JKR. Blogger இயக்குவது.

வியாழன், 17 டிசம்பர், 2009

சிவாஜிலிங்கம் காட்டமான மடல்


எமது இணையத்தளத்தில் 11-12-2009 ஆம் திகதி வெளியான செய்தி ஒன்றில் தனது பெயரைக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்ததாகக் கூறி, அதற்கு மறுப்புத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பு வைத்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு :

"தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனை திசை திருப்புவதற்காக ஒரு பகுதிதயினரிடமிருந்து சிவாஜிலிங்கம் பணம் வாங்கியுள்ளார் என சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்தார்.

அவருடைய குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். வன்னிப் பகுதியில் போர் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும், முடிவடைந்து மூன்று லட்சம் மக்கள் முள்வேலி முகாம்களில் அகப்பட்டிருந்ததைக் கண்டித்தும் 13 மாதங்களாக இலங்கைக்கு வராமல் இந்தியாவிலும் பிரித்தானியாவிலும் தொடர்ந்து மக்கள் போராட்டங்களை வீதிகளில் இறங்கி நடத்தியவன் நான் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

அது மாத்திரமல்ல, இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே பல போராட்டங்கள் நடத்தியதையும் ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக இந்தியாவில் தங்க அனுமதி மறுக்கப்பட்ட சூழ்நிலையில் 5 தடவைகள் பிரித்தானியாவுக்கும் 3 தடவைகள் சிங்கப்பூருக்கும் ஒரு தடைவ மலேசியாவுக்கும் சென்று இந்தியா திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

தமிழ் மக்களின் மீதான இனப் படுகொலைகளைக் கண்டித்து பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக நடைபெற்ற வீதி மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டேன். பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, கூண்டில் அடைக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டேன்.

எமது மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக 2009 பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமது ஆயுதங்களை 3ஆம் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஊடக அறிக்கை மூலம் கேட்டிருந்தேன்.

அவுஸ்திரேலியாவில் பொங்கு தமிழ் நிகழ்வில் ஆற்றிய உரை சம்பந்தமாக தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, வழக்கை எதிர்நோக்கியவன் நான். சுதந்திர தமிழீழப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்கி தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்ககீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தமை என என்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

கடந்த மாதம் நாடு திரும்பிய பின்னரும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. வன்னிப் போரின் போது 50 ஆயிரம் தமிழ் மக்களைப் படுகொலை செய்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு மனசாட்சியுள்ள தமிழனால் முடியுமா?

வன்னிப் போரில் சிங்களப் போர் வெற்றி நாயகன் தானே என உரிமை கொண்டாடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கும் மனசாட்சியுள்ள தமிழனால் முடியுமா?

இம்மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 22 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் 7 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தோம். ஐந்து பேர் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர்.

ஏனைய ஐந்து பேரும் பொறுத்திருப்போம் என்று கூறிய பொழுது ஈ. பி. ஆர். எல். எப். அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆட்சி மாற்றத்துக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்.

கலந்து கொண்ட 17 பேரில் 2 பேர் பிரதான வேட்பாளர்கள் இருவரில் எவரையும் ஆதரிக்க முடியாது என்ற கருத்தை முன் வைத்தனர். அவர்களில் ஒரு சிலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைக்குமாறு தூண்டிய தமிழ் அரசியல்வாதி யார் என்பதனை நான் அறிவேன். துணிவிருந்தால் அந்த அரசியல்வாதி குற்றச்சாட்டுகளை முன்வைக்கட்டும் என்று சவால் விடுகிறேன்.

சிவசக்தி ஆனந்தனிடம், கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிய வேண்டாம் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். வெகு விரைவில் சிவசக்தி ஆனந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு சிவாஜிலிங்கம் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010