ஜனாதிபதி முன்னிலையில் யாழ். மாநகரசபை முதல்வர் பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் யாழ். மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைவரும் இன்றையதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து தமது பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற சிறப்பான நிகழ்விலேயே யாழ். மாநகர முதல்வராக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவும் பிரதி முதல்வராக துரைராஜா இளங்கோவும் ஏனைய உறுப்பினர்களான முருகையா கோமகன் மனுவல் மங்களநேசன் மொகமட் ரமீஸ் கிரேசியன் மீராசாகிப் முஸ்தபா மாணிக்கம் கனகரட்ணம் சுந்தர்சிங் விஜயகாந்த் றூமி பதூர்தீன் அஜ்மீன் அஸ்பர் சுவிகரன் நிசாந்தன் அந்தோனிப்பிள்ளை கிளாபோடேசியஸ் ஆகியோருடன் சுயேட்சைக்குழு ஒன்று சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுல்தான் சுபியான் ஆகியோரே பதவியேற்றவர்களாவர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் பதவியேற்ற முதல்வர் பிரதி முதல்வர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் வடக்கின் வசந்தத்தில் யாழ். மாநகரசபையின் மேம்பாடு முக்கிய இடத்தினை வகிக்கும் எனத்தெரிவித்துக்கொண்டார். மேலும் வடக்கின் ஏனைய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விரைவிலேயே நடத்தப்படும் என அறிவித்ததுடன் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் வெகுவாகப் பாராட்டினார்.
பதவிப்பிரமாணம் மேற்கொண்டதன் பின்னர் இந்நிகழ்வில் முக்கிய உரையாற்றிய யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் ஒரு தந்தையிடம் பிள்ளை எவ்வளவு உரிமையுடன் தனது தேவையினை கேட்டுப் பெற்றுக்கொள்ளுமோ அதே உரிமையுடன் யாழ். மக்கள் சார்பில் ஜனாதிபதியிடம் எமது தேவைகளை கேட்டுக்கொள்ளுகின்றோம் எனக்கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் தனது அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் கிடைக்கும் என பலத்த கரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்துக்கொண்டார்.
இன்றைய நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா சுசில் பிரேம ஜெயந்த் நிமால் சிறிபால டி சில்வா ரிசாட் பதியுதீன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோருடன் சர்வமதத் தலைவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த பல்துறை சார்ந்த பிரமுகர்களும் பெருமளவில் பங்குகொண்டமை விசேட அம்சமாகும்





0 கருத்துகள்:
கருத்துரையிடுக