பெங்களூரு அணி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஐ.பி.எல்., அணிகளுக்கு சோகமே மிஞ்சியது. நேற்று நடந்த “சூப்பர்-8′ போட்டியில் கும்ளே சுழலில் கலக்க, பெங்களூரு அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இத்தொடரில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ், டில்லி, பெங்களூரு ஆகிய இந்தியாவின் மூன்று ஐ.பி.எல்., அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்து, வெளியேறின.
சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று இரவு பெங்களூருவில் நடந்த “சூப்பர்-8′ போட்டியில், “பி’ பிரிவில் உள்ள இந்தியாவின் ஐ.பி.எல்., அணிகளான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இதில், பெங்களூரு அணி அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. டில்லி அணி கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது.
பெங்களூரு அணியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட காலிஸ் இடம் பெறவில்லை. டாஸ் வென்ற கேப்டன் கும்ளே சற்று வித்தியாசமாக பீல்டிங் தேர்வு செய்தார்.
சேவக் அதிரடி:
டில்லி அணிக்கு சேவக் அதிரடி துவக்கம் தந்தார். பிரவீண் குமார் வீசிய இரண்டாவது ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். கேப்டன் காம்பிர்(11) ஏமாற்றினார். சேவக் 29 பந்தில் 47 ரன்கள்(6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசிய நிலையில் அவுட்டானார். பெங்களூரு அணியின் பீல்டிங் படுமட்டமாக இருந்தது. தில்ஷன் கொடுத்த சுலப “கேட்ச்’ வாய்ப்பை பிரவீண் குமார் கோட்டை விட்டார். இதே போல விராத் கோஹ்லி “ஓவர் த்ரோ’ செய்து வெறுப்பேற்றினார்.
கும்ளே கலக்கல்:
இந்த நேரத்தில் பந்துவீச வந்த கும்ளே நிலைமையை மாற்றினார். நேற்று 39வது பிறந்தநாள் கொண்டாடிய இவர், சுழலில் கலக்கினார். தனது முதல் ஓவரில் தினேஷ் கார்த்திக்கை(2) வெளியேற்றினார். அடுத்த ஓவரில் தில்ஷனை(20) அவுட்டாக்கினார். பின்னர் ஒவேஸ் ஷா(17) விக்கெட்டையும் கைப்பற்றி, போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினார். டில்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு தரப்பில் கும்ளே அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
டெய்லர் அசத்தல்:
அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு டிராவிட்(32), ரோஸ் டெய்லர்(65), விராத் கோஹ்லி(24) கைகொடுத்தனர். 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. இதையடுத்து “பி’ பிரிவில் தலா 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களை பெற்ற விக்டோரிய, கோப்ராஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. பெங்களூரு, டில்லி அணிகள் வாய்ப்பை இழந்தன. ஏற்கனவே டெக்கான் சார்ஜர்ஸ் வெளியேறிய நிலையில் இத்தொடரில் பங்கேற்ற மூன்று ஐ.பி.எல்., அணிகளும் ஏமாற்றம் அளித்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக