JKR. Blogger இயக்குவது.

புதன், 4 நவம்பர், 2009

செய்தியறிக்கை


ஆப்கானில் பிரிட்டிஷ் துருப்பினர்
ஆப்கானில் பிரிட்டிஷ் துருப்பினர்

ஆப்கானில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான் நாட்டு காவலர் ஒருவரால் பிரிட்டனின் ஐந்து பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலும், அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து பிரிட்டன் பயிற்சியளிக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் கூறியுள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் படையினரை கண்டு மிகவும் பயப்படும் நிலையில், அவர்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியமானது என்று கார்டன் பிரவுண் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்ததில் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் துருப்பினர் ஐவரை தாங்கள்தான் கொலை செய்தோம் என்று தாலிபான்கள் கூறியுள்ள நிலையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் காவல்துறையில் ஊடுருவியுள்ளார்கள் அல்லது காவல்துறையில் ஒரு உறுப்பினரை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கார்டன் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு சோதனைச் சாவடியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், பிரிட்டனைச் சேர்ந்த பல இராணுவ வீரர்கள் மற்றும் ஆப்கான் பொலிஸ் அதிகரிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.


தலிபான் வசம் இருந்த பகுதியை மீட்டதாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது

பாகிஸ்தான் இராணுவத்தினர்
பாகிஸ்தான் இராணுவத்தினர்
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானுடனான எல்லையை ஒட்டிய பழங்குடியினப் பகுதியில் தாலிபான் வசமிருந்த ஒரு முக்கிய பகுதியின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்துவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது.

ஆயுததாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுவரும் அரச படையினர், தாலிபான்களின் செயல் மையம் என்று வருணிக்கப்படுகிற சரரோகா பகுதிக்குள் நுழைந்துவிட்டுள்ளனர் என இராணுவம் கூறுகிறது.

அப்பகுதியில் துருப்பினர் ஆயுததாரிகளைத் தேடி விரட்டியடிக்கின்ற நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக இராணுவம் சார்பாகப் பேசவல்ல ஜெனரல் அத்தர் அப்பாஸ் கூறினார்.

இந்த விஷயத்தை பக்கச்சார்பற்ற முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.


குடியேறிகள் சுரண்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்- பான் கீ மூன்

பான் கீ மூன்
பான் கீ மூன்
வெளிநாடுகளில் குடியேறுவோர் சுரண்டல்களுக்கும் வெறுப்புகளுக்கும் ஆளாவதென்பது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

அதென்ஸ் நகரில் குடியேற்றம் தொடர்பான இரண்டு நாள் உலக மாநாட்டில் உரையாற்றிய பான் கீ மூன், உலக பொருளாதாரப் பின்னடைவு விசேடமாக குடியேறிகளை மோசமாகப் பாதித்துள்ளது என்றும், குடியேறிகளால் சொந்த நாட்டுக்கு அனுப்ப முடிந்த பணம் இந்த வருடம் பத்து சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

சமூகத்தில் பதற்றங்களையும் பாரபட்சத்தையும், தீவிரவாதத்தையும் கிளறிவிடுவதற்கான ஒரு விடயமாக குடியேறிகள் பிரச்சினை பயன்படுத்தப்படுவதென்பது நீடிக்கிறது. ஆனால் சமூகத்தில் ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும் குறைவதற்கான வழியாக குடியேற்றத்தைக் காணவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

புவி வெப்பமடைந்துவருவது உலக ஜனத்தொகையில் பத்து சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு குடியேற நிர்பந்திக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை அடக்கியதாக இரான் தொலைக்காட்சி அறிவிப்பு

ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டக்காரர்கள்
இரானின் தலைநகர் தெஹ்ரானில் எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

நாட்டில் இஸ்லாமிய புரட்சியின் போது அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றியதன் முப்பதாவது ஆண்டு நினைவு நிகழ்வினை குறிக்கும் வகையில் அதிகாரபூர்வமான ஒரு பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

இந்த ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சியினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடித் தாக்குதலை போலீஸார் நடத்தியததாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்ச்சைகுரிய அதிபர் தேர்தலில், தோல்வியடைந்த ஒரு வேட்பாளரான மெஹ்டி கரூபியும் பங்கு பெற்றிருந்தார் என்றும் நேரில் கண்டவர்கள் கூறுகிறார்கள்.

இதேவேளை அமெரிக்காவின் முன்னாள் தூதரக வளாகத்துக்கு வெளியே அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்றனர்.

செய்தியரங்கம்

ஜனாதிபதி ராஜபக்ஷ வன்னி விஜயம்

இலங்கை அரச படைகளினால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக வன்னிப்பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், அங்கு இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டிருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமரச் சென்றுள்ள இடம்பெயர்ந்த மக்களையும் அவர் சந்தித்து பேசியிருக்கிறார்.

அவர்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், கஸ்டமான காலம் முடிவடைந்து புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்காகப் பாடுபடும் அரசாங்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதியின் இந்த வன்னி விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், புதிய பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய உள்ளிட்ட உயர் மட்ட அரச அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தார்கள்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


'சரத் பொன்சேகா அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்டார்'

சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினரின் விசாரணைக்கு சமூகமளிக்காமல் இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாக இலங்கை தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கா சென்றிருந்த இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து கிளம்பிவிட்டார் என்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினாலோ வேறு அரச நிறுவனத்தினாலோ அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விபரம் வழங்குவதற்காக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினரால் தொடர்பு கொள்ளப்பட்டிருந்ததாக விபரங்கள் வெளியாகியிருந்தன.

தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா கேள்விகள் கேட்பதற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்திருந்தது.


இத்தாலியில் வகுப்பறையில் சிலுவையை வைத்திருப்பது குறித்த விவகாரம்

வகுப்பறையில் சிலுவை
வகுப்பறையில் சிலுவை
இத்தாலியில் பள்ளிக்கூட வகுப்பறைகளில் கிறிஸ்தவ மதச் சின்னமான சிலுவையை வைத்திருப்பதற்கு எதிராக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு வத்திகானிலுள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் திருச்சபை அதிர்ச்சி அடைந்துள்ளது என அதன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிக்கூடங்களில் சிலுவைகளை வைத்திருப்பது என்பது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் உரிமைகளை மீறும் செய்ல் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இவை குறித்து ரோம் நகரிலிருந்து செய்தியாளர் டங்கன் கென்னடி அனுப்பியுள்ள குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010