செய்தியறிக்கை
ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் |
ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் தொடர்பாக சர்வதேச கருத்தரங்கு
ஆப்கானின் எதிர்காலம் குறித்த ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது என்று அந்நாடு தொடர்பான ஒரு சர்வதேச கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டின் முடிவுக்குள் ஆப்கான் படையினரின் எண்ணிக்கை 3 லட்சம் அளவுக்கு உயர்த்தப்படும் என்று எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட லண்டன் மாநாட்டில் பிரவுன் கூறியுள்ளார்.
அங்கே கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இது செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
தாலிபான்களிடம் இருந்து போராளிகளை வெளியே இழுக்க முடியும் என்று தான் நம்புவதாக ஆப்கானிஸ்தானின் அதிபர் ஹமீத் கர்சாய் இந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அமைதி நடவடிக்கைகளில் சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா அவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட கர்சாய், ஆப்கானுக்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு சர்வதேச உதவிகள் தேவைப்படும் என்றும் கூறினார்.
முஜிபுர் ரஹ்மானை கொன்றவர்கள் தூக்கிலிடப்பட்டனர்
கொல்லப்பட்ட முஜிபுர் ரஹ்மான் |
தங்களின் மரண தண்டனையை குறைக்கக்கோரும் இவர்களின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகு, தாக்காவின் மத்திய சிறையில் இவர்கள் தூக்கிலிடப் பட்டார்கள்.
1975 ஆம் ஆண்டு நடந்த ராணுவ அதிரடி ஆட்சி மாற்றத்தின்போது ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களும் அவருடைய குடும்பத்தினர் பலரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்த ராணுவகிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு ஆரம்பத்தில் சட்டநடவடிக்கைகளிலிருந்து, வங்கதேசத்தின் ராணுவ தலைவர்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
முஜிபுர் ரஹ்மான் அவர்களின் உயிர் தப்பிய மகளான ஷேக் அசீனா அவர்கள் 1998 ஆம் ஆண்டு வங்கதேசத்தின் பிரதமர் பதவிக்கு வந்த பிறகு, அவரது தந்தையை கொன்றவர்களுக்கு எதிரான சட்டவிசாரணைகள் துவங்கின.
நேபாளத்தில் பெருமளவில் மின்வெட்டு அமல்
மின்வெட்டின் காரணமாக மெழுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் சிறார்கள் |
நேபாள அரசுக்கு சொந்தமான மின்விநியோக நிறுவனம் அந்த நாட்டில் ஒருநாளைக்கு பதினோறு மணிநேர மின்வெட்டை அறிவித்துள்ளது.
அந்நாட்டின் நீர்மின் நிலையங்களுக்கு தண்ணீரை விநியோகிக்கும் அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்த அளவில் இருப்பதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் மேலதிகமான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் பருவமழையில் தேவையான அளவுக்கு தண்ணீர் அணைகளுக்கு வரவில்லை என்றும், அதிகரித்துவரும் மின்சார தேவையும், கடந்த பத்தாண்டுகாலத்திற்கும் மேலாக நீடித்த மாவோயிய கிளர்ச்சி காரணமாக, மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு தேவையான முதலீடுகள் உரிய அளவில் செய்யப்படாமையும் இந்த மின்வெட்டுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
பிரிட்டனின் சூப்பர் மார்க்கெட்டுக்கு வருபவர்களுக்கு உடை தொடர்பில் கெடுபிடிகள்
உடை கெடுபிடிகள் தொடர்பான அறிவிப்பு |
வேல்சின் கார்டிபில் இருக்கும் டெஸ்கோ நிறுவனத்தின் அங்காடி ஒன்று, தனது வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஷூக்களை அணிந்து வர வேண்டும். பைஜாமாக்களை அணிந்து வரக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
ஆடை அணிவது குறித்து உறுதியான விதமுறை ஒன்றையும் தான் விதிக்கவில்லை என்றும் ஆனால் இரவு நேரங்களில் அணியும் உடைகளில் வாடிக்கையாளர்கள் சிலர் வந்தால் மற்ற வாடிக்கையாளர்கள் எரிச்சலடையக் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை என்று டெஸ்கோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்
மீண்டும் ஜனாதிபதியாகியுள்ள மஹிந்த ராஜபக்ஷ |
வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதவியேற்க மாட்டார் என்கிறார் அமைச்சர்
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பை உடனடியாக செய்து கொள்ள வேண்டிய அவசரம் இல்லை என்று அரசின் மூத்த அமைச்சரான ஜி எல் பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
பதவியேற்பதற்கு உரிய காலம் வரும் போது மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக மீண்டும் தேர்வாகியுள்ள மஹிந்த ராஜபக்ஷ எப்போது மீண்டும் பதவியேற்பார் என்கிற விடயம் இலங்கையில் வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
இதனிடையே தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஜெனரல் சரத் ஃபொன்சேகா மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இயக்குநரான லக்ஷ்மண் ஹுலுகல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கு பின்னர் வன்முறை
தேர்தலுக்கு பின்னர் வன்முறை தாக்குதலுக்கு உள்ளான ஒரு வாகனம் |
மட்டக்களப்பு மாநகர மேயர் அதிகாரபூர்வ இல்லத்தில் கைக்குண்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இதுவன்றி அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீதும் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதே போல ஓட்டமாவடி பகுதியிலும், காத்தான்குடி பகுதியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் இல்லங்கள் மீதும் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.
தேர்தலில் தோல்வியடைந்த பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் ஃபொன்சேகாவின் தேர்தல் முகவராக பணியாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவரது வியாபார நிறுவனம் ஏறாவூர் பகுதியில் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது.
இந்த சம்பவங்களுக்கு ஆளும் கட்சியே காரணம் என்று கூறப்படுவதை அவர்கள் மறுத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன
ஜனாதிபதி தேர்தல் வெற்றி சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த அடி என்கிறார் கருணா
அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் |
தோல்வியடைந்த வேட்பாளரான சரத் ஃபொன்சேகா மூலம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் பிரதேசங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்குகள் குறைவாக விழுந்துள்ளதையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.
தமிழ் பகுதிகளில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்குகள் குறைவாக விழுந்ததற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த "துரோகம்" காரணம் எனவும் அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கூறுகிறார்.
மேலும் இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கான வேலைத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்பதை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
மஹிந்தவின் வெற்றிக்கான காரணங்கள் என்ன-ஆய்வு
யுத்த வெற்றியே மஹிந்தவின் தேர்தல் வெற்றிக்கு காரணம்-ஆய்வாளர் கீத பொன்கலன் |
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவரது தலைமையிலான அரசு வெற்றி பெற்றது அவரது தேர்தல் வெற்றிக்கு ஒரு பிரதான காரணியாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார். அதுமட்டமல்லாமல் யுத்த வெற்றியின் காரணமாக எதிர் கட்சிகளுடைய வாக்குகளும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே வி பி யின் வாக்கு வங்கி பலவீனமாக இருப்பதன் காரணமாகவும் இந்த வெற்றி அவருக்கு கிட்டியுள்ளது என்று தான் கருதுவதாகவும் பேராதனை பல்கலைகழகத்தின் அரசியில் துறையின் தலைவரான பேராசிரியர் பொன்கலன் தெரிவிக்கிறார்.
பொதுவாக சிறுபான்மையினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக எடுக்கும் நிலைப்பாட்டையே இந்த முறையும் எடுத்துள்ளதாகவும், அதன் காரணமாகவே வடக்கு கிழக்கு பகுதியில் சரத் ஃபொன்சேகாவுக்கு கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
சரத் ஃபொன்சேகாவுக்கு கிடைத்த வாக்குகள் அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாகவும் கருத முடியும் என்றும் பேராசிரியர் பொன்கலன் கருத்து வெளியிடுகிறார்.
தற்போதைய சூழலில் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் செய்யப்படுவதற்கான அவசியம் இல்லை என அரசாங்கம் கருதவும் வாய்ப்பு இருக்கிறது எனறு தான் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்
அவரது ஆய்வை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக