JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதிநிதி ஒருவர் என்னைச் சந்தித்துப் பேசினார் -மனோகணேசன் எம்.பி


முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதிநிதி ஒருவர் தன்னைச் சந்தித்துப் பேசினார் என்று மனோகணேசன் எம்.பி. கூறியுள்ளார். இலங்கையில் உள்ள ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் தொடர்பாக அவரது நிலைப்பாட்டை ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவிக்க வேண்டும் என்றும் மனோகணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக்குழு அறையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரதிநிதி ஒருவர் இரு தினங்களுக்கு முன் என்னைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடுகள் பரிமாறப்பட்டன. பொன்சேகாவின் பிரதிநிதி என்னைச் சந்தித்துப் பேசுகிறார் என்றால் பொன்சேகா தமிழர் தொடர்பில் ஏதோ சொல்லப்போகின்றார் எனத் தெரிகின்றது. சரத் பொன்சேகாவுடனோ அல்லது ஜனாதிபதியுடனோ எனக்குப் பிரச்சினை இல்லை. நான் அவர்களை எதிரிகளாகப் பார்க்கவில்லை. ஆனால் தமிழர்களுக்குப் பிரச்சினைகள் வரும்போது அம்மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றேன். அம்மக்களுக்கு ஆதரவாக நான் குரல் கொடுக்காவிட்டால் அவர்கள் என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதில் அர்த்தமில்லாமல் போய்விடும். ஆனால், தமிழ் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக சுகபோக வாழ்க்கைக்காக அரசுடன் இணைந்துகொண்டு தமிழ் மக்களைப் புறக்கணிக்கின்றனர். இந்நிலையில்தான் சரத் பொன்சேகா பற்றிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர் யுத்தத்தின் பிரதான பங்காளி. தமிழ் மக்களை மீட்பதற்காகவே யுத்தம் செய்யப்பட்டது என்று பொன்சேகா கூறுகின்றார். அப்படியாயின் மீட்கப்பட்ட மக்களை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். இந்நாட்டில் உள்ள தமிழ்பேசும் மக்கள் தொடர்பாக சரத் பொன்சேகா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறவேண்டும். கடந்த இரண்டு நாள்களுக்கு முன் என்னைச் சந்தித்த சரத் பொன்சேகாவின் பிரதிநிதியிடம் தமிழ் மக்கள் தொடர்பான எனது கருத்துகளை முன்வைத்தேன். நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழித்தல், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இல்லா தொழித்தல், முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியமர்த்தல், தமிழர்களுக்குத் தீர்வு வழங்குதல் போன்றவை தொடர்பாக சரத் பொன்சேகா அவரது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் அவரது பிரதிநிதியிடம் கூறினேன் என்றும் மனோகணேசன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010