செய்தியறிக்கை
| |
அமெரிக்க துருப்பினர் |
ஆப்கான் நாட்டவர்கள் நேட்டோவால் கொல்லப்பட்டுள்ளனர்
ஆப்கானிஸ்தானியப் பாதுகாப்பு அமைச்சும் நேட்டோ படைகளும் சேர்ந்து எட்டு ஆஃப்கானியர்கள் கொல்லப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.
அமெரிக்க மற்றும் ஆப்கான் படைகள் சேர்ந்து நடத்திய ஒரு நடவடிக்கையின் போது ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் தம்தரப்பு மீது தாமே தாக்கிய ஒரு தவறுதலாக நடந்த சம்பவமாக இருக்கலாம் எனக் கருதப் படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய நேட்டோ படை அதிகாரி, பாட்கி பிரதேசத்தில் காணாமல் போன இரு அமெரிக்கப் படையினரைக் கூட்டாக அமெரிக்க மற்றும் ஆப்கானியப் படையினர் வெள்ளியன்று தேடிய சம்பவத்தின் போது இது நிகழ்ந்தது என்றார்.
காணாமல் போனவர்களைத் தேடிக் கொண்டிருந்த படையினர் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் தொடங்கியதைத் தொடர்ந்து வான்தாக்குதல் ஒன்றுக்கு நேட்டோ ஆணையிட்டிருந்தது.
நேட்டோ படைகள் நடத்திய வான் தாக்குதல் கூட்டுப் படைகளும் ஆப்கான் பாதுகாப்புப் படையினரும் தங்கியிருந்த முகாம் மீது தவறுதலாக நிகழ்ந்தது என ஆப்கானியப் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
வங்கி பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்க பிரிட்டன் பிரதமர் யோசனை
| |
கார்டன் பிரவுன் |
பிரித்தானியப் பிரதமர் கார்டன் பிரவுன் அவர்கள் உலகம் அண்மையில் கண்டது போன்ற வங்கி நெருக்கடியொன்று மீண்டுமொருமுறை ஏற்படாதிருக்க வங்கிகளுக்கிடையிலான நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் செயின்ட் அண்ட்ரூஸ் நகரில் கூடியிருக்கும் செல்வந்த மற்றும் பொருளாதார அபிவிருத்தி கண்டு வரும் நாடுகள் இருபதின் அமைப்பான ஜி-20 அமைப்பின் நிதியமைச்சர்கள் முன்னிலையில் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வங்கி-வர்த்தகம் மூலம் வரும் லாபத்தை சிலர் மட்டுமே எடுத்துக் கொள்ள அதனால் வரும் நட்டத்தின் பாதிப்பை அனைவரும் பகிர்ந்து கொள்வதை ஏற்க முடியாது என்றார் கார்டன் பிரவுன்.
இப்படிப்பட்ட வரி சம்பந்தமாக பிரிட்டன் தனியாகச் செயற்பட மாட்டாது என்றும், வங்கி-வர்த்தகம் மேலான வரி குறித்து சர்வதேச அளவிலான உடன்பாடு தேவை எனவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய வரியை எதிர்ப்பவர்கள் இது உலக நிதிச் சந்தையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
அமெரிக்க பெண் பொலிஸுக்கு அமெரிக்க அதிபர் புகழாரம்
| |
அமெரிக்க அதிபர் ஒபாமா |
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இராணுவ தளமொன்றில் கடந்த வியாழனன்று படையினர் மீது கண்மூடித்தமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இராணுவ மருத்துவரை சுட்டு வீழ்த்திய பெண் பொலிஸின் வீரம் மற்றும் தைரியம் ஆகியவற்றை அதிபர் ஒபாமா பாராட்டியுள்ளார்.
படையினர் 12 பேரையும் சிவிலியன் ஒருவரையும் மேஜர் நிதால் மாலிக் ஹஸன்,கொன்றிருந்த நிலையில், இந்த பெண் பொலிஸ் அதிகாரி ஹசனை துப்பாக்கியால் சுட்டு காயமடையசெய்திருந்தார்.
மனிதனுடைய மிக மோசமான இயல்பு இந்தச் சம்பவதிலே வெளிப்பட்டிருந்தாலும், அமெரிக்காவின் சிறப்பையும் உலகம் காண நேர்ந்துள்ளது என்று தனது வாராந்திர உரையில் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல்வேறு இனத்தவருக்கும் மதத்தவருக்கும் அமெரிக்க இராணுவத்தில் இடமுள்ளது என்று குறிப்பிட்டு அத்தன்மையை ஒபாமா புகழ்ந்தார்.
