அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய தமிழக அரசு பரிந்துரை : அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை : அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் இருக்கும் 16 நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது . இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது : தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழக அரசு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் குறித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தேவையில்லை. நிகர்நிலை பல்கலை என்ற பெயரில் நிகரற்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டு, மத்திய மாநில அரசுகளை மதிக்காமல் அவை தன்னிச்சையாக செயல்படுகின்றன. எனவே நிகர்நிலை பல்கலைகழகங்களை ரத்து செய்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழக அரசு முழு ஆதரவு தெரிவிக்கிறது . ஆனால் இந்த முடிவு ஒரு சில நிகர் நிலைப் பல்கலைகழகங்களுக்கு மட்டும் என நின்று விடாமல், அனைத்து நிகர்நிலை பல்கலைகழகங்களுக்கான அதிகாரத்தையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பதே தமிழக அரசின் பரிந்துரை என்றார்.
மாணவர்கள் நலனுக்கு பாதுகாப்பு : தமிழகத்தில் தற்போது நிகர் நிலை பல்கலை.,யில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார். மாணவர்கள் எந்தப் பாடப்பிரிவில் பயில்கிறார்களோ அதே பாடப்பிரிவில் தங்கள் கல்வியை தொடர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களை சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றி அவை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதோடு அவ்வாறு செய்தால் தான் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர்கள் கட்டண விவகாரங்கள் அரசின் கட்டுக்குள் வரும் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக