செய்தியறிக்கை
| |
இந்திய பாதுகாப்புப் படையினர் |
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் குண்டுத் தாக்குதலில் 6 பேர் பலி
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துள்ள குண்டுத் தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டும் வேறு பலர் காயமடைந்தும் இருக்கின்றனர்.
நல்பாரி நகரில் ஒரு காவல் நிலையத்தின் வெளியே விடப்பட்டிருந்த சைக்கிள்களில் இரண்டு குண்டுகள் வெடித்ததாக பொலிசார் கூறுகின்றனர். உல்ஃபா அதாவது அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத குழுவே இந்தத் தாக்குதலின் காரணம் என்று பழிசுமத்தும் பொலிசார், கடந்த வாரம் இந்தக் குழுவின் இரண்டு தலைவவர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பதிலடியாக அவர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
அஸ்ஸாமில் கடந்த பத்து வருடங்களில் நடந்துள்ள அரசியல் வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தமது மாநிலத்தின் வளங்களை எல்லாம் சுரண்டி எடுத்துக்கொண்டாலும் அப்பகுதியின் பூர்வகுடி மக்களுக்கு நன்மை ஒன்றும் செய்யப்படுவதில்லை என பிரிவினைவாதக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.
இரானின் முன்ணணி சீர்திருத்தவாதிக்கு 6 ஆண்டுகால சிறைதண்டனை
| |
தேர்தலுக்கு பின்னர் ஆர்ப்பாட்டம் |
இரானின் முன்ணணி சீர்திருத்தவாதியும் முன்னாள் துணை அதிபருமான மொஹமத் அப்தாஹிக்கு 6 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜுன் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலை தொடர்ந்து இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைக்க உதவி புரிந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட மொஹமத் அப்தாஹி அப்போது இருந்து சிறையில் இருந்து வருகிறார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்களுக்கு கிட்டதட்ட 15 ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு இந்தியப் பிரதமர் விஜயம்
| |
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் |
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அமெரிக்காவுக்கு விஜயம் செய்கிறார். இந்த விஜயத்தின் போது ஆப்கானிஸ்தான், காலநிலை மாற்றம் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்கள் பேச்சுவார்த்தையில் பிரதானமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு புறப்படும் முன் அமெரிக்க சஞ்சிகை நியூஸ்வீக்கிடம் கருத்து தெரிவித்த டாக்டர் மன்மோகன் சிங், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெற்றி பெற்றால் அது மத்திய மற்றும் தெற்காசியாவுக்கு பேரழிவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக ஒபாமா பங்கேற்ற பிறகு முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, இந்தியா அணுசக்தி தொடர்பாக முன்னாள் அதிபர் புஷ்ஷுடன் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தத்தை இறுதியாக்க முயற்சிக்கும் என கூறப்படுகிறது.
இந்தோனேசிய படகு விபத்தில் பலர் பலி
| |
இந்தோனேசியாவில் படகுவிபத்து |
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப்பகுதிக்கு அருகே நூற்றுக்கணக்கானவர்கள் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தப்பட்சம் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிட்டதட்ட 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டு விட்டதாகவும், எனினும் இன்னும் பலர் காணாமல் போய் இருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாக உள்துறை காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
படகில் 273 பேர் வரையில் பயணிக்கலாம் என்றாலும், எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தெரியவில்லை. இரவு நேரமானதால் தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. பொழுது விடிந்தவுடன் மீண்டும் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
| |
மீனவர் படகு |
மீன்பிடித் தொழில் ஒழுங்கு முறை மசோதா பாதிப்பு ஏற்படுத்தும் - தமிழக மீனவர்கள்
இந்திய நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை மசோதாவை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அம்மசோதா தங்கள் நலனுக்கு எதிரானது என்றும் அது அறிமுகப்படுத்தக்கூடாது என்றும் தமிழக மீனவர் அமைப்புக்கள் கூறுகின்றன.
அம்மசோதாவிற்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறத் துவங்கியுள்ளனர். இந்த மசோதா தங்களை பாதிக்கும் என்றும் தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு. பாரதி கூறுகின்றார்.
குறிப்பாக 12 கடல் மைலுக்கு அப்பால் மீன்பிடிக்கவேண்டுமானால் முன் அனுமதி பெறவேண்டுமென்ற விதி தங்களை பாதிக்கும் என்று பாரதி கூறுகிறார்.
தங்களை சற்றும் கலந்தாலோசிக்காமல் கொண்டுவரப்படவிருக்கிற மசோதாவை முழுமூச்சாக எதிர்க்கப்போவதாகவும், அகில இந்திய அளவில் மற்ற மீனவர்களுடன் ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்தவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சனிக்கிழமை மற்றுமொரு மீனவர் அமைப்பு தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமியிடம் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை அளித்தனர். அப்போது அமைச்சர் இந்த மசோதாவை திமுக அரசு ஏற்காது. இந்தப் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்கு எங்கள் நிலையினைத் தெரியப்படுத்துவோம் எனக்கூறிருக்கிறார்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
25 ஆண்டு காலத்திற்கு பின்னர் கிழக்கு மாவட்ட தமிழ் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர்
| |
விவசாயிகள் |
1985 ம் ஆண்டு காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்த இன வன்முறைகளையடுத்து மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப் பிரதேசமான கெவலியாமடு பகுதியிலிருந்து வெளியேறிய தமிழ் விவசாயிகள் 25 வருடங்களின் பின்பு தற்போது அங்கு திரும்பி மீண்டும் விவசாயச் செய்கையை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பிட்ட 25 வருட காலத்தில் அவ்வப்போது போர் நிறுத்த
உடன்படிக்கைகள் என்றும், சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்றும், சமாதான சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் அந்த பகுதிக்கு செல்வதற்கு அந்த நேரத்தில் கூட அச்சமடைந்தவர்களாக காணப்பட்ட இவ்விவசாயிகள் தற்போது குடும்பத்துடன் அங்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் பாதுகாப்பு உட்பட வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் பேரிலேயே தாம் இங்கு தற்போது விவசாயச் செய்கை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகின்றார்கள் தமிழ் விவசாயிகள்.
இக்கிராமத்தில் தமிழ் விவசாயிகள் விவசாயச் செய்கைக்கு திரும்பியது போல் தமது குடும்பங்களுடன் மீளக் குடியமர வேண்டும் என்ற எதிர் பார்ப்புடன் தாம் இருப்பதாகக் கூறும் அக்கிராமத்தைச் சேர்ந்த சிங்கள பெண்ணொருவர், தமிழ் விவசாயிகளின் காணிகள் சிங்கள இனத்தவர்களினால் அத்து மீறி அபகரிக்கப்பட்டிருந்தால் அவை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மீள பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
மீள்குடியமர்ந்த மக்கள் வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
| |
மீள்குடியேற செல்லும் மக்கள் |
இலங்கையில் கடந்த மே மாதம் வரையில் பல வருடங்களாகப் போர்ப்பிரதேசமாகத் திகழ்ந்த முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்த மக்களை துரித மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் ஆயிரக்கணக்கானவர்கள் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கான போக்குவரத்து உட்பட அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்துள்ளதாக அங்கு சென்றுள்ள தெரிவிக்கின்றார்கள். இருப்பினும் அநேகமானவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கூரைத்தகடுகளைப் பயன்படுத்தி தற்காலிகக் கொட்டில்களை அமைத்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கூரை விரிப்புகளை நிலத்தில் விரித்து அதில் வசித்து வருவதாகவும், வீட்டுத்திட்டத்தின் மூலம் வீடுகளை அமைப்பதற்கு வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என அவர்கள் கூறுகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கும் வவுனியாவுக்கும் இடையே பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி அந்தப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வவுனியா நகருக்கு தினசரி வந்து செல்கின்றார்கள்.
மீள்குடியேற்றம் தொடர்பில் இம்மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக