JKR. Blogger இயக்குவது.

சனி, 31 அக்டோபர், 2009

யுவராஜ் அதிரடி: இந்தியா அசத்தல் வெற்றி


டில்லியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் யுவராஜ், தோனியின் சூப்பர் ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்றது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. மூன்றாவது போட்டி டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடந்தது.

மூன்றாவது முறை:
இத்தொடரில் மூன்றாவது முறையாக “டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் டிம் பெய்ன், ஷான் மார்ஷ், வேகப்பந்துவீச்சாளர் ஹில்பெனாஸ் மூவரும் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக முறையே கிரகாம் மானவ், ஹென்ரிக்ஸ், போலிங்கர் தேர்வு செய்யப்பட்டனர்.

நிதான துவக்கம்:
ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் பாண்டிங், வாட்சன் களமிறங்கினர். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், நிதானமாக ரன் சேர்த்தனர். முதல் 16 ஓவர் வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

யுவராஜ் திருப்பம்:
இந்நிலையில் 17வது ஓவரை வீசிய யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் சிக்கிய வாட்சன்(41), கேப்டன் தோனியின் துடிப்பான “ஸ்டம்பிங்கில்’ அவுட்டானார்.

பாண்டிங் அரைசதம்:
பின்னர் மைக்கேல் ஹசியுடன் இணைந்த பாண்டிங், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருநாள் அரங்கில் தனது 72வது அரைசதம் கடந்தார். இவர் 4 பவுண்டரி உட்பட 59 ரன்கள் சேர்த்த நிலையில், ரவிந்திர ஜடேஜா சுழலில் வீழ்ந்தார். அடுத்து வந்த காமிரான் ஒயிட் (0) ஏமாற்றினார்.

ஹசி அபாரம்:
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கேல் ஹசி, ஒருநாள் அரங்கில் தனது 27வது அரைசதம் பதிவு செய்தார். இவருடன் இணைந்த வோஜஸ் (17), ஹென்ரிக்ஸ் (12) நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. மைக்கேல் ஹசி (81), மிட்சல் ஜான்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சுழலில் அசத்திய ரவிந்திர ஜடேஜா அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினர்.

திணறல் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சேவக் துவக்கம் கொடுத்தனர். சொந்த ஊரில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சேவக் (11), ஜான்சன் வேகத்தில் போல்டானார். அவசரப்பட்ட சச்சின் (32), ரன்-அவுட்டானார். மற்றொரு டில்லி வீரர் காம்பிர் (6) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.

சூப்பர் ஜோடி:
பின்னர் கேப்டன் தோனி-யுவராஜ் சிங் இணைந்து அருமையாக ஆடினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ், வோஜஸ் வீசிய 35வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து, ஒருநாள் அரங்கில் தனது 42வது அரைசதம் பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தோனி, ஒருநாள் அரங்கில் தனது 33வது அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்த நிலையில், யுவராஜ் (78), ஹென்ரிக்ஸ் பந்தில் சிக்கினார்.

இரண்டாவது வெற்றி:
பின்னர் இணைந்த சுரேஷ் ரெய்னா-தோனி ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்திய அணி 48.2 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது. இதன்மூலம் ஏழு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. கேப்டன் தோனி (71), ரெய்னா (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010