JKR. Blogger இயக்குவது.

வியாழன், 31 டிசம்பர், 2009

80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் ஏகாதிபத்தியவாதத்திற்கு முடிவுகட்டலாம்- எதிரணியின் வேட்பாளர் சரத் பொன்சேகா


ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களிடமிருந்து 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டால் ஊழல் மோசடி மிகுந்த ஏகாதிபத்தியவாதத்துக்கு முடிவு கட்டிவிடலாம். அத்துடன், ஆளும்தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்டுப்பணமும் இல்லாமல் போகும். எனவே, நல்லாட்சியை நோக்கிய எமது பயணத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில் அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்கள் எதிர்பார்த்த சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஆனால், நாட்டுக்கு தேவையான ஜனநாயகமும் சமாதானமும் உறுதிப்படுத்தப்படுவதற்கு பதிலாக துர்நாற்றம் வீசுகின்ற கழிவுகளே குன்றுகளாக குவிந்து கிடக்கின்றன. இந்த கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை மேற்கொள்ளும்போது எனது கைகளும் சேறாகும் என்பதை உணர்ந்துள்ளேன். இருந்தும் அது குறித்து நான் கவலைப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி மக்கள் பிரிவு அமைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகா இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன்

எனது 40 வருட இராணுவ சேவை காலத்தில் நான் அரசியலுக்குள் வருவேன் என்பதை சிந்தித்திருக்கவில்ல. சீருடை அணிந்த இராணுவ அதிகாரியாக அதுவும் அரச ஊழியராகவே இருந்து இறுதியில் மக்களின் எதிர்பார்ப்பான நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு எனக்கு அளித்திருந்த பொறுப்பையும் நிறைவேற்றி இருக்கின்றேன். இவ்விடயங்களை மக்கள் நன்றாக அறிந்திருக்கின்றனர். எனினும், இந்நாட்டுக்கு தேவையான வேறுபல எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

வெளியாரை திருப்திப்படுத்தும்மீள்குடியேற்ற நடவடிக்கை

ஜனநாயகம், சமாதானம், சகவாழ்வு என்பவற்றுக்கான அடித்தளம் இடப்படவில்லை. அதுமட்டுமல்லாது யுத்தத்தினால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ்மக்களின் நிலைமைகள் உணர்வு பூர்வமாக அணுகப்படவில்லை. அவர்களது மீள்குடியேற்ற நடவடிக்கை எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களுக்கான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அந்த மக்கள் பலவந்தமாகவும் அரசாங்கத்தின் தனிப்பட்ட தேவைக்காகவுமே மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவையனைத்தும் வெளியாரை திருப்திப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாகின்றது.

குடும்ப அபிவிருத்தியேபிரதானம் நாட்டின் அபிவிருத்தி குறித்து சிந்திக்காதவர்கள் குடும்ப அபிவிருத்தியையே பிரதானமாக கொண்டு தங்களது ஏகாதிபத்திய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த எமக்கு அபிவிருத்தி என்ற பேரில் பூச்சாண்டி காட்டினர். யுத்த நடவடிக்கைகளின் போது தம்மை அர்ப்பணித்து நாட்டுக்காக போராடிய வீரர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இருக்கின்ற இராணுவ வீரர்கள் அங்கவீனமுற்றோர் தொடர்பில் இன்றைய அரசாங்கம் எந்தவிதமான அக்கறையும் கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் சிந்திக்கவேண்டிய தேவை எமக்கு இருந்தது. எனினும், அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை.

என்னை அர்ப்பணித்துள்ளேன்

இந்த சந்தர்ப்பத்தில்தான் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மனோ கணேசன் எம்.பி. மற்றும் ரவூப் ஹக்கீம் எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வரிசையில் உள்ள 12க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஊழல் மோசடி மிக்க இந்த அரசாங்கத்திற்கு முடிவு கட்டுவதுடன் மக்களுக்கு என்னால் முடியுமான சேவையை செய்வதற்கு என்னை அர்ப்பணித்துள்ளேன்.

துர்நாற்றக் கழிவுக் குன்றுகள்

இந்த நாட்டில் கடந்த 4 வருடங்களாக சேர்க்கப்பட்ட துர்நாற்றக் கழிவுக் குன்றுகளை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. இந்த பணியில் இறங்கியிருக்கும் என்மீது அரசாங்கம் சேறுபூசிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், ஆளும்கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரசார மேடைகளில் எதிர்க்கட்சியினரால் தனக்கு சேறுபூசப்படுவதாக கத்திக் கொண்டிருக்கிறார். நாம் இதுவரையில் அவர் மீது சேறு எதுவும் பூசவில்லை. நாட்டில் நடக்கின்ற ஊழல் மோசடிகள், வீண்விரயங்கள் குறித்து பகிரங்கப்படுத்துவது எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமையாகும். அதனை மேற்கொள்ளும்போது தனக்கே சேறுபூசப்படுவதாக கூறிக்கொள்வதற்காக எம்மால் ஒன்றும் சொல்லமுடியாது.

அரசியல் பழிவாங்கல்

நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றுகின்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை கடத்திச் சென்று பாதுகாப்பு செயலாளரின் முன்னால் நிறுத்தி அவரை அச்சுறுத்தியுள்ளமையானது மிகவும் மோசமான விடயமாகும். அதேபோல், எனது பிரசார மேடையில் தோன்றிய வண. தம்பர அமில தேரரை கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கல் ஆகும். இது இவ்வாறிருக்க இன்னும் பத்து ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான அச்சுறுத்தல்கள் அநாகரிகமான நடவடிக்கைகளை மேற்கொள்வது நியாயமான தேர்தலுக்கு செல்வதற்காக அல்ல என்பது நிரூபணமாகின்றது. அதுமட்டுமல்லாது தேர்தல்களை நிறுத்தி பலவந்தமாக பதவியை அடைவதற்கே ஆளும்தரப்பு வேட்பாளர் முயற்சிக்கின்றார்.

மங்கள தோல்வியடையவில்லை

அரசாங்கத்தின் இந்த அநியாயங்களை பொறுத்துக் கொள்ள முடியாதமையாலேயே மங்கள சமரவீர எம்.பி. தனது பதவியையும் துறந்து கட்சியில் இருந்து வெளியேறினார். இவர்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பாடுபட்டவர். இதனை மறந்த மஹிந்த ராஜபக்ஷ, மங்கள சமரவீர எம்.பி.யை துச்சமாக நினைத்து அவரை வெளியேற்றி விட்டார். மங்கள எம்.பி.யினால் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு தேர்தலும் தோல்வியடையவில்லை. வெற்றி மாத்திரமே அவருக்கு கிடைத்தது. அந்த வகையில் அவர் இன்று என்னுடன் இணைந்திருப்பது எனது வெற்றியையும் உறுதிபடுத்தியிருக்கின்றது. மங்கள எம்.பி.யை வெளியேற்றிய ராஜபக்ஷ நிருவாகம் போதைவஸ்து வியாபாரிகளையும் ஊழல் மோசடிக்காரர்களையுமே இன்றும் அருகில் வைத்து கொண்டு செயற்படுகின்றது. இதற்கு முடிவு கட்டப்படவேண்டும்.

தொலைகாட்சியில் மாத்திரமே அதிகாரி

என்மீது சேறுபூசியும் விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்ற ஆளும்கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, எனக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதை தொடர்ச்சியாக கூறி வருகிறார். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் எனக்கு இராணுவத்தை வழிநடத்தக் கூடிய தலைமைத்துவம் இருக்கின்றது என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளேன். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவினால் தொலைக்காட்சி நாடகத்தில் மாத்திரமே இராணுவ அதிகாரியாக தோன்ற முடியும் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டமைக்கு நாமே காரணம். ஆனால், அந்த வெற்றி தனக்கே உரித்தானது என மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இது குறித்து மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

சிறுபான்மையினரை வென்றுவிட்டோம்

எமது பயணத்தின் குறுகிய காலத்திற்குள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக்கொண்டு விட்டோம். அவர்களது ஒட்டுமொத்த வாக்குகளும் எமக்கே என்பது இப்போதே உறுதியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி மாத்திரமே சேவையில் இருக்கும் பின்தங்கிய பிரதேசங்கள் மற்றும் கிராமங்களுக்கு எமது பிரசார நடவடிக்கைகள் சென்றடையவில்லை என்றும் அதனால், கிராமத்தவர்களின் வாக்குகள் எமக்கு கிடைக்கப்போவதில்ல என்றும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது பிரசார பயணம் கிராமங்களுக்கும் செல்லும் என்பதையும் அவர்களின் மனங்களையும் வெல்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், எமது பிரசாரங்கள் கிராமங்களுக்கு சென்றடைய இங்கே கூடியிருக்கும் ஒவ்வொருவரும் உதவி புரிவர் என நம்புகின்றேன். இன்று நாம் நாட்டின் அநேகமான பகுதிகளை வென்றுவிட்டோம் என்றே கூறவேண்டும்.

வெற்றி நிச்சயம்

வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்களில் 80 வீதமானோர் வாக்களிப்பார்களேயானால் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதுடன் மோசடி மிக்க ஏகாதிபத்திய அதிகாரத்தையும் இல்லாதொழிக்க முடியும். அத்துடன், ஏகாதிபத்தியத்திற்கு சொந்தமான ராஜபக்ஷவின் கட்டுப்பணத்தையும் அவர் மீளப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு செய்ய முடியும்.

நல்லெண்ணம் கிடையாது

எந்தவொரு நல்ல அரச தலைவரும் நாட்டு மக்களிடமிருந்து 80 வீதமான வாக்களிப்பை மிகவும் விரும்புவõர். மகிழ்ச்சியடைவார். ஆனால், இன்றைய அரச தலைவருக்கு 80 வீதமான வாக்குகளை மக்கள் அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கிடையாது. அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் பயன்படுத்தி வாக்கு வீதத்தை தடுப்பதற்கு நினைப்பதானது ஒரு நாட்டின் அரச தலைவருக்கு பொருத்தமானது அல்ல. எனவே, இந்நாட்டுக்கு தகுதியான தலைவர் யார் என்பதை இந்நாட்டு மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010