பள்ளிவாயில்முன் ஆர்ப்பாட்டம் : மருதானை முஸ்லிம்கள் எதிர்ப்பு

பள்ளிவாயிலை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என மருதானை முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் அவர்கள் எதிர்த்தனர்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு மருதானை பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
இதன்போது அங்கு கூடிய அப்பகுதி முஸ்லிம் மக்கள், ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஜனநாயகத்துக்காக இவர்களால் எவ்வாறு குரல்கொடுக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
பின்னர் அங்கு விரைந்த மருதானை பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் இரு தரப்பினரையும் அங்கிருந்து களைந்து செல்லுமாறு கூறினர்.
இந்நிலையில், அரசியல் லாபம் தேடுவதற்காக எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் பள்ளிவாயிலுக்கு முன்பாக நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக