பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை இதுவரை கையளிக்கவில்லை: இந்திய புலனாய்வு பிரிவு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கையளிக்கப்படவில்லை என்று இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று இலங்கை அரசு அறிவித்தவுடன் அவரது இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் ஊடாக இலங்கை அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது இறப்புச் சான்றிதழ் இதுவரை சி.பி.ஐ.க்கு கிடைக்கவில்லை என்றும் மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
அதில்,பிரபாகரன் இறந்ததாக தகவல் வந்ததை அடுத்து உரிய வழிகளில் இலங்கைக்கு தகவல் அனுப்பி அவருடைய இறப்பு சான்றிதழை கேட்டோம். இந்திய வெளியுறவு துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இதுவரை பிரபாகரன் மரண சான்றிதழை இலங்கை அரசு தரவில்லை. இதற்காக இன்று வரை காத்திருக்கிறோம். மரண சான்றிதழை பெறுவதற்கு அதற்குரிய வழிமுறைகளின்படி தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த தடா கோர்ட்டில் அனுமதி பெற்று தேவையான விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.
இதில் மரண தண்டனை பெற்ற பேரறிவாளன், சுகந்த ராஜா, ஸ்ரீஹரன், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர்.
மற்ற குற்றவாளிகள் ரவிச்சந்திரா, பிரகாசம் ஆகியோர் மதுரை சிறையில் உள்ளனர் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் பொட்டு அம்மானும் சேர்க்கப்பட்டார்.
இந்த இருவரும் பிடிபடாததால், இவர்கள் இருவரும் வழக்கிலிருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு தனி வழக்காக மாற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை கூறியது. இதையடுத்து வழக்கை முடிக்க மரணச் சான்றிதழைக் கோரியுள்ளது இந்திய அரசு. ஆனால் இதுவரை அதுகுறித்து இலங்கை அரசு பதிலளிக்காமல் மெளனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக