மகிந்த ராஜபக்ச 12 வீத மேலதிக வாக்குகளால் அமோக வெற்றியீட்டுவார்!:புதிய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது!!
ஆர்.சிவகுருநாதன் (கொழும்பு)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச 12 வீதமான மேலதிக வாக்குகளால் அமோக வெற்றியீட்டுவார் என புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. பல்வேறு இந்திய அரசியல்வாதிகளுக்கு கடந்த காலங்களில் முக்கிய ஆலோசகர்களாக பணியாற்றியவர்களை உறுப்பினர்களை கொண்ட Viplav Communications Pvt Ltd என்ற நிறுவனம், ஜனவரி 6 – 13 வரை நாடு முழுவதும் 10,225 பேரிடம் மேற்கொண்ட ஒரு ஆய்விலேயே இந்த விபரம் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த காலங்களில் இந்தியாவில் பல்வேறு கணிப்பீடுகளை வெற்றிகரமாக செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் படி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களிலும், மகிந்த ராஜபக்சவே முன்னிலை வகிப்பதாக தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக தென் மாகாணம், வட மேல் மாகாணம், சப்ரமுகா மாகாணம் என்பனவற்றில் மகிந்தவுக்கு அமோக ஆதரவு காணப்படுகிறது. முஸ்லீம்கள் மத்தியிலும் சரத் பொன்சேகாவை விட மகிந்தவுக்கு சற்று கூடுதலான ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. மலையக பகுதிகளிலும் மகிந்தவுக்கு கூடுதலான ஆதரவு உள்ளது. கிராமப்புறங்களிலும், பெண்கள் மற்றும் சிங்கள பௌத்தர்கள், சிங்கள கிறீஸ்தவர்கள் மத்தியிலும் மகிந்தவுக்கே கூடுதலான ஆதரவு உள்ளமை இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சரத் பொன்சேகாவை பொறுத்தவரை, வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் அவருக்கு கூடுதலான ஆதரவு உள்ளதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. தென்னிலங்கையை பொறுத்தவரை, நகரப்புறங்களிலேயே அவருக்கு ஓரளவு ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.
சிறுபான்மை தேசிய இனமான தமிழர்களே, இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கப் போகிறார்கள் என சில அரசியல் அவதானிகளும், ஊடகங்களும் திரும்ப திரும்ப கூறி வரும் சூழலில், இந்த ஆய்வு பெரும்பான்மை சிங்கள மக்களே தேர்தலில் தீர்க்கமான சக்தியாக இருக்கப் போகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், இலங்கையின் முற்போக்கான சிங்கள – முஸ்லீம் - மலையக தமிழ் மக்களின் பிரதான அரசியல் ஓட்டத்துக்கு எதிராக, எப்பொழுதும் பிற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து வந்த தமிழ் தலைமைகள், இந்த தேர்தலிலும் அதே பழக்க தோசத்தால் பிற்போக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான அணியுடன் கைகோர்த்து. மீண்டும் ஒருமுறை வடக்கு – கிழக்கு தமிழர்களை நட்டாற்றில் பரிதவிக்க விட இருப்பதும், இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக