JKR. Blogger இயக்குவது.

வியாழன், 22 அக்டோபர், 2009

செய்தியறிக்கை


எத்தியோப்பியாவில் குழந்தைகள் உணவின்றி வாடுகின்றனர்
எத்தியோப்பியாவில் குழந்தைகள் உணவின்றி வாடுகின்றனர்

எத்தியோப்பியாவில் வறட்சி; உணவு உதவி கோருகிறது அரசாங்கம்

எத்தியோப்பியாவில் அறுபது லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு அவசர உணவு உதவி தேவை என்று எத்தியோப்பிய அரசாங்கம் சர்வதேச கொடையாளிகளைக் கேட்டிருக்கிறது.

நீண்ட வறட்சி காரணமாக கிழக்கு ஆப்பிரிக்காவின் பெருநிலப்பரப்பில் விளைச்சல் நிலங்களும், மேய்ச்சல் நிலங்களும் பாதிக்கப்பட்டுவிட்டன.

ஆனால், எத்தியோப்பியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஏனைய விடயங்களும் காரணம் என பிபிசியின் ஆப்பிரிக்காவுக்கான செய்தி ஆசிரியர் கூறுகிறார்.

இவற்றில் துரிதமான சனத்தொகை வளர்ச்சியும், மற்றும் விவசாய நிலங்களிலேயே மக்களை தங்க வைப்பது என்ற அரசாங்க கொள்கை காரணமாக, விவசாய நிலங்கள் மிகச் சிறிய துண்டுகளாகபிரிக்கப்பட்டமையும் அடங்குகின்றன.

இந்த சிறிய துண்டு நிலங்களால், அவற்றில் பயிரிடுபவர்களுக்கான உணவுகளையே வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.


புவி வெப்பமடைவதைத் தடுக்க அமெரிக்கா மேலும் ஆர்வத்துடன் பங்காற்ற வேண்டும்: ஐ.நா.

வெப்ப வாயு வெளியேற்றத்தில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது
கோபன்ஹேகனில் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் மாநாட்டில் ஒரு உடன்பாடு ஏற்பட வேண்டுமானால், புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா மேலும் ஆர்வத்துடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த உயர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் தொழில்நுட்ப பங்களிப்பு குறித்து ஆராய்வதற்காக டில்லியில் ஆரம்பமான இரண்டு நாள் மாநாட்டில் யுவோ தெ போர் அவர்கள் இவ்வாறு கூறினார்.

வெப்ப வாயுக்களை கணிசமான அளவில் குறைப்பது செல்வந்த நாடுகளின் கடமை: இந்தியா

இந்தியப் பிரதமர்
புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை வெளியேற்றுவதை மிகவும் கணிசமாக குறைப்பது உலக செல்வந்த நாடுகளின் கடமை என்று இந்தியா கூறியுள்ளது.

இத்தகைய வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம் வளரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் சமரசம் செய்ய வேண்டியதில்லை என்பதுதான், இன்றும், இந்தியாவின் கருத்து என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாட்டின் சனத்தொகைக்கு பொருத்தமான வகையில் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதுதான், காலநிலை மாற்றம் தொடர்பில் நீண்ட கால உடன்பாடு ஒன்று ஏற்படுவதற்கான நியாயமான வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


விசாரணை புறக்கணிப்பு செய்யப்போவதாகக் கூறுகிறார் முன்னாள் செர்பியத் தலைவர் கரடிச்

முன்னாள் பொஸ்னிய செர்பியத் தலைவரான ரடோவன் கரடிச்
த ஹேக்கில் இருக்கின்ற போர்க்குற்றத் தீர்ப்பாயத்தில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள தனக்கு எதிரான விசாரணைகளில், தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முன்னாள் பொஸ்னிய செர்பியத் தலைவரான ரடோவன் கரடிச் நீதிமன்றத்துக்கு கூறியுள்ளார்.

தனது தரப்பு எதிர்வாதம் இன்னமும் தயாராகவில்லை என்றும், அதனால் தன்னால் திட்டமிட்ட நேரத்தில் விசாரணையில் கலந்துகொள்ள முடியாது என்றும் எழுத்துமூல அறிக்கை ஒன்றில் கரட்சிக் தெரிவித்துள்ளார்.

1990களில் போஸ்னிய போரில், இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றம் ஆகியவை அடங்கிய 11 குற்றச்சாட்டுகள் கரடிச் மீது தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவர் மறுத்துள்ளார்.

செய்தியரங்கம்
விடுவிக்கப்படவுள்ள முகாம்வாசிகள்
முகாம் வாழ்க்கை முடிவுக்கு வரும் மகிழ்ச்சியில்...

இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்த நடவடிக்கை

இலங்கையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களில் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதற்கு முன்பு விடுவிக்கப்பட்டிருந்தாலும், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த இடங்களைச் சேர்ந்த மக்கள் விடுவிக்கப்படுவதென்பது இதுவே முதல் முறை.

முல்லைத் தீவு, கிளிநொச்சி அல்லாது வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அடங்கலாக நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மாத காலத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக 5960 பேர் வியாழனன்று வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீள்குடியேற்றத்துக்கான ஆரம்ப வைபவங்கள் மன்னாரின் அடம்பன், முல்லைத் தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச பாலிநகர் பாடசாலை, வவுனியா நகரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.


இலங்கையில் மோதல் காலத்தில் மனித குலத்துக்கெதிரான போர்க்குற்றங்கள்: அமெரிக்க அரசுத்துறை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்துடைய இராணுவ நடவடிக்கையின் இறுதி மாதங்களில் நடந்த சம்பவங்கள் மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வெளியுறவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.

யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் என்று வருணிக்கப்படுகின்ற சம்பவங்களில் பெரும்பான்மையானவை மோதலற்ற பிரதேசம் என்று அரசாங்கத்தால் குறிக்கப்பட்டிருந்த இடங்களில் நடந்திருந்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவின் இந்த அறிக்கை முகாந்திரமற்ற ஒன்றாகத் தெரிகிறது என்று கூறியுள்ள இலங்கை அரசாங்கம், பொதுமக்களைக் காப்பாற்றுவதில் ஆயுதப் படையினர் மனசாட்சியுடன் செயல்பட்டனர் என்று கூறுகிறது.


மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வெற்றிகள்

இந்தியாவில் மூன்று மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கின்றன.

அருணாசலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆனால், ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும் அதனால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.

மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 144 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க அவர்களுக்கு மேலும் ஓர் இடம் தேவை.

அருணாசலப் பிரதேசத்தில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. அதற்கு மேலும் ஐந்து இடங்கள் தேவை. ஓம்பிரகாஷ் செளதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளக் கூட்டணி 32 இடங்களிலும், பாஜக நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. யார் ஆட்சியமைப்பது என்பதை முடிவு செய்வதில், சுயேச்சைகள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனத் தெரிகிறது.


பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவருக்கு வாய்ப்பளிப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது

பி.என்.பி. தலைவர் நிக் க்ரிஃபின்
பிபிசி தொலைக்காட்சியின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக லண்டனில் உள்ள பிபிசி தொலைக்காட்சி மையத்துக்கு பிரிட்டனின் தீவிர வலதுசாரிக் கட்சியான பிரிட்டிஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் வருவதையிட்டு அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பி.என்.பி. தலைவர் நிக் க்ரிஃபின் வரும்போது தொலைக்காட்சி மையத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக பாஸிஸ எதிர்ப்பு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசியல்வாதிகளும் பிற முக்கியஸ்தர்களும் பதில் அளிக்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பி.என்.பி. தலைவர் தோன்றுவது என்பது இதுவே முதல் முறை.

வெள்ளையினத்தவருக்கே பிரிட்டன் என்ற வாதத்தை முன்வைத்து அரசியலில் ஈடுபட்டுவரும் பி.என்.பி கட்சி ஐரோப்பிய தேர்தலில் சில ஆசனங்களை வென்றுள்ள நிலையில், அக்கட்சிக்கு நிகழ்ச்சியில் இடம் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என பிபிசி நிறுவனம் வாதிட்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010