JKR. Blogger இயக்குவது.

சனி, 30 ஜனவரி, 2010

பொதுத்தேர்தலில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் அரசியல் தீர்வு குறித்து ஆலோசனை நடத்தப்படும்: மஹிந்த


எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் என் டி டி வி க்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்டபோதே மஹிந்த ராஜபக்ச இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்கவேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 வது அரசியலமைப்பை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது.

எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான்மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் உள்ளனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, வடக்குகிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010