ஏழையைப் போல இருங்கள்: இந்திய மாணவர்களுக்கு ஆஸி. அறிவுரை
மெல்போர்ன்: தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏழைகளை போல இருங்கள். பணம், நகை உள்ளிட்டவற்றை வைத்திருப்பது போல காட்டிக் கொள்ளாதீர்கள், அடக்கம், ஒடுக்கமாக இருங்கள் என்று இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாவதாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இதில் பெரும்பாலானவை இரவு நேரத்தில் தனியாக செல்லும் மாணவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் தான் நடப்பதாக ஆஸ்திரேலிய போலீசார் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், இதுபோன்ற தாக்குதலில் இருந்து இந்திய மாணவர்கள் தப்பிக்க, விலை உயர்ந்த பொருட்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஏழைகளைப் போன்ற தோற்றத்துடன் வளைய வருமாறு விக்டோரியா மாகாண போலீஸார் இந்தியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
இதுகுறித்து விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் சிமோன் ஓவர்லேண்ட் இதுபற்றி பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
இந்திய மாணவர்கள் தங்கள் மீதான வன்முறை யை தவிர்க்க, தங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு ஏழைகளைப் போல காட்டிக்கொள்ளுங்கள்.
விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் உபகரணங்கள், ஐபாட், கடிகாரம், ஆபரணங்கள் போன்றவற்றை வெளியே தெரியும் வகையில் வைத்திருக்காதீர்கள். இதன் மூலம் ஓரளவு வழிப்பறி போன்ற வன்முறை தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.
நேரம் கடந்த பயணங்களை தவிர்க்க எங்கு பாதுகாப்பாக இருக்க முடியுமோ அங்கேயே தங்கிவிடலாம். சர்வதேச அளவில் பெரிய இனப் பிரச்னைகளை கிளப்பும் இந்த வன்முறை தாக்குதல்கள் சமாளிக்க மாணவர்களும் தங்கள் தரப்பில் சில முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக