JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

கொழும்பு மாவட்ட வேட்பாளர் தெரிவில் ஐதேகவிற்கும் தமது கட்சிக்கும் இடையில் முரண்பாடா? : மனோ கணேசன் எம்.பி. விளக்கம்


ஜனநாயக மக்கள் முன்னணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட பொதுத்தோ்தல் வேட்பாளர் நியமனங்களை பங்கிட்டுக்கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது:

ஜனநாயக மக்கள் முன்னணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட நியமனங்களை பங்கிட்டுக்கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத்திலே நேற்று இரவு ரணில், பொன்சேகா, மனோ, கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்ட பேச்சுவார்த்தைகளின் இடையில் மனோ கணேசன், ரவூப் ஹக்கிம் ஆகியோரது கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனம் மாத்திரமே கொழும்பு மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்த போது அதை கோபத்துடன் இடைமறித்த மனோ கணேசன் தாம் இங்கு வந்தது ஆசனங்களை பற்றி பேசுவதற்காக இல்லை என்றும், தமது கட்சியின் பங்களிப்பு இருந்திருக்காவிட்டால் கொழும்பு மாநகரத்தின் ஐந்து தொகுதிகளிலும் ஜனாதிபதி தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியாதென்றும் கூறிவிட்டு கூட்டத்திலிருந்து இடை நடுவில் வெளியேறியதாக பிரபல ஈ-நியூஸ் சிங்கள-ஆங்கில இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ள பரபரப்பு செய்தி தொடர்பில் ஜமமு தலைவர் மனோ கணேசனை தொடர்பு கொண்டு கேட்டப்பொழுதில் அவர் கூறியதாவது,

இச்செய்தி உண்மையானது தான். சரத் பொன்சேகாவை தொடர்ந்தும் எமது கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்று நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, கொழும்பு மாவட்டத்தில் எமது கட்சி சார்பாக கூட்டணியிலே போட்டியிடும் வேட்பாளர் தொகை பற்றிய கருத்து பேசப்பட்டமை துரதிஷ்டவசமானதாகும்.

இதை பேசுவதற்காக நாம் அங்கு போகவில்லை. இன்று காலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரின் அழைப்பின் பேரில் நான் அவரை சந்தித்தபொழுது, ஜேவிபியின் வேட்பாளர்களை கூட்டணி வேட்பாளர் பட்டியலிலே உள்வாங்குவதற்கு உள்ள இயலாமையையே தாம் அவ்விதம் குறிப்பட்டதாகவும், எமது கட்சியின் வேட்பாளர் தொகை பற்றி கருத்துக் கூறவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க அவர்கள் என்னிடம் விளக்கி கூறினார்.

எனவே இத்துடன் இவ்விவகாரம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. எனினும் சிலமணி நேரங்களுக்கு முன்னாலே நடைபெற்ற இந்த கடைசி கலந்துரையாடலின் போது ஐதேக தலைவரிடம் நான் தெரிவித்த கருத்துகளை ஊடகங்களின் மூலமாக தமிழ் மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமையென எண்ணுகின்றேன்.

எமது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி கடந்த மூன்று வருடங்களில் துரித வளர்ச்சியை கண்டுவிட்ட ஒர் தேசிய தமிழ் கட்சியாகும். எமது இன்றைய வளர்ச்சி கட்டத்தை ஐதேக புரிந்துகொண்டு எமக்குரிய அந்தஸ்தை வழங்கவேண்டும். எதிர்வரும் தேர்தலில் நாம் நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

எனவே நாம் இன்று ஓர் கொழும்பு கட்சி அல்ல. ஆனால் கொழும்பு மாவட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருக்கும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். தலைநகர தமிழ் மக்கள் எனக்கு தொடர்ந்து வாக்களித்து, எமது கட்சிக்கு தந்துவரும் உற்சாகத்தினால்தான் இன்று நாம் நாடு முழுக்க தேசிய ரீதியாக செயற்பட முடிகின்றது.

எனவே என்னை வாழ வைக்கும் தலைநகர தமிழ் மக்களை நான் ஒருபோதும் மறந்துவிடமாட்டேன். கொழும்பிலே வாழும் இந்திய வம்சாவளி மற்றும் வடகிழக்கு சார்ந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் தமிழர்கள் என்ற இன அடிப்படையில் எமது கட்சியுடன் உணர்வு பூர்வமாக அணிதிரண்டு உள்ளார்கள் என்பதை பெரும்பான்மை கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின் சுமார் 25 உறுப்பினர்கள் தமது கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, ஆளுங்கட்சியுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள். ஐதேகவுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்த மலையக கட்சிகளும் இன்று அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் நாம் உறுதியுடன் பல்வேறு சவால்களை சந்தித்தப்படி ஐதேக கூட்டணியில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றோம். இதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே ஐக்கிய தேசிய கட்சி எமக்கு கடமைப்பட்டிருக்கின்றது. அரசியல் சவால்கள் என்ற ஆற்றை கடக்கும் வரைக்கும் அண்ணன், தம்பி எனக்கூறிவிட்டு ஆற்றைக் கடந்தபின் அதாவது பாராளுமன்ற தேர்தலின்போது நீ யாரோ நான் யாரோ என ஐதேக கூறுமானால் நாம் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

கொழும்பு மாவட்டத்திலேயுள்ள ஒரு சில ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளின் மீது பேராசை இருக்கின்றது. எமக்கு இரண்டு இடங்களை கொடுத்துவிட்டு தமிழர்களின் மூன்றாவது விருப்பு வாக்கை கவர்ந்துகொள்வது இவர்களது முதல் திட்டம். அது சரிவராவிட்டால் தமிழ் வாக்காளர்களின் மூன்று விருப்பு வாக்குகளுக்கு எதிராக நான்கு அல்லது ஐந்து தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி எமது மக்களின் விருப்பு வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பது இவர்களது இரண்டாவது திட்டம்.

அதாவது தமிழ் மக்களின் கட்சி வாக்குகள் யானை சின்னத்திற்கு வந்து குவியவேண்டும். ஆனால் தமிழர்களின் விருப்பு வாக்குகள் சிதறடிக்கப்பட்டு உரிய தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என்ற இந்த கபடத்தனமான இனவாத ஐதேக அரசியல்வாதிகளை பற்றி எமக்கு தெரியும். இவர்களுக்கு தமது சுயநல நோக்கங்களுக்காக துணைபோகும் சில தமிழர்களையும் எங்களுக்குத் தெரியும். இவர்களை இனிமேலாவது திருந்துங்கள் என நாம் கூறுகின்றோம்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் விருப்பு வாக்குகள் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு கிடைக்கவேண்டும். ஆனால் ஒர் நூறு சிங்கள வாக்குகளைகூட இவர்களால் எங்களுக்கு பெற்றுத்தர முடியாது. இந்த ஒரு வழிப்பாதை மோசடி அரசியலுக்கு நாம் இடங்கொடுக்க மாட்டோம்.

கொழும்பு மாவட்டத்தில் மூன்று தமிழ் எம்பிக்களை நாம் உருவாக்குவோம். ஏனென்றால் தமிழர்களுக்கு துன்பம் வந்தால் அது எனக்குத்தான் வலிக்கின்றது. எனக்கு துணையிருப்பதற்கு இன்னும் இரண்டு எம்பிக்களை நாம் பெறவேண்டும். இது இனவாதம் இல்லை. இது எங்களது உரிமை. அடுத்தவர்களின் உரிமைகளை நாம் ஒருபோதும் அபகரிக்க மாட்டோம்.

அதேவேளையில் எங்களது உரிமைகளின் ஓர் அங்குலத்தையேனும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எனவே ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்கு உரிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு கிடைக்கவேண்டும்.

எங்களது தன்மானத்தை விட்டு விட்டு வேட்பாளர் ஆசனங்களுக்காக எவரிடமும் நாங்கள் மன்றாடுவோம் என்று கிஞ்சித்தும் கருதவேண்டாம் என நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010