ஸ், மேட்ரிக்ஸ் போன்ற படங்களை தயாரித்த பேரி ஒஸ்போர்ன், ஆங்கில மொழியில் வெளியாகவுள்ள இப்படத்தை தயாரிக்க வுள்ளார்.

இஸ்லாம் குறித்து மக்களுக்கு அறிவூட்டுவதுவும், மேற்கத்திய நாடுகளில் நபிகள் நாயகம் குறித்து நிலவும் தவறான புரிதல்களைப் போக்குவதும் இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று இந்த படத்தின் பின்னணியில் இருக்கும் கதாரி ஊடக நிறுவனம் கூறுகிறது.

இந்தப் படத்துக்கான கதை அடுத்த ஆண்டு தாயாராகும் என்றும் அதற்கு அடுத்த ஆண்டு படப்பிடிப்பு துவங்கும் என்றும் இந்தப் படத்துக்கு பண முதலீடு செய்யவுள்ள கதாரி ஊடக நிறுவனம் கூறுகிறது.

நபிகள் நாயகத்தை உருவகப்படுத்திக் காட்டக் கூடாது என்று இஸ்லாமிய இறை நம்பிக்கைகள் கூறுவதால் இந்தப் படத்தை தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று இதன் அமெரிக்க தயாரிப்பாளர் பேரி ஒஸ்பார்ன் கூறியுள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010