உல்ஃபா மூத்த தலைவர்கள் காவலில்
| |
ஊல்ஃபா அமைப்பை சேர்ந்தவர்கள் |
உல்ஃபா என்று அழைக்கப்படும் தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரண்டு மூத்த தலைவர்கள் 14 நாட்கள் காவலில் வைக்க இந்திய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
சில நாட்கள் முன்பு அண்டையிலுள்ள வங்கதேசத்தில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் யாரும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை என்றூ வங்கதேச அதிகாரிகள் அச்சமயம் கூறியிருந்தனர்.
இந்தியா வங்கதேசம் இடையில் கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லாத நிலையில் இவர்கள் எவ்வாறு இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டார்கள் என்பது இதுவரை தெளிவாகவில்லை என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
| |
சர்வதேச நாணய நிதியம் |
இலங்கைக்கு கடன் கொடுக்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
இலங்கை தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு உதவும் முகமாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். அந்நாட்டு வழங்குகின்ற கடன் தொகையில் இரண்டாம் தவணையையும் அந்நாட்டுக்கு வழங்க ஒப்புதல் ஐ.எம்.எஃப்.இன் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் அண்மைய காலமாக செயல்பட்டுவரும் விதத்தை மீள்பரிசீலனை செய்த பின்னர், இரண்டாம் தவணையாக கிட்டத்தட்ட 33 கோடி டாலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ஐ.எம்.எஃப். நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு மொத்தத்தில் 260 கோடி டாலர்கள் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் கடந்த ஜூலை மாதம் தீர்மானித்திருந்தது.
இலங்கையின் பொருளாதாரம் செயல்படும் விதத்தை கவனத்தில் கொண்டு ஓர் இருபது மாத காலகட்டத்தில் மொத்தக் கடன் தொகையை பல்வேறு தவணைகளாக வழங்குவது என்று அப்போது முடிவுசெய்யப்பட்டிருந்தது.
முதல் தவணையாக 33 கோடி டாலர்களை உடனடியாகவே இலங்கையிடம் கொடுத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை சில மாதங்கள் இடைவெளிக்குப் பின் இலங்கையின் பொருளாதாரம் எவ்விதமாக செயல்படுகிறது என்பதை தற்போது மீள்பரிசீலனை செய்துள்ளது.
இந்த மீள் பரிசீலனையின் முடிவில் இரண்டாவது தவணையாக மேலும் 33 கோடி டாலர்களை வழங்க ஐ.எம்.எஃப் தீர்மானித்துள்ளது.
த.தே.கூ உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தொடர்ந்து விசாரணை
| |
செல்வம் அடைக்கலநாதன் |
இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இரண்டாவது நாளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் சாதாரண முறையில் தான் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும், தேவைப்படும் போது மீண்டும் விசாரிப்போம் என்று பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கூறியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு இந்த பிரச்சனையை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தனிப்பட்ட முறையிலேயே சந்தித்து வருவதாகவும், ஏனைய கூட்டணிக்கட்சிகளின் உதவி தங்களுக்கு தேவையாக இருக்கவில்லை என்றும், தொடர்ந்தும் தங்களால் இதனை தனியாகவே சந்திக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கை அவசரகால சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரஞ்ச் தூதர் கோரிக்கை
| |
போரின் போது மக்கள் இடம்பெயர்வு |
மூன்று நாள் விஜயமாக இலங்கை சென்றுள்ள மனித உரிமைகளுக்கான மூத்த பிரஞ்ச் தூதர் பிரான்சுவா ஜிமேரி அவர்கள், இலங்கையில் நிலவும் அவசரகால சட்டத்தை இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 26 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் சட்டத்தை நீக்க வேண்டும் என்றார். அத்தோடு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
தமிழகத்தில் கடும்மழை
| |
தமிழகத்தில் கடும்மழை(கோப்புப் படம்) |
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி அரசு அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்குப் பருவமழை கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது. ஆந்திரம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இந்த மழை கடுமையாகப் பெய்து வருகிறது. மேலும் 24 மணி நேரத்து்க்கு கடும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக, ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதற்காக, மணல் மூட்டைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில், வெள்ளம் அதிகரித்து வரும் நிலையில், நீர் சூழ்ந்துகொண்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்க, படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 15 படகுகள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை நீர் தேங்கியிருப்பதால், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படாமல் தடுக்கவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கடும் மழை காரணமாக, 4 ஆயிரம் ஏக்கர் வாழை சேதமடைந்துள்ளது நெல் பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலை அருகே, பாலம் ஒன்று இடிந்துவிழுந்துவிட்டது. கடும் மழை காரணமாக, நான்காவது நாளாக, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக