JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 8 டிசம்பர், 2009

கைதடி சித்த போதனா வைத்தியசாலை பாரிய மேம்பாட்டுத்திட்டங்கள். அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா திஸ்ஸ கரலியத்த ஆளுநர் நேரில் பங்குபற்றினார்கள்.

யாழ். கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் புதிதாக மூன்று நோயாளர் தங்குவிடுதி திற்ந்து வைக்கப்பட்டுள்ளதுடன் அம்பிலன்ஸ் வாகனம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தின்கீழ் யாழ். கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் பாரிய மேம்பாட்டுத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் நேரில் சென்று அவற்றை அங்குரார்ப்பணம் செய்துவைத்தனர். இன்று பிற்பகல் கைதடி சித்த போதனா வைத்தியசாலை வளாகத்தை சென்றடைந்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா திஸ்ஸ கரலியத்த ஆளுநர் சந்திரசிறி ஆகியோரை பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் சித்த மருத்துவத்துறை உயரதிகாரிகளும் வைத்தியசாலை சமூகத்தினரும் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பிரமுகர்களுக்கு சம்பிரதாயப்படி மலர்மாலைமரியாதை அணிவித்து பின்னர் விசேட அதிதிகளினால் மங்கல விளக்கேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 17.6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று நோயாளர் தங்கும் விடுதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டதுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் தங்கும் விடுதிகளையும் அதிதிகள் சுற்றிப் பார்வையிட்டனர். தொடர்ந்து முக்கிய நிகழ்வாக கைதடி சித்த போதனா வைத்தியசாலைக்கென வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் புதிதாக அம்புலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கப்பட்டது. மேற்படி அம்புலன்ஸ் வாகனத்தை ஆளுநர் சந்திரசிறி அவர்கள் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடமும் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்களிமும் கையளிக்க அவர்கள் அதனை சித்த வைத்தியத்துறை ஆணையாளர் றமணி குலரத்னவிடமும் கைதடி சித்த போதனா வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சிவசண்முகராஜா பிரேமா ஆகியோரிடமும் கையளித்தனர். சித்த வைத்தியதுறைக்கென யாழ்ப்பாணத்தில் ஓர் அம்புலன்ஸ் வாகனம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வுகளை அடுத்து அதிதிகள் உட்பட அனைவரும் வைத்தியசாலையின் பொதுமண்டபத்திற்கு சென்றதனைத்தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் ஆரம்பமானது. ஆரம்ப உரையாற்றிய சித்த மருத்துவத்துறை ஆணையாளர் றமணி குலரத்ன அவர்கள் கைதடி சித்த போதனா வைத்தியசாலை குறித்த தொடர் விபரங்களை விரிவாகத் தெரிவித்ததுடன் அதன் மேம்பாட்டில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையினையும் தெளிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து உரையாற்றிய யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவபீடாதிபதி வைத்தியர் திருமதி பஞ்சராஜா அவர்கள் இந்த வைத்தியசாலை மூலம் சித்த மருத்துவபீட மாணவர்கள் அடைந்துவரும் பயன்களை எடுத்துக்கூறினார். குறிப்பாக முன்னர் வைத்திய பயிற்சிக்காக பெரும் சிரமத்தின் மத்தியில் கொழும்பிற்கு செல்லவேண்டியிருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. தற்போது மாணவர்கள் அனைத்து மருத்துவ பயிற்சிகளையும் இங்கேயே மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆயினும் ஆய்வுகூட வசதிகள் மட்டும் இன்னமும் பெற்றுத்தரப்படவில்லை என்ற குறையினையும் சுட்டிக்காட்டினார். இவ்வளவு காலம் எமக்கு என்ன தேவையென்றாலும் அதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கே தெரியப்படுத்தி அதன் ஊடாகவே அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்றுவந்ததை சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை.

இந்நிகழ்வில் அடுத்து சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் வைத்தியர் அசோக பீரிஸ் உரையாற்றுகையில் வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் சுதேச வைத்திய அமைச்சினால் 12 திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அதில் முதலாவது திட்டம் கைதடி சித்த போதனா வைத்தியசாலை மேம்பாடே எனத்தெரிவித்தார்.

இன்றைய நிகழ்விற்கு விசேட அதிதியாக அழைக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்கள் அடுத்ததாக உரையாற்றும்போது யாழ். சித்த மருத்துவத்துறையினரின் வேண்டுகோளை ஏற்று மூலிகைப் பயிர் வளர்ப்பதற்கென ஐந்து ஏக்கர் நிலம் வடமாகாண சபையினால் ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றுகையில் தற்போது கிடைக்கப்பெற்றிருக்கும் அனைத்து வளங்களும் எமது மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள வரப்பிரசாதங்களாகும். எதிர்காலத்தில் நாம் ஒன்றுபட்டு ஜனநாயக வழியில் எமது ஆதரவினை சரியான முறையில் வெளிக்காட்டுவதன் மூலம் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனத்தெரிவித்தார்.

கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் மேம்பாட்டுத் திட்டத்திற்கென விசேடமாக வருகை தந்த சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த விசேட உரையாற்றுகையில் முதலில் தன்னிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று ஆய்வுகூடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பலத்த கரகோசத்தின் மத்தியில் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்தில் சித்த வைத்தியத்துறைக்கென நடமாடும் வைத்தியசாலையொன்று நிறுவப்படும். அதற்கென புதிதாக சகல வசதிகளையும் கொண்ட பஸ் ஒன்று வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் நயினாதீவிலும் சித்த மருத்துவமனை நோயாளர் தங்கும் விடுதி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வுகளில் மற்றுமொரு முக்கிய விடயங்களாக ஆயுர்வேத வைத்திய துறையினை ஊக்குவிக்க தெரிவுசெய்யப்பட்டோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து பதிவு பெறாத சித்த வைத்தியர்களுக்கும் பதிவு பெறாத சித்த மருத்துவ நிறுவனங்களுக்கும் பதிவுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் புதிதாக பதிவு பெற்ற சித்த மருத்துவர்களுக்குரிய பதிவுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேற்படி சான்றிதழ்களை சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் வழங்கிவைத்தனர்.

கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் மேம்பாட்டுத்திட்டங்கள் குறித்த இன்றைய அனைத்து நிகழ்வுகளும் வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சிவசண்முகராஜா பிரேமா அவர்களின் நன்றி அறிவிப்புடன் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010