யாழ். மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்!
கல்வி கற்கும் மாணவப் பருவத்தின் போது எமக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்காலக் கல்விச் சமூகம் எக்காரணம் கொண்டும் எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக மிக அவதானத்துடன் தமது பணிகளை முன்னெடுத்து வருவதாகச் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.யாழ். மத்திய கல்லூரியில் இன்று காலை இடம்பெற்ற 2009ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்கனவே இக்கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய அமரர் இராஜதுரை பாஷிசப் புலிகளால் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டியதுடன் மறைந்த முன்னாள் அதிபர் கல்லூரியின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தமையை நினைவு கூர்ந்த அதேவேளை, மோதல்கள் நடைபெற்ற காலங்களில் நிலவிய ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் என்றும் தெரிவித்தார்.
தமது தாயார் கல்வி கற்பித்த இக்கல்லூரியின் முன்னேற்றத்தில் தமக்கும் மிகுந்த அக்கறையுள்ளதாகவும், கடந்தகால நிலைமைகள் வேறு தற்போதைய நிலைமைகள் வேறு எனத் தெரிவித்ததுடன் நாட்டின் அரசியல் போராட்டப் பாதையை நோக்கி நகர்ந்த சமயம், தாமும் அதற்குள் ஈர்க்கப்பட்டுக் கல்வியை நிறுத்தி அரசியலில் இணைந்து செயற்பட்டதாகவும் தெரிவித்தார். எமது மக்களுக்குக் கௌரவமான ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதிலேயே தாம் கண்ணும் கருத்துமாக இருப்பதாகத் தெரிவித்ததுடன் இதற்கான தமது அரசியல் பயணத்தில் அனைவரும் இணைந்து ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் அதிபர் அமரர் இராஜதுரையின் நினைவாக யாழ். மத்திய கல்லூரியின் மண்டபம் ஒன்றிற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற தனது கருத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த சமயம் விழாவில் கலந்து கொண்ட மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் மறைந்த அதிபரின் பெயரை அந்த மண்டபத்திற்கு இன்றைய தினமே அமைச்சர் சூட்ட வேண்டும் என்றும், அதற்குப் பொருத்தமான மண்டபம் இருப்பதனையும் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த மண்டபத்திற்கு மறைந்த முன்னாள் அதிபர் இராஜதுரையின் பெயரைச் சூட்டுவதற்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் இன்று அறிவிப்பை வெளியிடுவதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொருத்தமான பிறிதொரு தினத்தில் இதற்கான வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்து அவரது பெயரை உத்தியோகபூர்வமாகச் சூட்டுவதாகவும் தெரிவித்தார்.
யாழ். மத்திய கல்லூரி அதிபர் திரு.ஓங்காரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பல்வேறு பாடசாலை மற்றும் கல்லூரி அதிபர்களும் சமூகமளித்திருந்தனர். இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய கல்லூரி அதிபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்ததன் ஊடாக அவரது பொது வாழ்வு புதிய பரிமாணங்களைத் தொட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன் முன்னர் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த சமயம் இக்கல்லூரியின் புனரமைப்பிற்காக வழங்கிய உதவிகள் அனைத்திற்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
கல்லூரியின் கல்வி விளையாட்டு மற்றும் கலைத் துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை வழங்கிக் கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக