ஆஸியில் மேலும் இரு இந்திய மாணவர் மீது தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் மீண்டும் இரண்டு இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மெல்பேர்னில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தலநகர் டில்லியிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன் மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
சில வாரங்களுக்கு முன் மெல்பேர்னில் உள்ள பூங்காவில் இந்திய மாணவர் நிதின் கார்க் அடித்துக்கொல்லப்பட்ட பின் இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இனவெறி அடிப்படையிலானது அல்ல என்றும், எனினும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களைக் கவனிப்பதற்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஆஸ்திரேலிய அரசு கூறியது.
இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் இரண்டு இந்திய வாலிபர்கள் சென்ட்ரல் மெல்பேர்ன் நகரில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
18 வயது மற்றும் 22 வயதான அந்த இரு மாணவர்களுக்கும் காது மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. கத்தியால் கீறியும் காயப்படுத்தியுள்ளனர்.
மெல்பேர்னில் நேற்றிரவு 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது என்பதை ஆஸ்திரேலிய பொலிசார் உறுதி செய்தாலும், இது இனவெறித் தாக்குதல் என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை எனக் கூறியுள்ளனர்.
இந்த வன்முறை தொடர்பாக எட்டு பேரை மெல்பேர்ன் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் ஆசியர்கள் போன்றே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட மாணவர் நிதின் கார்க் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் வீடியோ காட்சியை ஆஸ்திரேலிய பொலிசார் வெளியிட்டனர்.
சம்பவத்தன்று இரவு அவர் யாராவில்லி ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருவதும், அப்போது அவரை மர்ம மனிதன் கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடுவதும் இவ்வீடியோவில் பதிவாகியுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக