JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

செய்தியறிக்கை


வாகன தயாரிப்பு நிறுவனமான டொயொடோ சிக்கலில்
வாகன தயாரிப்பு நிறுவனமான டொயொடோ சிக்கலில்

டொயொட்டோ நிறுவனம் மிகப்பெரும் சிக்கலில்

உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான டொயொட்டோ, தமது வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க உதவும் ஆக்ஸிலரேட்டர் பெடல்களில் பிரச்சினைகள் இருந்ததால் எண்பது லட்சம் வாகனங்களை மீள்ப்பெற எடுத்த முடிவுக்கு பிறகு, அதற்கு மேலும் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்று இயற்கை வாயு ஆகியவற்றின் கலப்பில் ஓடும் டொயொட்டோவின் புதிய அறிமுகமாக பிரியஸ் எனும் மாடல் கார்களின் பிரேக்குகளில் பிரச்சினை இருப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

அந்த வகையான காரின் பிரேக் செயற்பாட்டின் வடிவமைப்பை தாங்கள் மாற்றியமைத்துள்ளதாகக் கூறும் டொயொட்டோ, ஏற்கனவே சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களை எப்படி சரி செய்வது என்பது தொடர்பிலான நடவடிக்கைகளும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த சிக்கல் பாதுகாப்பு தொடர்பான அபாயம் ஏதும் கிடையாது என்றும் அதை சுலபமாக சரி செய்துவிடலாம் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.

ஏற்கனவே ஓடிக் கொண்டிரும் தமது வாகனங்களை திரும்பப் பெற நேர்ந்தது அந்த நிறுவனத்துக்கு இரண்டு பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.


இராக் தேர்தல் நடைமுறைகளில் மேலும் பாதிப்பு

சதாம் ஹூசேனின் பாத் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக அடுத்த மாதம் நடக்கவுள்ள இராக் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இராக் தேர்தல் சுவரொட்டிகள்
இராக் தேர்தல் சுவரொட்டிகள்

வேட்பாளர்களுக்கு எதிரான தடை ரத்து செய்யப்பட வேண்டும் என்று இது பற்றிய முறையீட்டை விசாரித்த குழு தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த தடை நீடிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இந்த தடை தமக்கு எதிரானது என்று சுன்னி இன அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி விவாதிக்க ஒரு சிறப்பு நாடாளுமன்ற விவாதம் தேவை என்று பிரதமர் நூரி அல் மாலிகி கோரியுள்ளார். இந்த பிரச்சினையானது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்பப் பணிகளை தடம்புரளச் செய்யக் கூடும் என அங்குள்ள பிபிசி நிருபர் கூறுகிறார்.


பாகிஸ்தான் குண்டுவெடிப்பு தொடர்பில் 35 பேர் கைது

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த புதன்கிழமையன்று மூன்று அமெரிக்க இராணுவத்தினர் பலியாக நேர்ந்த தாலிபான்களின் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தாங்கள் 35 பேரை தடுத்து வைத்துள்ளதாக பாகிஸ்தானின் காவல்துறை தெரிவித்துள்ளது.

தமது பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானின் துணை இராணுவப் படையினருக்கு பயிற்சி அளித்து வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பாகிஸ்தானின் குண்டுவெடிப்பில் 70 பேர் பலி
பாகிஸ்தானின் குண்டுவெடிப்பில் 70 பேர் பலி

அமெரிக்கர்கள் பயணித்துக் கொண்டிருந்த அந்த வாகனம் குறிப்பாக திட்டமிட்டு குண்டுதாரியால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த வாகனத்தின் பயணம் குறித்த தகவல்கள் முன்னரே கசிந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்தக் குண்டுத் தாக்குதலில் பள்ளிக்கு செல்லும் மூன்று மாணவிகளும் ஒரு பாகிஸ்தானிய பாதுகாப்பு படை வீரரும் கூட பலியாயினர்.

செய்தியரங்கம்
மும்பை தாக்குதல்கள் இந்திய-பாக் உறவை தற்காலிகமாக முறித்தன
மும்பை தாக்குதல்கள் இந்திய-பாக் உறவை தற்காலிகமாக முறித்தன

பாகிஸ்தானுடனான பேச்சுக்களை தொடர இந்தியா முடிவு

இந்தியாவின் மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்தியா திட்டமிட்டுள்ளது.

இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர் நிலையிலான பேச்சுவார்த்தையைத் துவக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். பயங்கரவாதம் உட்பட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேசப்படும் என இந்திய ஊடகங்களுக்கு மற்ற அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை நடத்தப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியா எதைப்பற்றிப் பேசத் தயாராக உள்ளது என்பது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டிருப்பாதக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக, இந்தியாவின் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமத் குரேஷி, பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் இந்தியாவிடமிருந்து கிடைத்தபிறகு, தேதி முடிவு செய்யப்படும் என்றும், எல்லாப் பிரச்சினைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் பேசித் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காஷ்மீர் உள்பட இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவார்த்தை துவங்கியது. ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பேச்சுவார்த்தையை இந்தியா இடைநிறுத்தியது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், அவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்றும் இந்தியா கூறிவந்தது.

இன்னும் இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பகத்தன்மை ஏற்படாவிட்டாலும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர வேண்டும் என்ற விருப்பம், இரு அரசுகளிடமும் இருப்பதாகக் கருதப்படுகிறது.


இலங்கையில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை--மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இடம்பெற்ற முதல் சுதந்திர தின கொண்டாட்டங்கள் வியாழனன்று காலை கண்டியில் இடம்பெற்றன.

வரலாற்று பிரசித்தி பெற்ற கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நடைபெற்ற நாட்டின் 62 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஒரே நாடு, ஒரே மக்கள் என்பதே தமது தாகம் எனக் குறிப்பிட்டார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இந்த விழாவில் நாட்டின் முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை சார்ந்த உயரதிகாரிகள், அமைச்சர்கள், அரச முக்கியஸ்தர்கள், ராஜதந்திரிகள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டார்கள். தமது நாட்டின் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்த ஜனாதிபதி இலங்கையில் சிறுபான்மையினர் என்று எவருமே கிடையாது என்கிற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

கடந்த மே மாதம் வரையில் யுத்த பிரதேசமாகத் திகழ்ந்த முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய வன்னிப்பிரதேசத்தின் பல இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும், இராணுவ முகாம்கள், காவால் நிலையங்கள் என்பனவற்றிலும் சுதந்திர தின வைபவங்கள் நடைபெற்றன. தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

முல்லைத்தீவு நகரில் முக்கிய இராணுவ தளத்தில் இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ தளபதியுடன் முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் கலந்து கொண்டார். கிளிநொச்சி அரச செயலகத்திலும், மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


நேபாள குழந்தைகள் தத்து கொடுக்கப்படுவதில் மோசடி

சரவதேச அளவில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை கண்காணிக்கும் உலக அமைப்பு, நேபாளத்திலிருந்து வெளிநாடுகளுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை நிறுத்திவைக்கும்படி பரிந்துரை செய்துள்ளது.

நேபாள குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதனால் இந்த நடைமுறையை நிறுத்தவேண்டும் என்றும் இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளை விட நேபாளத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு தான்.

தத்து கொடுக்கப்பட்ட நேபாள குழந்தைகளில் சிலர்
தத்து கொடுக்கப்பட்ட நேபாள குழந்தைகளில் சிலர்

ஆனால் சமீபகாலமாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள்.

உலக அளவில் ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு தற்போது வெளியிட்டிருக்கும் வரைவு அறிக்கையில், நேபாளத்தில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் சர்வதேச தரத்தின் கீழ் அமையவில்லை என்று கூறியுள்ளது.

நாடுகளுக்கிடையில் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை முறைப்படுத்துவதற்காக 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹேக் ஒப்பந்தத்தில் நேபாளமும் கையொப்பமிட்டுள்ளது. ஆனாலும் தத்து கொடுக்கப்படும் குழந்தையின் நன்மையை கருத்தில் கொள்ளும் வகையில் நேபாள அரசு செயற்படவில்லை என்றும், குழந்தைகள் பலவந்தமாக கடத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் பிறகு நாடு கடத்தப்படுவதையும் நேபாள அரசாங்கம் தடுக்கத்தவறிவிட்டதாகவும் இந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010